– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவராக எம்.ஐ.எம். தையூப் நேற்று புதன்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார் .
காத்தான்குடி கூட்டுறவு பரீசோதகர் உசனார் தலைமையில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற இயக்குனர் சபை கூட்டத்திலேயே எம்.ஐ.எம். தையூப் ஜேபி. சங்கத்தின் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
கடந்த 25-12-2012 திகதி இடம்பெற்ற சங்கத்தின் பொதுச்சபை கூட்டத்தில் இடம்பெற்ற இயக்குனர் சபை உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் எம்.ஐ.எம். தையூப் ஆக கூடுதலான வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட எம்.ஐ.எம். தையூப் கடந்த 2006-2007 வருட காலப்பகுதியில் காத்தான்குடி ப.நோ.கூ. சங்கத்தின் இடைக்கால தலைவராக பணியாற்றியதுடன் காத்தான்குடி-05, 164 பி. கிராம சேவகர் பிரிவின் பல்வேறு அமைப்புக்களின் தலைவராக கடமையாற்றிவருவதுடன் இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காத்தான்குடி ப.நோ.கூ. சங்கத்தின் புதிய உப தலைவராக எச்.எம்.எம்.றியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் சிறி லங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான றவூப் ஏ மஜீட், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அஹமட்லெப்வை மற்றும் காத்தான்குடி ப.நோ.கூ. இயக்குனர் சபை உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Leave a comment