மூதூரைச் சேர்ந்த பணிப்பெண் ரிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையானது இலங்கை மக்களை மட்டுமன்றி மனிதாபிமானமுள்ள முழு உலக மக்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
2005 ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது, அவர் விடுலையடையக் கூடிய சாத்தியங்களே அதிகம் என்றே பலராலும் நம்பப்பட்டது. ரிஸானாவை குறித்த தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தமையே இந்த நம்பிக்கைக்குக் காரணமாகும்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட ரிஸானா விடுலையாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என இலங்கைக்கான சவூதி தூதுவர் நம்நாட்டு நீதியமைச்சரிடம் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் அத்தனை நம்பிக்கைகளும் இன்று வீண் போகிவிட்டன.
ரிஸானாவின் மறைவானது இன்று தேசிய, சர்வதேசிய ரீதியில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருப்பதுடன் இலங்கைப் பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்துமளவுக்கு முக்கியத்துவமும் பெற்றிருக்கிறது.
சவூதி அரேபியாவில் நடைமுறையிலுள்ள ‘ஷரீஆ’ சட்டத்தின் அடிப்படையிலேயே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற பிழையான தோற்றப்பாடு துரதிஷ்டவசமாக இங்கு ஏற்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் மீதான காரசாரமான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன. ஆனால் உண்மையில், முழுமையான மற்றும் நீதியான இஸ்லாமிய சட்ட வழிமுறைகளன்றி சவூதி நாட்டில் நடைமுறையிலுள்ள பாரபட்சமான, வெளிப்படைத் தன்மையற்ற சட்ட வழிமுறைகளின் காரணமாகவே ரிஸானா நபீக்கிற்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.
ரிஸானா மீதான குற்றச்சாட்டை விசாரித்து தண்டனையை உறுதி செய்வதில் சவூதி அரேபிய நீதித்துறை தவறிழைத்திருக்கின்றது என்பது உறுதியாகத் தெரிகிறது. ரிஸானா கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது வரை பொது நீதியினதும், இஸ்லாமிய சரீஆ சட்டங்களினதும் அடிப்படையாக கருதப்படுகின்ற ‘நியாயமான நடைமுறைகள்’ (Due process) பின்பற்றப்படவில்லை என்பது வெளிப்படையாகும்.
எந்தவொரு குற்றத்தையும் விசாரித்து தீர்ப்பளிக்கும்போது அதனுடன் சம்பந்தப்படும் சகலரையும் நீதியாகவும் நியாயமாகவும் நடாத்துமாறும், அல்லது நடந்து கொள்ளுமாறும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது தரப்பு நியாயங்களை எவ்வித அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடிய முழுமையான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதும், குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு நம்பகமான முழுமையான ஆதாரங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்றும் இஸ்லாம் ஏவுகிறது. இதனையே உலகின் பொது நீதி வழிமுறைகளும் வலியுறுத்துகின்றன. அதுபோலவே குற்றம் எவ்வாறான சூழ்நிலையில் நடந்திருக்கிறது என்பதுவும் அது வேண்டுமென்றே திட்டமிட்ட ஒன்றா அல்லது தற்செயலாக – விபத்தாக நடந்ததொன்றா என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆராயப்படவேண்டும் என்பதுவும் இஸ்லாமிய சட்டங்களினதும் உலக பொது நீதியினதும் அடிப்படை விதிகளாகும். ஆனால் ரிஸானா விடயத்தில் அவ்வாறு நீதியும் நியாயமுமான நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை என்பதற்கு பல சான்றுகளை முன்வைக்க முடியும்.
-
நான்கு மாத குழந்தை ஒன்றுக்கு புட்டிப்பால் ஊட்டுவதற்கான அனுபவமோ தகைமையோ இல்லாத ஒருவரிடம் தமது குழந்தையை ஒப்படைத்துவிட்டுச் சென்றது குறித்த குழந்தையின் பெற்றோரது தவறும் கவனயீனமுமாகும். ஏனெனில் ரிஸானா குழந்தையைப் பராமரிப்பதற்கான எந்தவித பயிற்றுவிப்புக்களையும் பெற்றிருக்கவில்லை. அத்துடன் அவள் வீட்டுப் பணிப்பெண்ணாக (Housemaid) அங்கு சென்றாளே தவிர குழந்தை பராமரிப்பாளராக (Child Care worker) செல்லவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
-
இது கொலையா அல்லது விபத்தா? அல்லது தற்செயல் நிகழ்வா என்பதை உறுதி செய்வது மருத்துவ அறிக்கையேயாகும். ஆனால் இங்கு குறித்த குழந்தையின் மரணம் தொடர்பில் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை என்பதும் அந்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இதுவரை வெளியாகிய பல அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
-
தன்னை அச்சுறுத்தியும் துன்புறுத்தியுமே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்பதனை ரிஸானா எழுதிய கடிதம் ஒன்று உறுதிப்படுத்துகிறது. இஸ்லாமிய சட்டமோ அல்லது ஏனைய சட்டங்களோ இவ்வாறு அச்சுறுத்தியோ துன்புறுத்தியோ வாக்குமூலம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவ்வாறு பெறப்படும் குற்ற ஒப்புதல்கள், குற்றத்தை நிரூபிப்பதற்கான சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை.
-
ரிஸானா அறபு மொழியில் பரிச்சயமோ அனுபவமோ இல்லாவர் என்றவகையில் அவரது கருத்துக்களை மொழிபெயர்ப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் எவரையும் அந்நாட்டு நீதித்துறை நியமிக்கவில்லை. செம்மறி ஆடு மேய்க்கும் கேரளாவைச் சேர்ந்த சாதாரண தொழிலாளி ஒருவரே ரிஸானாவின் வாக்குமூலத்தை ஆரம்ப விசாரணையின்போது மொழியெர்த்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
விபரமறியாத வயதில் தனக்கு முற்றிலும் அந்நியமான ஒரு சூழலில் பாரிய கொலைக் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொண்டிருந்த றிஸானாவுக்கு தமது பக்க நியாயங்களையும் வாதங்களையும் ஆரம்பம் தொட்டே முன் வைப்பதற்கான சட்ட உதவிகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
-
சம்பவம் நடந்த சூழலில் நேரில் கண்ட சாட்சியாக எவருமே இல்லாத நிலையிலும் பிரேதப் பரிசோதனை தொடர்பான அறிக்கைகள் எதுவும் இல்லாத நிலையிலும் அச்சுறுத்தல் மூலம் றிஸானாவிடம் பெறப்பட்ட வாக்கு மூலம் மாத்திரமே மரண தண்டனைக்கு அடிப்படையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மரணம் எப்படி நிகழ்ந்தது அதற்குக் காரணம் யார்? அல்லது எது? என்கின்ற சந்தேகம் இவ்வழக்கில் மிக அடிப்படையாக இருந்தது. எனவே சந்தேகத்தின் அனுகூலம் (Benefit of the doubt) குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பொதுவான சட்டவிதி இங்கு தெளிவாகவே மீறப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
ஆக, முழுக்க முழுக்க உலக நீதி ஒழுங்குகளுக்கும் இஸ்லாமிய நீதி ஒழுங்குகளுக்கும் முரணாகவே றிஸானாவின் கொலைக்குற்ற வழக்கில் சவூதி அரேபிய நீதித்துறை நடந்துகொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே இங்கு விமர்சிக்கப்படவேண்டியதும் கண்டிக்கப்படவேண்டியதும் சவூதி நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிழையான நீதி மற்றும் விசாரணை வழிமுறைகளேயன்றி இஸ்லாமிய ‘ஷரீஆ’ சட்ட ஒழுங்கு முறைகள் அல்ல.
