செப்டெம்பர் முதல் மீண்டும் யாழ்.தேவி

yal_devi_200_150[1]யாழ்ப்பாணத்திற்கு யாழ். தேவி ரயில் செப்டெம்பர் மாதமளவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அதற்கான வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உதவித்தூதுவர் எஸ். மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். இந்திய தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- இந்திய அரசாங்கத்தினால் யாழில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ரயில்பாதை அமைப்புப் பணிகளில் இந்திய அரசு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகின்றது. யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி இந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் வரும். அதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

class-m4-yaal-devi[1]

1983 ல் கோண்டாவில் ரயில் நிலையத்தை நோக்கிவரும் யாழ் தேவி.

காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை வரையான ரயில்பாதை அமைக்கும் பணிகள் முழுமையடையும் நிலையில் உள்ளன. அத்தோடு யாழ். பாலாலி விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

850 மீற்றர் ஓடுபாதையினை இந்திய அரசு புனரமைத்துள்ளது. காங்கேசன்துறை துறைமுகப்பணிகளின் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகப்பாவனையானது பொதுமக்களின் வணிக போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

காங்கேசன்துறை முகத்திலிருந்து தூத்துக்குடிக்கான கப்பல் போக்குவரத்து நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்திய அரசு அமைதியான வழியில் ராஜதந்திரங்களை மேற்கொண்டு வருகின்றது .

யாழில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் முக்கிய நோக்கமாகும். அதற்காக கல்விக்கான பல புலமைப்பரிசில்களை அறிமுகப்படுத்தவுள்ளது எனவும் இந்திய உதவித்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment