பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினரின் 2013ம் ஆண்டுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 02ம் திகதி புதன்கிழமையன்று பிரித்தானியாவின் க்ரௌலியிலுள்ள (Crowely) சென். வில்பிரட்ஸ் கத்தோலிக்க பாடசாலையில் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம்.எல்.எம். நஸீர் அவாகளின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒன்றுகூடலின்போது அப்பிரதேசத்தைச் சேர்ந்த 250க்கும் அதிகமான கல்விமான்கள், புத்திஜீவிகளும் அடங்கிய இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டதுடன் பல இஸ்லாமிய தஃவா அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இவ்வமைப்பின் எதிர்காலச் செயற்பாட்டறிக்கையின் பிரதிகளும் அனைவருக்கும் கையளிக்கப்பட்டன. அவ்வறிக்கையின் விபரம் வருமாறு:
பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் எதிர்காலச் செயற்பாட்டறிக்கை
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ
உலகில் மிக அழகான பூமியாக அழ்ழாஹ்வினால் படைக்கப்பட்ட இலங்கையில் பிறந்து வளர்ந்த நாம், பிறந்த மண்ணையும், உறவுகளையும் பிரிந்து பல்லாயிரம் மைல்களைக் கடந்து வந்து இந்த பிரித்தானியாவிலே புலம் பெயர்ந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எமது பெற்றோர்களும், மற்றோர்களும் சிறிலங்கா தாயகத்தில் பிரச்சினைகளோடும், தேவைகளோடும், நெருக்கடிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் நாமும் அவ்வாறான தேவைகளையும், பிரச்சினைகளையும் கொண்டவர்களாகவே எமது நாட்களையும் இங்கே நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
எம்மத்தியில் நிலவும் இவ்வாறான பிரச்சினைகளையும், தேவைகளையும் ஒரு கூட்டுக் கட்டமைப்பாக இயங்கி நமக்குள் நாமே தீர்த்துக் கொள்ளும் வகையிலும், எமது தாயகத்தில் நமது உதவிகளை எதிர்பார்த்திருக்கும் உறவுகளுக்கும், சமூகத்தினருக்கும் நம்மாலான உதவிகளை வழங்கும் நன்னோக்கத்துடனும்தான் இந்த அமைப்பினை நாங்கள் உருவாக்கி இதன் மூலமாக இன்று ஒரு பெரும் சக்தியாகவும், புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் மக்களின் அமைப்பு என்கிற வலுவான ஆதரவுத்தளத்தில் வாழ்வோராகவும் இருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! பிரியமான சகோதர, சகோதரிகளே..!
நமது பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்குமான தீர்வுகள் நமது ஒற்றுமையிலும், பரஸ்பர உதவியிலும்தான் தங்கியிருக்கின்றது என்கிற உண்மையை முதலில் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் நமக்குள் நாம் இன்னமும் இறுக்கமாகி நெருக்கமாகி நமக்கிடையிலான புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வளர்த்து அதிகரித்துக் கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் அவசரமும் இருக்கின்றது.
எதிர்காலத்தில் நமது இலக்குகள் என்ன? நமது செயற்பாடுகளை எவ்வாறெல்லாம் விரிவாக்க வேண்டும்? நமது முஸ்லிம் சமூகத்திற்கும், தாய் நாட்டிற்கும் என்னென்ன பங்களிப்புக்களைச் செய்வோம்? என்பதைப்பற்றியெல்லாம் நாம் நமக்குள்ளே கலந்துரையாடி செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
இன்று, எம்மைப்போலவே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்துள்ள எமது தமிழ்ச் சகோதரர்கள் மேற்கொள்ளுகின்ற பாரியளவிலான செயற்பாடுகளினால் எமது தாய் நாடு உலகின் பார்வையில் களங்கத்திற்குள்ளாகி இருக்கின்றது. உலகின் பார்வையில் எமது தாயகத்தின் மீது சந்தேகம் மிகைத்திருக்கின்றது. அதனால் பல்வேறு நெருக்கடிகளுக்கு நமது நாடு சர்வதேச சமூகத்தில் முகங் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
இதற்குப் பரிகாரமாக நாம் என்ன செய்யலாம்? எவ்வாறு செயற்படலாம்? எப்படி நமது அழகிய ‘லங்காவின் பெயரையும், நன்மதிப்பையும் இந்த உலக அரங்கில் மீண்டும் தூக்கி நிலை நிறுத்தலாம்? என்பதைப் பற்றியெல்லாம் நாம் ஆழமாகச் சிந்தித்து அவசரமாகச் செயற்பட வேண்டியுள்ளது.
இவ்வாறு நாம் கூறுவதனால் எமது அமைப்பானது, ‘லங்காவின் இன்றைய அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படும் ஓர் அமைப்பு என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. நமது தாய் நாட்டின் மீதுள்ள அன்பிலும், பற்றிலும், மரியாதையிலுமே தாயகத்தின் நலன்களுக்காகவும், அங்குள்ள எமது முஸ்லிம் சமூகத்திற்காகவும் இவ்வாறு ஒருங்கிணைந்து செயற்பட முன் வந்துள்ளோம். எந்தவொரு அரசாங்கம் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற போதிலும் நமது அமைப்பின் குறிக்கோளும், இலட்சியமும் இவ்வாறே இருக்கும் என்பதையும் நாம் உறுதிப்படுத்துகின்றோம்.
