சிந்திக்கவேண்டிய தருணம்!
-Yourkattankudy
மன்னிக்க முடியாத ஓர் குற்றம் என்று கருதி சவுதி அரசாங்கத்தினால் மரண தண்டணை வழங்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானாவின் உயிர் பிரிந்து 3 நாட்கள் சென்றுவிட்ட நிலையில், ரிசானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டணைக் காட்சிகள் எனக் கூறி முஸ்லிம் என்ற பெயர்தாங்கிகள் உண்மைக்குப் புறம்பாக போலியான பழைய, இட்டுக்கட்டப்பட்ட காட்சிகளையும் புகைப்படங்களையும் இணையத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவேற்றி மக்களை குழப்பி வருகின்றனர்.
தூக்கிலிடப்பட்டதா? அல்லது தலை துண்டிக்கப்பட்டதா? என்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் காட்சிகளையும் புணைந்து பரப்பி வருகின்றனர். இவ்வாறான போலியான காட்சிகளை ரிசானாவின் உறவினர்கள் இன்றோ அல்லது என்றோ இக்காட்சிகளைக் காணும் போது எத்தகைய ஆபத்துக்கள் ரிசானாவின் அப்பாவி உறவினர்களிடமிருந்து எழும் என்பதை சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
கொலைக்கு கொலைதான் இஸ்லாமிய தண்டணை. இருந்தும் இரு தரப்புக்குமிடையில் எதிர் வாதங்கள் இருந்து வந்தன.
அதாவது மரணித்த குழந்தையின் பெற்றோர் ரிஸானா குழந்தையைக் கொலை செய்ததாகவும் , ரிஸானா தான் குழந்தையை கொல்ல வில்லை என்பதாகவும் சாட்சியம் அளித்திருந்தனர்.
இவ்வாறிருக்க, நவீனமான விஞ்ஞான உலகில் ஓர் கொலைக்கும்-மரணத்துக்கும் வித்தியாசம் அறிய முயற்சிக்காமல் அல்லது உண்மை மறைக்கப்பட்டு, பெற்றோரின் பலவந்தமான தண்டணை வழங்கல் எனும் சட்டத்திற்கமைய இப்பரிதாபகரமான மரணத்தை எம் சகோதரி சந்தித்திருந்தார்.
குழந்தையின் மரணத்திற்காக பரீட்சிக்கப்பட்ட ஆவணங்கள் எங்கே, அவைகளை எமது அமைச்சர்கள் பரீட்சித்துப் பார்த்தார்களா? ஆராய்ந்தார்களா என்று எங்களை நாங்களே கேட்க வேண்டும்.
5 வருடங்கள் சிறை இருந்தால் ஒரு மனிதன் மனிதனாக இருப்பானா? அதுவும் பாவம் ஓர் ஏழைப் பெண்! எந்த ஒரு அரசியல், பண, அந்தஸ்து-செல்வாக்குகளற்ற ஓர் ஜீவன். சிறையில் 5 வருடங்கள் வாடிப் போனதை யார்தான் போய் பார்த்தோம்.
ரிசானாவின் மரணத்திற்கு எம் அனைவருக்கும் பங்கிருக்கின்றது என்ற கசப்பான உண்மையை நாங்கள் உணரவேண்டிய தருணம் இது.
5 வருடங்கள் ஓர் அநாதையாகவே ரிஸானா சிறை அனுபவித்தும் கூட, அரபித்தாயின் மனது அசையவில்லை! கொலையே பதில்!
அரபி-அஜ்னபி எனும் வேறுபாடு அன்றிலிருந்து இன்றுவi அம்மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால்தான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ‘ அரபி மொழி பேசுபவன் வேறு மொழி பேசுபவனை விட எந்தவகையிலும் உயர்ந்தவனல்ல’ என மொழி, பிரதேச, நிற வேசங்களை அன்று இச்சமூகத்திலிருந்து அகற்றிச் சென்றார்கள்.
‘பெண்களை மதியுங்கள். அவர்களின் உரிமைக்கு மதிப்பளியுங்கள்’ எனும் இஸ்லாமிய சட்டங்களை தப்பாக நினைத்து பெண்களின் முந்தாணைக்குள்ளும், பெண்களின் காலடியிலும் சுருண்டு விழும் அறபிகளின் இத்தகைய தீர்ப்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நல்லதோர் படிப்பினையாக இருக்கட்டும்.
எனவே எம்மைவிட்டும் மறைந்து இறைவனடி சேர்ந்த எம் சகோதரிக்காக பிரார்த்திக்கும் இந்நேரத்தில் தயவு செய்து போலியான சம்பவங்களை, இட்டுக்கட்டப்பட்ட காட்சிகளை ரிசானாவின் பெயர்களில் பரப்பாதீர்கள்.
அல்லாஹ் எம் அனைவருக்கும் பொறுமையை அளிப்பானாக.
Leave a comment