மேற்குலகின் சதித் திட்டங்களை முறியடிக்க முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்

rabi ulபேருவளை, சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத் ஏற்பாட்டில் மீலாத் நபி பரிசளிப்பு விழா அண்மையில் ஹுமைசரா தேசிய பாடசாலை எஸ்.எம். ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதிகளுள் ஒருவராக கலந்து கொண்ட ஈரான் தூதரக கலாசார கவுன்சிலர் மஹ்தி ஜீ. ருக்னி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேற்குலகம் முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முஸ்லிம் நாடுகளின் சக்திமிக்க பொருளாதாரத்தை அழித்தொழித்து இஸ்லாத்திற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த கால கட்டத்தில் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு இந்தச் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என ஈரான் இஸ்லாமிய குடியரசுத் தூதரக கலாசார கவுன்சிலர் மஹ்தி ஜீ. ருக்னி தெரிவித்தார்.

வாலிபர் ஹழரா ஜமாஅத் தலைவர் எம். அரூஸ் அனஸ் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் லிபியா தூதரக கலாசார கவுன்சிலர் அலி ஏ. கந்தூரி பிரதம அதிதியாகவும் சிங்கப்பூர் நகர பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எஸ்.எஸ். உமர் றிழ்வான் (ஜமாலி) விசேட பேச்சாளராகவும் கலந்து கொண்டார்.

ருக்னி மேலும் கூறியதாவது,

ஈரானின் ஆன்மீக தலைவராகத் திகழ்ந்த மர்ஹூம் ஆயத்துல்லா குமைனி உலக இஸ்லாமிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் நோக்குடன் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த றபியுல் அவ்வல் மாதத்தில் உலக இஸ்லாமிய ஒற்றுமை வாரமொன்றை ஏற்படுத்தி முஸ்லிம் உலகின் ஐக்கியத்தை வலியுறுத்தினார்.

இஸ்லாமிய உலகை நசுக்குகின்ற மேற்கத்திய சதிகாரர்களுக்கு எதிராக தக்க பதில் கொடுக்க முஸ்லிம் உலகம் ஓர் அணியில் ஒன்று திரள வேண்டிய யுகம் இன்று ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

(பேருவளை நிருபர்)

Published by

Leave a comment