றிசானா நபீக்கின் மரணத்துக்கான முழு பொறுப்பை அரசுக்கு ஆதரவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜம்இய்யத்துல் உலமாவுமே ஏற்கவேண்டும்

இதற்கு பரிகாரமாக அவரின் வீட்டை புதிதாக கட்டிக்கொடுக்க  வேண்டும்: உலமா கட்சி

moulawi-mubarak-01[1]

பழுலுல்லாஹ் பர்ஹான்

றிசானா நபீக்கின் மரணத்துக்கான முழு பொறுப்பையும் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜம்இய்யத்துல் உலமாவுமே ஏற்பதுடன் இதற்கு பரிகாரமாக அவரின் வீட்டை புதிதாக கட்டிக்கொடுக்க  வேண்டுமென உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது,

றிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுப்பட்டுள்ளமை ஆழ்ந்த கவலையை தருகிறது. றிசனாவின் விடுதலைக்காக அரச ஆதரவு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும்  முன்னெடு;கவில்லை என்பதை முழு நாடும் அறியும். அரசாங்கம் அவ்வப்போது சில நடவடிக்கைகள் எடுத்த போதும் பதவி ஆசை பிடித்த சில முஸ்லிம்களின் பிழையான வழிகாட்டல்கள்களினால் இவ்விடயம் பின்னடைவை சந்தித்தது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க இலங்கையிலிருந்து உலமாக்களின் தலைமையில் குழுவொன்று சஊதி சென்று மரணித்த பிள்ளையின் பெற்றேர்களை சந்திப்பது சம்பந்தமாக வெளிநாட்டமைச்சில் கூட்டமொன்று நடைபெற்றது. இதன் போது ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளுடன் உலமா கட்சித்தலைவரும் இணைந்து சஊதி போவதாக அங்கு முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை மறுத்த ஜம்இய்யத்துல் உலமா தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் உலமா கட்சித்தலைவர் ஓர் அரசியல்வாதியாக இருப்பதன் காரணமாக அவர் செல்வதை அனுமதிக்க முடியாது என்றார். இதன் போது ஏன் ஜம்இய்யத்துல் உலமா, உலமா கட்சியை பார்த்து பயப்பட வேண்டும் என கேட்ட உலமா கட்சித்தலைமை, இந்த நாட்டு முஸ்லிம்களும் உலமா சபை பிரதிநிதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது அரச பதவிகள் எதிலும் அங்கம் வகிக்காத கட்சி என்ற வகையில் உலமா கட்சி மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் மானத்தைக்காத்தது என்பதை எடுத்துக்கூறியது. அத்துடன் சஊதி பற்றி மிக அதிக அனுபவம் இருக்கும் எம்மால்  இதற்கு காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டையும் தெரிவித்தோம்.

ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் கடைசி வரை இதற்கு இணங்க மறுத்ததன் காரணமாக எம்மை அமைதி காக்கும்படி பாராளுமன்ற உறுப்பினர் ஏ .எச். எம். அஸ்வர் வேண்டிக்கொண்டதற்கிணங்க நாம் ஓரமானோம். இதனைத்தொடர்ந்து சஊதி சென்ற ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் அங்கு அந்தப்பெற்றோருக்கு உபதேசம் பண்ண முயற்சித்ததால் அவர்கள் ஆத்திரமுற்றனர். இவர்கள் எமக்கு புத்திமதி சொல்வதா என வெளிப்படையாக கூறிவிட்டனர். அதன் பின் யாராலும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.

எனவேதான் கூறுகிறோம் றிசானாவின் மரணத்துக்கு அரச ஆதரவு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜம்இய்யத்துல் உலமாவும் முழு பொறுப்பேற்பதுடன் இதற்கு பரிகாரமாக றிசானாவின் வீட்டை இவர்கள் இணைந்து புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment