இன்று (09/01/2013) சவுதி அரேபியாவில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண் ரிஸானா நபீக் இன் மரணச் செய்தி கேட்டு உலக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்!
‘இன்னாலில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜிஊன்’
ஏழ்மையின் காரணமாக எப்படியாவது வெளிநாடு சென்று உழைத்து தன்னை வருந்தியாவது தனது குடும்பத்திற்கு பணம் அனுப்பி, அவர்களின் மகிழ்ச்சியில் தனது கஸட்ங்களை மறந்து வெளிநாடுகளில் பணியாற்றிவரும் இவ்வாறான பணிப்பெண்களுள் றிசானாவும் ஒருவராக இருந்தார்.
ஆனால்…. நீதி அநீதியானதாகவே இன்று உலகம் இச்சம்பவத்தை நிரூபிக்கின்றது. இன்றைய நாள் அனைத்து உள்ளங்களையும் கண்ணீரால் கழுவிச் சென்று கொண்டிருக்கும் நாள்!
இத்தருணத்தில் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் மர்ஹூம் ரிஸானா நபீக் இன் குடும்பத்தார்களுக்கு எமது நிர்வாகம், உள்ளுர் மற்றும் கடல் கடந்து வாழும் வாசகர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாருக்கு ஜன்னத்துல் பிரிதௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க அல்லாஹ்வை கண்ணீருடன் பிரார்த்திக்கின்றோம்.
இதேவேளை ரிஸானாவின் விடுதலைக்காக 2005 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை குரல் கொடுத்த ஜனாதிபதி, இலங்கை அமைச்சர்கள், இலங்கை மற்றும் உலக மனித உரிமை அமைப்புக்கள், தொண்டார்வ நிறுவனங்கள், ரிஸானாவுக்காக சவுதியிலிருந்து குரல் கொடுத்த பல்லாயிரம் உள்ளங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவர்களுக்கும் எமது இணையத்தளம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் ஏழ்மையின் காரணமாக தங்களது குடும்பங்களைத் துறந்து செல்லும் பெண்கள் பாலியல் ரீதியிலும், சம்பளம் கிடைக்காமை, சித்திரவதைகள் போன்ற வகையில் சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே அரசாங்கம் பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன் இவ்வாறான நாடுகளுடன் ஆரோக்கியமான ஒப்பந்தங்களைச் செய்ய முன்வரவேண்டும்.
ஓர் சமூகத்திலிருக்கும் இவ்வாறான ஏழைகளின் விடயத்தில் அரசியல்வாதிகள், உலமாக்கள், ஊர் பொது அமைப்புக்கள் மற்றும் செல்வந்தர்கள் அதிக அக்கரை செலுத்தி, அவர்களின் தேவைகளை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்ய முன்வந்தால் இவ்வாறான கொடுமைககளில் இருந்தும் ஏழைப் பெண்களைக் காப்பாற்ற முடியும்.
நன்றி
என்றும் அன்புடன்
நிர்வாகம்,
உங்கள் காத்தான்குடி
![Rizana_Letter_Tamil-791x1024[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/rizana_letter_tamil-791x10241.jpg?w=530&h=686)
Leave a comment