பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அனுதாப மற்றும் உதவி கோரல் அறிக்கை

12193_323142551133657_1764085918_n-300x300இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

இஸ்லாம் பிறந்த பூமியிலேயே இன்று மன்னிப்பு எனும் பெருங்கொடையை நாம் இழந்தோம்! சகோதரி ரிசானா நஃபீக்கின் மரணச் செய்தி கேட்டு!!

சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இன்று காலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பென் ரிசானா நஃபீக்கின் குடும்பத்தாருடன் பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் சகோதர சகோதரிகள் தமது கவலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

சகோதரி ரிசானா நஃபீக்கின் ஆத்ம சாந்திக்காகவும், அவரது மறுமை ஈடேற்றத்திற்காகவும் இவ்மைப்பின் அங்கத்தவர்கள் அனைவரையும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் வேண்டுகின்றோம்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவரான இச்கோதரி, 1988ம் ஆண்டிலேயே பிறந்திருந்த போதிலும் இவரை சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிய வெளிநாட்டு வேலை வாயப்பு முகவர் தனது ஒரு சில ஆயிரம் ரூபா பண வருவாய்க்காக 1982ல் பிறந்தார் என போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இவருக்குரிய கடவுச் சீட்டைப் பெற்று அனுப்பியிருந்தார்.

சவூதி அரேபியாவில் இச்சகோதரி பணிபுரிந்த வீட்டில் 4 மாதக் குழந்தையொன்றைக் கொலை செய்ததாக இவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு 2005ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்றபோது சகோதரி ரிசானா உண்மையில் 17 வயதுடைய சிறுபெண்ணாகவே இருந்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் இவர் முற்றாக மறுதலித்து சாட்சிய ரீதியாக தான் இக்கொலையைச் செய்யவில்லை என்றும் வாதாடியிருந்தார். எனினும் கடவுச் சீட்டில் காணப்பட்ட போலியான பிறந்த திகதியின் அடிப்படையில் இவருக்கு சவூதி அரசாங்கம் மரண தண்டனையை விதித்திருந்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரி ரிசானா நஃபீக், சவூதி அரேபியாவிலுள்ள தவாத்மி பகுதியில் அமைந்துள்ள சிறையில் இதுவரை காலமும் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

சம்பவம் நிகழும்போது இவரது உண்மையான வயதின் அடிப்படையிலும், சிறுவர் நலன் பேணும் வகையிலும், இவரது வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பத்தின் நிலவரத்தைக் கருத்திற் கொண்டும் இவருக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யமாறு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மனிதாபிமான அமைப்புக்கள் சவூதி அரசாங்கத்தைக் கோரி வந்தன.

உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான மனிதநேய நலன் விரும்பிகள் இவரை விடுவிக்குமாறு பேஸ்புக் மூலமாகவும், தனிப்பட்ட மனுக்கள் மூலமாகவும் சவூதி அரேபிய அரசுக்கும், மன்னருக்கும் கருணை மனுக்களைச் சமர்ப்பித்திருந்தனர். அதேபோன்று உலக நாடுகளின் தலைவர்களும் இவ்வாறான கருணை விண்ணப்பங்களை விடுத்திருந்தினர். இலட்சோப இலட்சம் முஸ்லிம்கள் அவரது விடுதலைக்காக உலகெங்கும் இருந்து அல்லாஹ்விடம் இத்தனை வருடங்களாகக் கையேந்தி வந்தனர்.

குறிப்பாக, எமது ‘லங்காவின் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் ஒரு முறைக்கு இரு முறை தனது பிரஜையின் மீது கருணை காட்டுமாறு சவூதி அரசாங்கத்தையும், மன்னரையும் உருக்கமாகக் கேட்டிருந்தார்.

இவ்வாறான கருணை மனுக் கோரிக்கைகளால் சகோதரி ரிசானா நஃபீக் மன்னித்து விடுதலை செய்யப்படுவார் என்றே முழு உலகமும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைகள் அனைத்தும் இன்று தகர்ந்து போயிற்று. அவரது மரணச் செய்தி கேட்டு உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான விழிகள் இன்று கண்ணீரைச் சிந்தி கவலையுடன் காணப்படுகின்றன.

