சந்தேக நபர்களை பொலிஸில் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வது தொடர்பான குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளினால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த வருடம் அக்டோபர் 11 ஆம் திகதி நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி சட்டமூலம் மீதான விவாதம் நேற்று முழுநாளும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
விவாத முடிவில் நேற்று மாலை 6.15 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றதோடு, சட்டமூலத்திற்கு ஆதரவாக 110 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் வழங்கப்பட்டன. ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி எம்.பி.க்கள் ஆதர வாக வாக்களித்ததோடு ஐ. தே. க., தமிழ் தேசிய கூட்ட மைப்பு, ஜனநாயக தேசிய முன்னணி என்பன எதிராக வாக்களித்தன.
பிடியாணையின்றி கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கும் குறித்த சில வழக்குகள் தொடர்பில் குறித்த முறையற்ற வழக்கு விசாரணை நடத்துவதைத் தவிர்க்கவும் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தல், ஒருவரை மறைத்து வைத்தல், பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், மரணத்தை ஏற்படுத்தி விட்டுச் செய்யும் திருட்டு, மரணம் அல்லது படுகாயம் விளைவிக்கும் வகையான கொள்ளை, ஆயுதம் தாங்கிய படுகொலை முயற்சி, வெடிபொருள் அல்லது தீங்கு விளைவிக்கும் ஆயுதம் தாங்கி செய்யும் தவறு அடங்கலான 15 வகை குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களே 48 மணி நேரம் வரை தடுத்து வைக்க அனுமதிக்கப்படுவர். சாதாரண குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் இதில் உள்ளடக்கப்படமாட்டார்கள். சந்தேக நபர் ஒருவரை 48 மணி நேரம் தடுத்து வைப்பதானால் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவி வரிசைக்குக் குறையாத பொலிஸ் அலுவலகரின் அனுமதியுடன் நீதவானின் (மாஜிஸ்திரேட்) அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.
சாட்சிகளின் சத்தியக் கடதாசியை சாட்சியமாக ஏற்கவும் ஏற்ற வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதோடு, எதிர்த்தரப்பு சார்பில் ஜோன் அமரதுங்க எம்.பி. விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். ஐ.தே.க., த.தே.கூ., ஜனநாயக தேசிய முன்னணி எம்.பிக்கள் சட்ட மூலத்திற்கு எதிராக உரையாற்றியதோடு ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
கொலை, கொலையாகாத குற்றமுடைய மரணம், கொலை முயற்சி, கொலை புரிவதற்காக ஆட்கடத்தல், தவறான நோக்கத்திற்காக கடத்துதல், முறைகேடாக தடுத்து வைக்கப்படும் சந்தேக நபருக்கு சட்டத்தரணியுடன் கலந்தாலோசிக்கவோ உறவினர் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவோ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
புதிய சட்டத் திருத்தத்தின் பிரகாரம் மோசமான சூழ்நிலைகளில் புரியப்படும் குற்றச் செயல்களின் போது சுருக்க முறையற்ற விசாரணையின்றி நேரடியாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர
சட்ட மாஅதிபருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இத்தகைய வழக்கு விசாரணைகள் 90 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
சாட்சி ஒருவரின் ஆரம்ப சாட்சியத்தில் புதிதாக சாட்சியங்களை சேர்க்கவோ திருத்தவோ வழக்கு விசாரணையின் போது நீதவானுக்கு அனுமதி வழங்க முடியும். சாட்சி ஒருவரின் சத்தியக் கடதாசியையும் சாட்சியமாக ஏற்க அனுமதிக்கப்படும். சந்தேக நபர் தலைமறைவாக இருக்கையிலோ நாட்டைவிட்டு சென்றிருக்கையிலோ சுகவீனமுற்று நீதிமன்றம் வரமுடியாத நிலையிலோ சந்தேக நபரின்றி நீதவானுக்கு வழக்கு விசாரணையை தொடர முடியும்.
சாட்சிகள் சார்பாக சட்டத்தரணி ஒருவரை நிறுத்த முடியும். இந்த சட்ட மூலம் இரு வருட காலமே செல்லுபடியாகும். தேவையாயின் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் வழக்கு விசாரணைக்கான கால தாமதம் குறைவடையும்.
– தினகரன்
Leave a comment