இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் நோக்குடன் அரசாங்கம் கொண்டுவந்த கண்டனத் தீர்மானம் மீதான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஷிராணி பண்டாரநாயக்க தாக்கல்செய்திருந்த ‘ரிட் ஆஃப் ஷேஷ்யோராரி’ கோரிக்கை மனு மீதான தீர்ப்பின்போதே நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.
தலைமை நீதியரசர் மீதான பல குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் விதத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.
ஆனால் இந்தத் தெரிவுக்குழு விசாரணை நீதியாக நடக்கவில்லை என்று அந்தக் குழுவில் இருந்த எதிரணி உறுப்பினர்கள் அந்த அறிக்கையை நிராகரித்திருந்தார்கள்.
நாடாளாவிய மட்டத்தில் சட்டத்தரணிகளும் தெரிவுக்குழு அறிக்கை தவறானது என்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள்.
இதேவேளை, ஷிராணி பண்டாரநாயக்க மீதான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறப்பு சுயாதீனக் குழுவொன்றைஅமைத்துள்ளதாக அரச ஊடகம் இன்று அறிவித்துள்ளது.
நீதி மற்றும் நாடாளுமன்ற துறைகளைச் சார்ந்த 4 நிபுணர்கள் இந்தக் குழுவில் அடங்குவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் எதிர்வரும் 10ம் மற்றும் 11-ம் திகதிகளில் தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரரணையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த தீர்க்கமான சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-bbc/tamil
Leave a comment