முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் அதன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றில் திவிநெகும சட்டமூலம் நிறைவேறும்-உலமா கட்சித்தலவர் முபாறக் அப்துல் மஜீத்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

moulawi-mubarak-01[1]சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் அதன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றில் திவிநெகும சட்டமூலம் நிறைவேறும் என உலமா கட்சித்தலவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது,

பதவி ஆசை காரணமாக கிழக்கு மாகாண சபையில் திவிநெகுமவுக்கு ஆதரவளித்து மக்களிடம் எதை எதையோ பேசி ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தற்போது பாராளுமன்றத்தில் இதற்கான சட்டமூலம் வருவதனால் திக்கு முக்காடிய நிலையில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. தங்களின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்திலேயே இதற்கு ஆதரவளிப்போம் என அக்கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நிபந்தனை என கூறுவதும் பின்னர் சமூக நலன் சார்ந்த நிபந்தனை எதுவுமின்றி ஆதரவளிப்பதும் மு.காவின் புளித்துப்போன ஏமாற்று அரசியலாகும். பின்னர் இது பற்றி அரசியல் மேடைகளில் புலம்பித்திரிவதும் மு. காவுக்கு கைவந்த கலையாகும்.

தொகுதிவாரி உள்ளுராட்சி தேர்தல் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு வந்த போது மு. கா சில நிபந்தனைகளை முன் வைத்தது. அதன்படியான திருத்தம் எதுவும் இன்றி அச்சட்டமூலத்துக்கு ஆதரவளித்து விட்டு பின்னர் எமது நிபந்தனைகளை ஏற்று அவற்றின் படி திருத்தம் நடைபெறும் என சொன்ன அரசாங்கம் அவற்றை செய்யவில்லை என புலம்பிக்கொண்டு திரிந்தனர். இவ்வாறே திவி நெகும சட்டமூலத்துக்கும் எமது நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் ஆதரவளித்தோம் எனக்கூறப்போகிறார்கள். பின்னர் எமது நிபந்தனைகள் கைவிடப்பட்டு விட்டதால் இதற்கு நாம் பாடம் படிப்பிப்போம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வழமை போல் வீரம் பேசி போராளிகளை உசுப்பேற்றுவார். உசுப்பேறி முட்டாள்களாவதையே தொழிலாகக்கொண்ட போராளிகளும் மௌனமாகிவிடுவர்.

ஆகவே 13வது திருத்தச்சட்டத்தை நீக்குவதை எதிர்ப்பதாக கூறும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபைகளின் அதிகாரங்களை அபகரிக்கும் திவிநெகும சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் ஆதரவளித்து மீண்டும் ஒரு முறை தமிழ் பேசும் மக்களுக்கு துரோகம் செய்யத்தான் போகிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment