உயிரிழந்த மருத்துவ மாணவியின் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின

73 % மதிப் பெண்கள், செலுத்திய பணத்தை திருப்பிக் கொடுக்க கல்லூரி முடிவு

புதுடில்லியில் கடந்த மாதம் 16ம் திகதி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட டில்லி மாணவி 29ம் திகதி சிங்கப்பூரில் மரணம் அடைந்தார். டேராடூனில் உள்ள மருத்துவ கல்லூரியில் ‘பிசியோதெரபி’ படித்து வந்த அம் மாணவி, இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதிவிட்டு, இயல்முறை கல்விக்காக புதுடில்லி வந்திருந்த போதுதான் அவர் பஸ்ஸில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்த இந்த கற்பழிப்பு சம்பவம் நடைபெற்று முடிந்த ஒரு மாதம் கழித்து, அந்த மாணவியின் 4ம் (இறுதி) ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன. மொத்தம் உள்ள 6 பாடப் பிரிவுகளில் 73 சதவீதம் மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 4 ஆண்டு படிப்புக்கு எங்கள் கல்லூரிக்கு அவர் கட்டணமாக செலுத்தியுள்ள ரூ 1 இலட்சத்து 40 ஆயிரத்தை அவரது பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கல்லூரியின் நிர்வாகி அரோரா கூறினார்.

-தினகரன்

Published by

Leave a comment