‘தாய் நாட்டை விசுவாசிப்பதானது, நமது இறை நம்பிக்கையின் – ஈமானின் ஒரு அம்சமாகும்’. தாய்நாட்டிற்குத் துரோமிழைப்பது, தாய் நாட்டிற்கு விரோதமாகச் செயற்படுவது என்பதெல்லாம் எம்மைப் பெற்றெடுத்த தாய்க்குத் துரோகமிழைப்பது போலவும், தாயை வஞ்சிப்பது போலவுமே இறைவனின் பார்வையில் பதிவாகும். எனவே, இறைவனின் ஏற்பாட்டின்படி புலம்பெயர்ந்து இங்கு வந்திருக்கும் நாம், நமது தாயகத்திற்கும், அங்கு வாழும் நமது சமூகத்திற்குமாகச் செய்ய வேண்டிய பங்களிப்புகளை இங்கிருந்து செய்ய வேண்டுமென்பது இறைவனின் விருப்பமாக இருந்திருக்கலாம் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்று நமது தாய் நாட்டை விட்டுப் புகலிடம் தேடி வந்த மக்களில் ஒரு சாரார் எமது நாட்டிற்கு விரோதமான பிரச்சாரங்களைச் செய்து உலக நாடுகளைச் சூடேற்றி தமது சமூகத்தின் நலன்களை மாத்திரம் பாதுகாத்துக் கொள்வதற்காக எமது தாயகத்தின்மீது பல்வேறு அழுத்தங்களையும் பிரயோகிப்பதற்கான முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இச்சூழ்நிலையில் எம்மையும் அழ்ழாஹ் இந்த மண்ணிற்கு புலம்பெயர்ந்தவர்களாக அனுப்பி வைத்திருப்பதானது, எமது தனிப்பட்ட சுகபோகங்களை மாத்திரம் பேணுவதற்காகவும், எமது சுயநலத் தேவைகளை மாத்திரம் அடைந்து கொள்வதற்காகவுமாக இருக்க முடியாது. எங்களைக் கொண்டும் எமது தாயகத்தின்மீதும், எமது முஸ்லிம் சமூகத்தின் மீதும் திட்டமிட்டுச் சுமத்தப்படும் களங்கங்களையும், அவதூறுகளையும், அச்சுறுத்தல்களையும், அவநம்பிக்கைகளையும் அகற்றும் பணிக்காகவும் நம்மையும் முன்கூட்டியே புலம்பெயரச் செய்து இங்கு அனுப்பி வைத்திருக்கலாம்.
இத்தகைய வாய்ப்பினைப் பயன்படுத்தி இவற்றைச் சாதிப்பதற்கும், நமது தாயகத்தின் வரலாற்றிலே சமகாலத்தில் புலம்பெயர்ந்துள்ள முஸ்லிம் சமூகத்தின் சாதனைகளாகவும், பங்களிப்புக்களாகவும் இவற்றைப் பதிவு செய்வதற்கும், நமது மக்களின் வளமும், பலமும் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
நமது இக்கட்டமைப்பு மேலும் நன்கு வலுவூட்டப்பட்டு விரிவாக்கம் பெற வேண்டும். எமது செயற்பாடுகள் குறித்து நன்கு திட்டமிட்ட அடிப்படையில் எமது தாயகத்தில் தற்போது பதவியிலுள்ள அரசாங்கத்தோடும், சர்வதேச நாடுகளோடும், குறிப்பாக முஸ்லிம் உலத்தோடும் உறவாடல்களை ஏற்படுத்தி நம்மையும், நமது சமூகத்தின் நியாயங்களையும், எமது தாய் நாட்டின் தேவைகளையும் அவர்களும் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக எதிர்காலத்தில் எமது பணிகளைத் தொடர வேண்டும்.
நாம் எமது இணையதளத்தின் மூலமாக உலககெங்கும் வாழும் அனைத்து சமய, சமூக மக்களுடனும் இன்று உறவாடி வருகின்றோம். நமது தாயகத்தின் நாளாந்த நடப்பு விவகாரங்களோடு நமது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும், உலக விவகாரங்களையும் அதனூடாகப் பகிர்ந்து வருகின்றோம்.
எமது புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தேவைகளையும், சேவைகளையும் இந்த இணையதளம் மூலம் நாம் வெளிப்படையாகவே பரிமாறிக் கொள்கின்றோம். இந்த வகையில் எதிர்காலத்தில் நமது தாயகத்திலும், சர்வதேசத்திலுமாக வெளிவருகின்ற ஏனைய இணையதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகவும் நாம் தொடர்பாடல்களை ஏற்படுத்தி அவற்றின் ஊடாகவும் எமது தாயகத்தினதும், சமூகத்தினதும் நிலைமைகளையும், நியாயங்களையும், நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
அன்பானவர்களே..!