உண்மையில் தமது நாட்டில் ‘ஷரீஆ’ சட்டத்தை அமுல்படுத்துவதாகக் கூறும் சவூதி அரேபியா தனது தேவைக்கேற்ப இஸ்லாமிய சட்ட ஒழுங்குகளை பயன்படுத்திக் கொள்கிறது என்பது நாம் கவனிக்கத் தவறும் உண்மையாகும்.
வயதுக்கு வந்த பெண்கள் ஆண் துணையின்றி (மஹ்ரம்) பயணிப்பதை இஸ்லாமிய ‘ஷரீஆ’ தடைசெய்துள்ளது. அவ்வாறான நிலையில் மஹ்ரமியல்லாத பணிப்பெண்களை வேறு நாடுகளிலிருந்து தருவித்து தமது நாட்டிலுள்ள வீடுகளில் பணியாற்ற அனுமதிப்பதனை ஒருபோதும் இஸ்லாமிய ஷரீஆவின் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்த முடியாது.
மஹ்ரமியான ஆண்களின் துணையின்றி ஹஜ் கடமைக்காக வந்த சுமார் 400 நைஜீரியப் பெண்களை கடந்த ஹஜ்ஜின்போது திருப்பியனுப்பிய வரலாற்றைக் கொண்ட சவூதி அரேபியா தமது வீடுகளில் வீட்டுப் பணிப் பெண்களை நியமிக்கும் விடயத்தில் மாத்திரம் ‘ஷரீஆ’ விதிகளைக் கண்டுகொள்ளாதிருப்பது ஏன்? கொலைகளுக்கு தண்டனை கொடுப்பற்கு மாத்திரம் ‘ஷரீஆ’ சட்டத்தைப் பயன்படும் சவூதி, மஹ்ரமி விடயத்தில் மாத்திரம் அதனைப் புறந்தள்ளலாமா? எனவே இஸ்லாமிய சட்டங்கள் என்ற போர்வையில் தமக்கு சாதகமான பாரபட்சமான நடைமுறைகளையே சவூதி அமுல்படுத்தப்படுகிறது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
துரதிஷ்டவசமாக இன்று ரிஸானாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதன் மூலமாக சவூதி அரேபியா தனது நாட்டிற்கும் இஸ்லாத்துக்கும் பெரும் இழுக்கைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளதுடன் ரிஸானாவின் விடுதலைக்காக ஏங்கிய ஒட்டுமொத்த உலக மக்களையும் ஏமாற்றத்திலும் விரக்தியிலுமே ஆழ்த்தியுள்ளது. சமத்துவத்தினையும், பொது நீதியினையும் தனது அடி நாதமாக வலியுறுத்துகின்ற இஸ்லாம் ஒரு போதும் இதுபோன்ற பாரபட்சமான தர்மத்திற்கு முரணான நீதி நடைமுறைகளையும் தண்டனைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதனையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை ரிஸானா விவகாரத்தில் எவ்வாறு சவூதி அரேபியா அநீதியழைத்துள்ளதோ அதேபோன்று இலங்கை அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் தமது கடமைகளை பொறுப்புடன் செய்யவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்றே.
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விடயத்தில் தனது அடிப்படை கடமைகளைச் செய்வதற்குக்கூட அக்கறைகாட்டவில்லை என்பது கண்டிக்கப்படவேண்டிய நியாயமான குற்றச்சாட் டாகும்.
தமது நாட்டுப் பிரஜை ஒருவர் சிறைவைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சேம நலன்களை முழுமையாக கவனிக்க வேண்டிய பொறுப்பு அந்நாட்டின் தூதுவராலயத்திற்கே இருக்கிறது. அக்கடமையினை இலங்கை தூதுவராலய பிரதிநிதிகள் முழு அக்கரையுடனும் நிறைவேற்றவில்லை என்று உணர முடிகிறது.
