தராதரம் பாராது சகலருக்கும் உலருணவு; இரு வாரங்களுக்கு வழங்க பணிப்பு
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 3 1/2 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் 78,246 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் மூன்றரை இலட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 15 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதுளை பகுதியிலிருந்து மகாவலி கங்கை ஊடாக நீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், உன்னிச்சை மற்றும் உறுகாமம் குளங்கள் நிரம்பி வழிவதாலும் மண்டூர், கல்முனை, சித்தாண்டி, வாகரை, திராய்க்கேணி உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
செங்கலடி மற்றும் வெல்லாவெளி பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நான்கு முகாம்கள் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. சேற்றுமுனை பகுதியிலுள்ள மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தொடர்ந்தும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதுடன் மாவட்டங்களிலுள்ள பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தராதரம் பாராமல் இரண்டு வாரங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறும், இரண்டு மாவட்ட மக்களின் நிவாரணப் பணிக்காக தேவையான நிதியை வேண்டியளவு பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 73,596 குடும்பங்களைச் சேர்ந்த 2,73,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 540 குடும்பங்களைச் சேர்ந்த 1944 பேர் 9 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் இறந்துள்ளதுடன் 58 வீடுகள் முழுமையாகவும் 38 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந் துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவேளை அம்பாறை மாவட்டத்தில் 1901 குடும்பங்களைச் சேர்ந்த 6867 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 135 குடும்பங்களைச் சேர்ந்த 593 பேர் 6 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். 19 வீடுகள் முழுமையாகவும் 129 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந் துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, காரைதீவு, கல்முனை, நிந்தவூர், அட்டா ளைச்சேனை, உகன பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கென உகனவில் இரண்டு முகாம்களும், அட்டாளைச்சேனையில் இரண்டு முகாம்களும், நிந்தவூரில் ஒன்றும், அக்கரைப்பற்றில் ஒன்றுமாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று இப்பகுதிகளில் மழை வீழ்ச்சி குறைவடைந்து வெய்யிலான காலநிலையாக இருந்தது. நேற்று மாலை சிலர் சொந்த இடங்களுக்கு திரும்பினர்.
– தினகரன்
Leave a comment