விஸ்வரூபம் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 2 வார தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்து நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டு, படத்துக்கும் தடை விதித்தனர்.
மேலும் இது குறித்து வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி இறுதி விசாரணை நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
தீர்ப்பு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பேட்டியளித்த கமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில் தடை நீட்டிப்பு செய்யப்பட்டதால் இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம் – இது கமல் ரசிகர்கள்
கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று கமல் ரசிகர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற பொறுப்பாளர் வக்கீல் அழகர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “எங்கள் தலைவர் கமல்ஹாசன் எந்த மதத்தையும் சேராதவர். எங்கள் நற்பணி மன்றத்தில் எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும், எல்லா அரசியல் கட்சியினரும் உள்ளனர்.
கமல்ஹாசன் அதிக செலவில் விஸ்வருபம் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை சில முஸ்லிம்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த படத்தை பார்த்து பின்னர் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.
எங்கள் தலைவர் எங்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வது கிடையாது. எங்கள் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு உதவிதான் செய்து வருகிறோம். இன்று நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படம் குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற போவதாக கூறியுள்ளார்.
தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரசிகர்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு அவரது பின்னால் செல்வோம்.
அவரது உத்தரவுக்காக பொறுமை காத்து கொண்டு வருகிறோம். அவர் கட்டளையிட்டால், களம் இறங்க தயார்,” என்றனர்.
-OIT
Leave a comment