றிஸானா வைத்திருந்த கடவுச்சீட்டின்படி குற்றம் நடந்த தருணத்தில் அவருடைய வயது 21 என்பதன் அடிப்படையிலேயே றிஸானா மீதான மரண தண்டனைத் தீர்ப்பு தவிர்க்க முடியாமல் போனதாக தற்போது சவூதி நாட்டின் உத்தியோக பூர்வ பேச்சாளர் ஒருவர் தெரிவித்து இதனை நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறார். ஆனால் றிஸானா நீதி மன்ற வழக்குகளின்போது தனது உண்மையான வயது அதுவல்லவென்றும் தான் உண்மையில் அப்போது பதினேழு வயதைக் கொண்ட ஒரு சிறுமியே எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவரின் உண்மையான வயதை நரூபிப்பதற்கான சட்டபூர்வ ஆவணங்களை ஏன் நம் நாட்டு தூதுவராலய அதிகாரிகள் நீதி மன்றத்திற்கு சமர்ப்பித்து இவரைக் காப்பாற்றவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
அதுபோலவே இலங்கையுடன் நட்புறவைக் கொண்டுள்ள நாடான சவூதி நாட்டு அதிகாரிகள் ஏன் தமது தூதுவராலய தொடர்புகளைப் பயன்படுத்தி றிஸானாவின் உண்மையான வயதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை யென்பதும் இங்கு கேட்கப்படவேண்டிய ஒன்றாகும்.
இந்தப் பின்னணியில் பார்க்கின்றபோது றிஸானா தொடர்பில் கடமையுடைய நம்நாட்டு மற்றும் சவூதி நாட்டு அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்வதில் பொடுபோக்காக இருந்ததன் காரணமாகவே இன்று ஒரு ஏழை யுவதியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்றே நாம் கொள்ள முடியும்.
ரிஸானா போன்றவர்களின் உழைப்பின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதில் அரசாங்கம் காட்டுகின்ற அக்கறையை அவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்தோ தண்டனைகளிலிருந்தோ பாதுகாப்பதில் காட்டுவதில்லை. றிஸானாவின் நலன்களை தொடர்ச்சியாகக் கவனிக்கின்ற ஒருவராக டாக்டர் கிபாயா இப்திகார் தன்னார்வ அடிப்படையில் செயற்பட்டார். ஆனால் இந்தக் கடமையினை செய்திருக்க வேண்டியது எமது அரசாங்கப் பிரதிநிதிகளும் இலங்கை தூதரக அதிகாரிகளுமேயாவார்கள். ஆனால் அவ்வாறு நடந்ததனை எம்மால் காண முடியவில்லை.
றிஸானாவின் வழக்கை மேன் முறையீடு செய்வதற்கான செலவுகளைப் பொறுப்பேற்பதற்கு இலங்கை அரசு முன்வரவில்லை என்றும் மரணித்த பெண்ணின் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து றிஸானாவின் விடுதலைக்கான எந்த நடவடிக்கைகளையும் அமைச்சர்கள் எவரும் செய்யவில்லை என்றும் றிஸானாவின் பெயரால் சவூதியில் சுற்றுப்பயணம் செய்து விட்டே இவர்கள் திரும்பி வந்தார்கள் என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது என்பதுவும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆக பல்வேறு தரப்பினரின் பொடுபோக்கும் பாரபட்சமான சட்ட ஒழுங்கும் வறுமைக்கு எதிராக போராடி வாழ்வில் ஒரு சிறிய மறு மலர்ச்சியைக்காண பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து உழைக்கச் சென்ற ஒரு வறிய ஏழை யுவதியின் உயிரை காவு கொண்டுள்ளது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய ஒவ்வருவரும் மற்றவரை நோக்கியே விரலை நீட்டுகின்றனர் ஆனால் இந்த துக்ககரமான நிகழ்விற்கு பொறுப்பானவர்கள் என்றோ ஒருநாள் பதில் கூறியாக வேண்டும்.
இதில் துரதிஷ்டமானது என்னவென்றால் இந்த ஏழைச் சிறுமியின் மரணத்திலும் பலர் அரசியல் செய்ய முயற்சிப்பதுதான்.
