– ரிஸானா நபீக்கின் விவகாரம் தொடர்பில் – நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான்
ரிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மன வேதனையும் அடைவதாக தெரிவித்துள்ள நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அவர் விடுதலை செய்யப்படும் சாத்தியம் உண்டு என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கும், தமக்கும் அரசாங்கத்திற்கும் இறுதி வரை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரிஸானா நபீக் மீது சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவையாவன,
மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக்கின் பெற்றோரும், குடும்பத்தினரும் என்னுடன் இந்த விவகாரம் தொடர்பில் நீண்ட காலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், நானும், அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் சிலரும் நீதித்துறையும், சட்டமா அதிபர் திணைக்களமும், குற்றத்தடுப்புப் பிரிவினரும், ரிஸானா நபீக்கின் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தோம்.
ஜனாதிபதி இது தொடர்பில் சவூதி அரேபிய மன்னருக்கு கருணை மனுவொன்றின் மூலம் உருக்கமான கோரிக்கையை விடுத்திருந்த அதேவேளை நான் இறந்த குழந்தையின் பெற்றோருக்கு கருணை மனுவொன்றை சவூதி அரேபிய தூதரகத்தின் ஊடாக நீண்ட காலத்திற்கு முன்பே அனுப்பியிருந்தேன்.
இறைமையுள்ள நாடான சவூதி அரேபியாவின் நீதித்துறைக்கு நாம் மதிப்பளித்து நடந்து கொண்டோம். அந் நாட்டின் சட்டத்தின்படி கொலை குற்றம் சாட்;டப்பட்ட ஒருவரை, மரணித்தவரின் பெற்றோர் மன்னிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனடிப்படையில் நாம் மரணித்த குழந்தையின் பெற்றோரையும், குடும்பத்தினரையும் அவர்களது கோத்திரத்தாரையும் அணுகினோம்.
சில தினங்களுக்கு முன்னர் கூட நீதியமைச்சில் சவூதி அரேபிய தூதுவரிடம் ரிஸானா நபீக்கின் நிலைமையை பற்றி நான் எடுத்துக் கூறி அவர் விடுதலை செய்யப்படும் சாத்தியம் குறித்து வினவிய பொழுது அவர் நம்பிக்கையூட்டும் பதிலை எனக்கு அளித்திருந்தார். ஜனாதிபதியும் மீண்டும் வேண்டுகோள் விடுத்ததோடு, சட்டமா அதிபரும் அங்கு ரிஸானாவின் விவகாரம் தொடர்பில் சென்று வந்தார்.
நீதியமைச்சர் என்ற முறையில் நானும் என்னாலான அனைத்து முயற்சிகளையும் ரிஸானாவின் விடுதலைக்காக மேற்கொண்டிருந்தேன்.
ரிஸானாவின் வயதை கூடுதலாக காட்டி போலிக் கடவுச் சீட்டு மற்றும் பிரயாண ஆவணங்களை தயாரித்து சவூதி அரேபியாவிற்கு அனுப்பிய நபர்களை கைது செய்து அவர்கள் மீது குற்றப் பத்திரம் தாக்கல் செய்து மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்கத்தக்க அரசாங்கமும், மனித உரிமை அமைப்புகளும் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் மிகவும் பரிதாபத்துக்குரிய முறையில் ரிஸானா நபீக் மரண தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அளிக்கின்றது.
அவருக்கு மேலான ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வு கிட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்பதோடு, அவரது மறைவினால் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகியுள்ள அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மூதூர் உட்பட திருகோணமலை மாவட்ட மக்களுக்கும், பொதுவாக இலங்கையர் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Leave a comment