65ஆவது தேசிய சுதந்திர தின விழா திருமலையில்

ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

trincoஇலங்கையின் 65ஆவது தேசிய சுதந்திர தின விழா பெப்ரவரி 04ஆம் திகதி திருகோணமலை பெட்ரிக் கோட்டை வீதி திடலில் நடைபெறும்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த தேசிய விழாவில், பிரதமர் தி. மு. ஜயரத்ன, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 2500க்கும் அதிகமான அரச பிரமுகர்கள் கலந்துக் கொள்வர்.

இலங்கை முப்படைகளைச் சேர்ந்த சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்களின் அணிவகுப்பும் இடம் பெறும். இந்த அணிவகுப்பு மரியாதையில் இலங்கை இராணுவப்படையைச் சேர்ந்த 1400 பேரும், கடற்படையைச் சேர்ந்த 250 பேரும் ,விமாப்படையைச் சேர்ந்த 250பேரும், சிவில் பாதுகாப்புப் படையைச்சேர்ந்த 250 பேரும், இளைஞர் படையணியைச் சேர்ந்த 300 பேரும், தேசிய மாணவப்பேரணியைச் சேர்ந்த 325 பேரும் இதில் பங்கு பற்றுவர்.

‘வியக்கத்தகு நாடு-வளமிகு நாளை” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த தேசிய சுதந்திர விழா, சுமார் அறுபது வருட கால இடைவெளியின் பின்னர் திருகோணமலையில் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் தீவிரவாத யுத்தம் நடைபெற்ற ஒரு மாவட்டத்தில் இன்று மிகவும் சுதந்திரமாக இந்த விழா இங்கு நடத்தப்படுவது குறித்தும் தாம் பெருமகிழ்ச்சியடைவதாகவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

இலங்கையின் 65ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டின் போது இலங்கையின் 65ஆவது தேசிய சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஜோன் செனவிரத்ன செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கும் போதே மேற்படி தகவல்களை தெரிவித்தார்.

இங்கு அமைச்சர் ஜோன் செனவிரத்ன மேலும் தகவல் தருகையில் கூறியதாவது – சுதந்திர இலங்கையின் சுதந்திர தின விழா 1953ஆம் ஆண்டிலேயே முதற்தடவையாக திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.

அதனையடுத்து காமினி பொன்சேகா ஆளுநராக இருந்த காலகட்டத்தில், 1998ஆம் ஆண்டு பிரதேச ரீதியாக சுதந்திர தின விழா இங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி தீவிரவாதிகளின் யுத்தம் முடிவுக்குக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இம்முறை தேசிய சுதந்திர தின விழா திருகோணமலையில் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

கொழும்பு மாநகரில் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த இந்த சுதந்திர தின விழாவை வெளி மாவட்டத்திலுள்ள மக்களும் கண்டு களிக்க வேண்டும் என்ற நன்நோக்கில் ஜனாதிபதி முதன் முதலாக கண்டி மாவட்டத்தில் இந்த தேசிய விழாவை நடத்தினார்.

அதன்படியே இம்முறை தேசிய சுதந்திர தின விழா பெப்ரவரி 04ம் திகதி திருகோணமலையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட 170 வெளிநாட்டுப்பிரதிநிதிகள் கலந்துக்கொள்வார்கள் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அவ்வாறே வலது குறைந்த இராணுவத்தினர் 55பேருக்கும் இவ்விழாவின்போது ஆசனங்கள் ஒதுக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட 16 சிறந்த கலாசார நிகழ்ச்சிகளும் இவ்விழாவை அலங்கரிக்கவுள்ளன.

அத்துடன் வெளி மாவட்டத்திலுள்ள மாணவ மாணவியருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இம்முறை திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவ மாணவியர்கள் 100 பேர் அடங்கிய குழுவினரே தேசிய கீதத்தை இசைக்க உள்ளனர்.

இந்த விழாவை முன்னிட்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டமே தற்சமயம் விழாக்கோலம் பூண்டுள்ளது என்றும் புதுப்பொழிவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சின் செயலாளர் பீ. பீ.அபேகோனும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துக்களை தெரிவித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment