பிரித்தாணியர்-ஆங்கிலேயர் என்றால் மக்கள் மத்தியில் தொழிநுட்பம் ஞாபகத்திற்கு வரும். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் பல விஞ்ஞானிகளையும் தொழிநுட்பங்களையும் கொண்டிருந்த பிரித்தாணியாவின் தன்னிகரில்லா தொழிநுட்பங்களில் ஒன்றுதான் புகையிரத கண்டுபிடிப்புக்களும் அதன் சேவைகளுமாகும்.
புகையிரத சேவைகளுள் மிக முக்கியமாக நிலத்திற்குக் கீழ் செல்லும் (Underground/Tube) சேவைகள் இன்றியமையாதவை. உலக மக்களின் கற்பனைக்கு அப்பால் தனித்து நின்று இத்தகைய சுரங்கப் பாதையினை நிலத்திற்குக் கீழ் அமைத்து அவற்றை சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தியதில் ஆங்கிலேயருக்கு ஆங்கிலேயரே நிகர்!
கி.பி. 1850 ஆம் ஆண்டுகளிலிருந்து பிரித்தாணியாவின் தலைநகர் லண்டன் நகருக்குள் இத்தகைய நிலத்தின் கீழ் அமையும் (Tube) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு வந்தன. ஜனவரி 10, 1863ல் முதலாவது ஆரம்ப சேவை இடம்பெற்றது. இன்றைய நாட்களுடன் 150 வருடங்களைத் தாண்டிய ஓர் ஆச்சரிய வெற்றிப்பயணத்தில் லண்டன் டியூப் புகையிரத சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இவ்வாறான சுரங்க ரயில் பாதைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அட்லாண்டிக் எவினியூ டனல் எனப்படும் சுரங்க ரயில் சேவையே உலகில் புராதன சேவையாகக் கருதப்படுகின்றன.
லண்டனில் தினமும் 3.66 மில்லியன் மக்கள் இத்தகைய சுரங்கப்பாதை ஊடாக பயணிக்கின்றனர். மொத்தம் 402 கி.மீ. தூரத்தைக் கொண்டமைந்த லண்டன் டியூப் சேவை 11 பிரிவுகளாக (Lines) அமைக்கப்பட்டிருக்கின்றன. சுரங்க நிலையங்கள் மாத்திரம் 207 இருக்கின்றன. நில மட்டத்திலிருந்து சுமார் 200 அடி வரைக்கும் இதன் ஆழம் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் கச்சிதமாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட இத்தகைய சுரங்க ரயில்பாதைகள், நவீன கட்டிடங்கள், பாதைகள், பாலங்கள், வீட்டுத்தொகுதிகளுக்குக் கீழ் எவ்வித பாதிப்புக்களும் தங்கு தடைகளுமின்றி இயங்கிவருவது ஓர் சிறப்பம்சம் மாத்திரமன்றி அதிசயமும் கூட!
உலக நகரங்களில் அன்றாடம் எதிர்நோக்கும் நீண்ட வாகண நெரிசல்களில் இருந்து விடுபட்டு விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப நிமிடங்களில் பல மைல்களை சங்கடமின்றி கடந்து செல்ல இத்தகைய சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்துக்கள் இன்றியமையாதவை.
உலகில் ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய சுரங்க ரயில்பாதைகள் இருக்கின்றன.
இதனைவிடவும் யூரோ ஸ்டார் எனப்படும் விசேட சேவையும் லண்டன்-பரீஸ்-பிரஸ்ஸல்ஸ் நகரங்களுக்கிடையில் இருந்து வருகின்றன. இங்கிலாந்து-பிரானஸ்-பெல்ஜியம் நாடுகளை இணைத்து, இங்கிலாந்து-பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பிரிக்கும் ஆங்கிலக் கால்வாயின் கீழ் சுமார் 21 மைல் நீளத்திற்கு கடலுக்கு அடியில் பயணிக்கும் கடல் சுரங்க சேவையும் ஆச்சரியமானதே!
![london-underground-logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/london-underground-logo1.png?w=150&h=121)
Leave a comment