இவ் ஏழை யுவதியின் பரிதாப மரணம் பற்றி அறிக்கை வெளியிட்டு பிரபல்யம் தேடிக் கொள்வதில் நமது அரசியல் வாதிகள் காட்டிய அக்கறையினையும், அவசரத்தினையும் றிஸானாவின் மரண வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி முடியுமான உதவிகளை செய்வதில் இவர்கள் காட்டவில்லை என்பதும் கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாகும்.
முஸ்லிம் சமுகத்தில் ஆழ ஊடுருவியுள்ள வறுமை, சமூகத்தின் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ளாமலும் அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் பற்றி சிந்திக்காமலும் தமது வசதிக்கு ஏற்றாப்போல் செயல்படும் முஸ்லிம் சமூக மற்றும் சமய கட்டமைப்புகள், தூய்மையும் தூரநோக்குமற்ற சுயநலமிக்க அரசியல் தலைமைகள், எதையுமே விழிப்புணர்வோடு சிந்தித்து செயற்படாத பொதுசனம் என எத்தனையோ காரணிகள் எமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் உள்ளதுபோல் றிசானா என்கின்ற ஒரு அபலையின் உயிரையும் குடித்துள்ளது. இந்த இழப்பிற்கு றிசானா சார்ந்த சமூகமான முஸ்லிம்கள், அவளின் தாய் நாடான இலங்கை, இறுமாப்போடும் இறுகிய மனதோடும் செயற்பட்ட சவூதி நீதித்துறை என எல்லோரும் பொறுப்புக்கூறியாக வேண்டும்.
றிஸானாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை நாம் கவலை மட்டும் கொள்ளுகின்ற ஒரு சம்பவமாக மட்டுப்படுத்திக் கொள்ளாமல் இதனை பொறுப்புக் கூற வேண்டிய அத்தனை தரப்பினரும் விழித்துக் கொள்ளுகின்ற ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இனிமேலும் இது போன்ற துயரங்கள் நிகளாதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து மட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இல்லாது போனால் இது போன்ற சம்பவங்களும் கவலை தெரிவிக்கும் கண்டனங்களும் தொடருகின்ற அவலம் மாத்திரமே மிஞ்சும்.
இலங்கை அரசாங்கமும், மத்திய கிழக்கிலுள்ள இலங்கை தூதுவராலயங்களும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் நமது வெளிநாட்டு தொழிலாளர்களின் சேம நலன் தொடர்பில் தமது முழுமையான கடமைகளை பொறுப்புடன் செய்வதற்கு முன்வர வேண்டும். றிஸானா போன்று சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நம் நாட்டுத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமென சட்ட உதவி நிதியமொன்றினை அரசாங்கம் உடனடியாக நிறுவ வேண்டும்.
அதே போன்று றிஸானா வழக்கோடு தொடர்புட்ட ஆவணங்களையும் தீர்ப்புகளின் பிரதிகளையும் சவூதி நீதி மன்றத்திலிருந்து பெற்று இதில் அக்கறை கொண்ட அத்தனை பேருக்கும் கிடைக்கச் செய்ய இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் றிஸானா வழக்குத் தொடர்பில் இலங்கை தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் வெளிப்படையான விசாரணை ஒன்றை நடாத்தி இதில் தமது கடமைகளை செய்யத்தவறிய அத்தனை பேரும் தண்டிக்கப்படவேண்டும்.
இறுதியாக, தனது குடும்பத்தின் மீட்சிக்காக பல்லாயிரம் மைல்கள் பயணித்து இறுதியில் மரண தண்டனையை சந்தித்த றிஸானாவின் மறுமை வாழ்வுக்காக எமது இயக்கம் பிரார்த்திக்கின்றது. அதேபோல றிஸானாவின் பிரிவால் ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ள றிஸானாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் மன அமைதிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரார்த்தனை செய்கிறது.
Leave a comment