இலங்கையில் சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களால், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளதாக அவரைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
”புது பல சேனா” என்னும் அமைப்பினால் இவ்வாறாக இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம்களின் வணிகங்கள் உட்பட நலன்களுக்கும் எதிராக தவறான பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் இலங்கை ஜனாதிபதியிடம் புகார் செய்துள்ளனர்.
அவை குறித்த தனது கருத்தை தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்த விடயங்கள் குறித்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அந்த அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்ததாக அந்த சந்திப்பில் கலந்துகொண்ட துணை அமைச்சரான எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக இனிமேல் நடக்கக்கூடிய பாதக நடவடிக்கைகளை தடுப்பதற்காக தான் பொலிஸாருக்கு உத்தாவிடுவதாகவும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார்.
அப்படியான நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுப்பதற்காக அவை குறித்து ஆராய ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதுடன், மாவட்ட மட்டத்தில் பல் சமூக பிரமுகர்கள் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார்.
-BBC
Leave a comment