இஸ்லாம் வலியுறுத்தும் மன்னிப்பு என்கிற மாபெரும் கொடையை ஒரு ஏழைச் சிறுமிக்கு வழங்கி அதன் மகத்துவத்தை நிரூபிக்க இன்றைய சவூதி அரேபிய அரசாங்கம் மறுதலித்துள்ளதானது இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் என்ற வகையில் எமக்கெல்லாம் கவலையாகவுள்ளது.

இரக்கமற்ற இந்த உயிர் பறிப்பினால் இன்று இவரை நம்பி வாழும் இரண்டு உடன்பிறந்த சகோதரிகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. தமது குடும்பத்தின் வறுமைக்கு விடிவு காணும் நம்பிக்கையுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் இச்சிறுமியை உலகின் தனிப்பெரும் இஸ்லாமிய நாடொன்றுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைத்த இவரது பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

நாம் பல வழிகளில் முயன்றும் இவரது குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு எமது அமைப்பின் அனுதாபங்களை இன்று மாலை வரை தெரிவித்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து முற்சித்து வருகின்றோம்.

சகோதரி ரிசானாவின் மரணச் செய்தி கேட்ட நிமிடத்திலிருந்து இவரது குடிசை வீடு மாத்திரமன்றி மூதூர் முஸ்லிம் நகரமே மக்கள் வெள்ளத்தில் அமிழ்ந்துள்ளதாக இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இச்சகோதரியின் இழப்பிற்கு எவராலும் முழுமையான பிரதியீட்டினை வழங்கி விட முடியாது.

அல்லாஹ் ஒருவனே இவர்களின் கலையையும், சஞ்சலத்தையும் போக்கி நம்பிக்கையையும், எதிர்கால வாழ்க்கை மீதான பற்றுறுதியையும் அளிப்பதற்கு சக்தியுள்ளவனாகும். அந்த வகையில் நாம் அனைவரும் அந்த வல்லோனிடமே எமது பிரார்த்தனைகளைச் செய்வோம்.

இன்ஸா அல்லாஹ், எதிர்வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் இச்சகோதரியின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைப்பதற்கான உதவி திரட்டும் நடவடிக்கையொன்றை பிரித்தானியாவிலுள்ள முக்கிய நகரங்களில் எமது அமைப்பு மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த ‘உதவும் கரங்கள்’ பணியில் பிரித்தானியாவிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் சகோதர சகோதரிகளையும், ஏனைய சமூகங்களைச் சேர்ந்த மனிதாபிமான ஆர்வலர்களையும் இணைந்து கொள்ளுமாறு நாம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த ‘உதவும் கரங்கள்’ பணியில் பங்கேற்று நிதியுதவிகள் மற்றும் பொருளுதவிகள் வழங்கும் அனைவருக்கும் எமது  இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் உரிய பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்படுவதுடன், அவ்வுதவிச் சேகரிப்பை இலங்கையிலுள்ள எமது மத்திய கிளை நிர்வாகத்தினர் ஊடாக சகோதரி ரிசானா நஃபீக் அவர்களின் பெற்றோரிடம் நேரடியாகக் கொண்டு சென்று கையளிப்பதற்கான ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது தூய எண்ணங்களையும், செயற்பாடுகளையும் அங்கீகரித்து இதில் பங்கேற்கும் அனைவருக்கும் நற்கூலியையும் வழங்குவானாக!

பெற்ற மகளினதும், உற்ற சகோதரியினதும் பிரிவுத்துயரால் துவண்டு போயுள்ள அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஊர் ஜமாஅத்தார்களுக்கும், ஏனைய சகோதர உறவுகளுக்கும் எமது அமைப்பின் சோகப் பகிர்வுகளை மீண்டும் நாம் சமர்ப்பித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் சகோதரி ரிசானா நஃபீக்கையும் நுழையச் செய்வானாக எனவும் பிரார்த்திக்கின்றோம்.

-மின்னஞ்சல்: வார உரைகல்

Published by

Leave a comment