கல்வி முறைமையில் மாற்றங்கள் அவசியம்

* பல்கலை வாய்ப்பு கிட்டாதவர்களின் வாழ்வை ஒளிமயமாக்க விசேட திட்டம்

* சர்வதேச தரத்தில் கல்வியை பெற்றுக் கொடுப்பதே அரசின் நோக்கம்

mahindaபல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் 3 வீத மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மூன்று இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்கான விசேட திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

தற்போதைய கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது அவசியம் எனத் தெரிவித்த ஜனாதிபதி எமது கொள்கைகள் தேசிய மட்டத்திலன்றி சர்வதேச மட்டத்திலும் முன்னேறுவதற்குத் தேவையான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் தெரிவித்தார்.

பிள்ளைகள் விடயத்தில் பெற்றோருக்கு இருக்கவேண்டிய கரிசனையை வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள் படிப்பில் மட்டுமன்றி சமூகத்தோடும் சமயத்தோடும் நெருங்கிய உறவுகளை வைத்துக்கொள்ளும் வகையில் பிள்ளைகளை வழி நடத்துவது முக்கியமெனவும் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் முதலாம் ஆண்டிற்கு இவ்வருடம் இணைந்த மாணவர்கள் 25,000 பேருக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மத்துகம புனித மரியாள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் மேற்படி பாடசாலைக்கான நீச்சல் தடாகமும் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர்கள் குமார வெல்கம, பந்துல குணவர்தன, பிரதியமைச்சர்கள் நிர்மல கொத்தலாவல, ரோஹித அபே குணவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி;

மத்துகம பிரதேசத்திலேயே இலவசக் கல்வியின் பிதா என போற்றப்படும் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர பிறந்துள்ளார். அத்துடன் பெரும் கல்விமான்களை உருவாக்கிய மாவட்டமாக களுத்துறை மாவட்டம் விளங்குகிறது.

அரசாங்கம் பெருமளவு நிதியைக் கல்வித் துறைக்காகச் செலவிட்டு வருகிறது. இலவச பாடநூல், சீருடைகள் போன்றன வழங்கப்படுவதுடன் ஆயிரம் பாடசாலைகளை முன்னேற்றும் செயற்திட்டமும் அத்தோடு ஆயிரம் பாடசாலைகளில் ‘மஹிந்தோதய’ விஞ்ஞான கூடங்களை அமைக்கும் செயற் திட்டத்தையும் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகிறது.

இதற்கு மேலாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மேலும் சீருடை, பாதணிகளை வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடவேண்டும். பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் பட்டதாரிகளில் பெருமளவிலானோர் கலைப்பட்டதாரிகளாகவே உள்ளனர் என்பதை அரசியல்வாதிகள் பலரும் குறைபாடாகக் கூறுகின்றனர். இது எமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியதையே உணர்த்துகிறது.

வருடாந்தம் 3 இலட்சத்து 25,000 மாணவர்கள் பாடசாலைகளில் இணைகின்றனர். இவர்களில் சுமார் மூன்று வீதமானோரே பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்றனர். மீதமான மூன்று இலட்சம் பேரினதும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டே நாம் தொழில்நுட்ப பிரிவுகளைப் பாடசாலைகளில் ஏற்படுத்தி வருகிறோம். சுற்றுலாத்துறை, வர்த்தகத்துறை மற்றும் தொழில் நுட்பத்துறைகளில் அவர்கள் தம்மை இணைத்துக்கொள்வதற்கு இதன் மூலம் வழிசமைக்கப்பட்டுள்ளது.

முன்பு தொழில்நுட்பக் கல்லூரிக்கு வருடாந்தம் 250 அல்லது 300 பேரே வருகை தருவர். இவ்வருடத்தில் 45, 000 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளமை எமது செயற்திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

தொழில் நுட்பக் கல்வியைப் போன்றே எமது மாணவர்கள் ஏனைய சர்வதேச மொழிகளையும் கற்பது அவசியம். அதற்கு அவர்கள் பிரவேசிப்பதற்கான திட்டங்களையே நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எமது இளைய சந்ததியினரின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அவர்கள் நாட்டை நேசிப்பவர்களாகவும் நல்லொழுக்கம் மிக்கவர்களாகவும் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் நற் பிரஜைகளாகவும் உருவாக வேண்டும். அதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில் மத்துகமயில் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்காக மூன்று பஸ் வண்டிகள் ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டன.

-தினகரன்

Published by

Leave a comment