– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு
–கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் ஆரையம்பதி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சைக்கிள் விபத்தில் 69 வயது வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயவர்த்தன தெரிவித்தார்.
இவ்விபத்தில் உயரிழந்த 69வயது முதியவர் ஆரையம்பதி-காங்கேயனோடை பதுறியா வீதியைச் சேர்ந்த இப்றாலெப்பை முஹம்மது முஸ்தபா என மோட்டார் போக்குவரத்து பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
காங்கேயனோடையிலிருந்து ஆரையம்பதி பிரதான வீதி ஊடாக காத்தான்குடிக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியில் ஆரையம்பதி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக சென்ற மேற்படி வயோதிபருடன் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள்; மோதியதில்; இவ்விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் மோட்டார் போக்குவரத்து அதிகாரி ஜயவர்த்தன மேலும் தெரிவித்தார்.
ஈ.பி.8245 டி.வி.எஸ். மோட்டார் வண்டியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணமெனவும் இவ்விபத்தில் உயரிழந்தவரின் சடலம் (ஜனாஸா) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரீசோதனையின் பின் உயரிழந்தவரின் குடும்பத்துக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கா-குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இரண்டு ஆண் பிள்ளைகள் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையென்பதும் ஒரு மிட்டாய் வியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கா-குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a comment