ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவின் செயலாளர் விளக்கம்
ஹலால் சான்றிதழ்கள் வழங்கும் விடயங்களில் எந்தவிதமான இரகசியங்களோ, ஒழிவுமறைவுகளோ கிடையாது. இது தொடர்பிலான சகல விடயங்களும் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பிரிவின் செயலாளர் மெளலவி முர்ஷித் முலப்பர் தெரிவித்தார்.
ஹலால் அத்தாட்சி சான்றிதழ்கள் வழங்குவதன் மூலம் வருடாந்தம் 15 இலட்சமும் ரூபாவே கிடைக்கப்பெறுவதாகத் தெரிவித்த அவர் இதில் சான்றிதழ் வழங்குவதற்கான செயற்பாடுகளுக்கு 13 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.
உண்மை நிலை தெரியாத பலர் ஹலால் சான்றிதழுக்காக வருடாந்தம் நிறுவனமொன்றிடமிருந்து ஒரு இலட் சத்து 75 ஆயிரம் ரூபாவை அறவிடுவதாகவும் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்குவதாகவும் கூறிவருகின்றனர்.
அவ்வாறு கூறப்படுகின்ற எந்தவொரு செய்தியிலும் உண்மை கிடையாது. அவற்றை முற்றாக தாங்கள் மறுப்பதாக தெரிவித்த அவர் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டிய எந்த ஒரு தேவையும் பொறுப்புவாய்ந்த அமைப்பான ஜம்இய்யத்துல் உலமாவுக்குக் கிடையாது என்று சுட்டிக்காட்டினார்.
ஹலால் விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு மாளிகாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது.
நல்லிணக்க அறிவுறுத்தல் சம்பந்தமான தேசிய மாநாட்டின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் எம். எச். முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவின் செயலாளர் மெளலவி முர்ஷித் முலப்பர் மேலும் விளக்கமளிக்கை யில்:-
ஹலால் என்ற அறபி வார்த்தைக்கு அனுமதிக்கப்பட்டது. அல்லது ஆகுமாக்கப்பட்டது என்பதாகும். ஹலால் என்பது உணவுடன் மாத்திரம் தொடர்பு பட்டதல்ல.
முஸ்லிம்களை பொறுத்த மட்டில் அன்றாட வாழ்க்கையில் எல்லா விடயங்களுடனும் தொடர்புபட்டவையாகும். இதனைத் தெரியாத பலர் இணைய தளங்களிலும், ஊடகங்களிலும், சமூக வலை பின்னல்களிலும் மிகவும் கீழ் தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கின்றனர் என்றார்.
தமது உற்பத்தி செயற்பாட்டிற்கு ஹலால் சான்றிதழ் தேவை என எம்மிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு அவர்களது உற்பத்திச் செயற்பாட்டை கண்காணிப்பதற்காக விரும்பம் தெரிவிக்கும் உற்பத்திப் பொருட்களுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இது தவிர ஹலால் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறு எவரையும் நாங்கள் நிர்ப்பந்திக்கவோ கட்டாயப்படுத்தவோ எமக்கு எந்தவிதத் தேவையும் இல்லை. அதற்கான அதிகாரமும் கிடையாது.
நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது 200 நிறுவனங்களில் சுமார் நான்காயிரம் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ஹலால் பிரிவின் முறைப்பாடு களுக்கு பொறுப்பான நபீஸ் நிஸாம் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் ஹலால் பிரிவின் விசேட அறிக்கை ஒன்றும் ஊடகங்களுக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது.
தேசிய ஐக்கியத்திற்கான சர்வமதங்கள் கூட்டமைப்பின் இணைத் தலைவர்களான கலகம தம்ம ரம்ங் தேரர், கலாநிதி ஹஸன் மெளலானா, மெளலவி ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர், ஜம்இய்யத்துல் உலமா உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம் தாஸிம், சகோதரர் எம்.எம். ஏ. தஹ்லான் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Leave a comment