இவ்வாறான ஒரு பரந்த பார்வையுடன் ஒரு சமூக இயக்கம் வளர்ச்சியடைந்து வருகின்றபோது அதனுள் கருத்து வேறுபாடுகளும், சீர்குலைக்கும் செயற்பாடுகளும் உருவாகுமென்பது இயற்கையானதே. ‘உங்களின் இரத்த நாளங்களுக்குள்ளேயே சபிக்கப்பட்ட சாத்தான் ஓடிக்கொண்டிருக்கிறான்’ என்ற இறைவனின் வாக்கிலிருந்து நாம்தான் இத்தகைய கருத்து வேறுபாடுகள், சீர்குலைப்புச் சூழ்ச்சிகள் குறித்து எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.
நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற வகையில் நம்மனைவரிடமும் குறைபாடுகளும், தவறுகளும் இருக்கவே செய்யும். அதனை ஏற்றுக் கொண்டு தவறுகளைத் திருத்தியும், குறைகளைக் களைந்தும் செயற்படுவோமாயின் நாம் இறைவனும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் விரும்பிய சமூகப் பார்வையுடைய மனிதர்களாக அவனது சமூகத்திற்குச் செல்ல முடியும்.
‘காலையில் எழுந்ததும் எவன் தன் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லையோ அவன் எனது சமூகத்தைச் சேர்ந்தவன் அல்ல’ என்பது அண்ணல் நபிகளாரின் அமுத வாக்காகும். ‘நான்’ என்ற மமதையையும், ‘என்னுடையது’ என்கிற அகங்காரத்தையும் நம்மில் அழித்து, ‘நாம்’ என்றும், ‘நம்முடையது’ என்றும் சமூகக் கூட்டுறவு அடிப்படையிலே நமது அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாயின் நாமும் சிறந்து நம்மைச் சுற்றியுள்ள சமூகமும் சிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உருவாகும்.
இங்கு நாம் நமக்காக மட்டும் வாழாது நமது உறவுகளுக்காகவும், நமது சமூகத்திற்காகவும், நாம் பிறந்த தாயகத்தின் நலனுக்காகவும் மனங்கொண்டு வாழ வேண்டும். அந்த அடிப்படையில் எமது சிறிலங்கா முஸ்லிம் புலம்பெயர் அமைப்பானது பின்வரும் சேவைத் திட்டங்களை உள்ளடக்கிய ஒரு குவியமாக இயங்கி வருகிறது என்பதயும் உங்களின் மேலான கவனத்திற்கு அறியத் தருகின்றோம்.
1. வறுமைக்கோட்டின் கீழ் சிறிலங்காவில் வாழும் நமது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு நன்கு பரிச்சயமுள்ள சுயதொழில்களைச் செய்வதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முதலீடுகளை வழங்குதல்.
2. வடக்கிலும் கிழக்கிலுமாக யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேறியுள்ள பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பாதணிகள், சீருடைகள், புத்தகப் பைகள், பாடப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் போன்றவற்றைக் கையளித்தல்.
3. முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் கஸ்டப் பிரதேசங்களில் அவர்களின் கல்வியை வளப்படுத்தும் வகையில் தகுதிவாய்ந்த போதனாசிரியர்கள், வளவாளர்களைக் கொண்டு கருத்தரங்குகளையும், பயிற்சி நெறிகளையும், மாதிரிப் பரீட்சைகளையும் நடாத்துதல்.
4. அதேபோன்று நாம் புலம்பெயர்ந்து வாழும் பிரித்தானியாவிலும் எமது முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் மார்க்க விளக்க வகுப்புக்கள், மார்க்கச் சொற்பொழிவுகள், குர்ஆன் தப்ஸீர் விரிவுரை வகுப்புக்கள் போன்ற எமது இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விழிப்பூட்டல் செயற்பாடுகளை ஏற்பாடு செய்தல்.
5. இலங்கையில் எமது அமைப்பினது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மாவட்டங்கள் தோறும் கிளைகளை அமைத்து அதனூடாக அந்தந்த மாவட்டங்களிலுள்ள பிரதேசங்கள், நகரங்கள், கிராமங்களில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எமது பங்களிப்புக்கள் சென்றடையச் செய்தல்.
6. யுத்தம் முடிவுற்றதன் பின் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் வணக்க ஸ்தலங்களுக்கும், இருப்புக்கும் எதிராக சில பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும், பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் எமது அவதானிப்புக்களை தெரியப்படுத்தி அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்துதல்.
7. இவ்வாறான கவலை தரும் நிகழ்வுகளின்போது பிரித்தானியாவில் வாழுகின்ற பௌத்த மதத் தலைவர்களையும், கல்விமான்களையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாடி அவர்களுடாக இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பௌத்த மதத் தலைவர்களுக்கும், பௌத்த சமூக மக்களுக்கும் அழுத்தங்களையும், அறிவுரைகளையும் ஊட்டி தேசிய நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, இன ஐக்கியம், சமூக சௌஜன்யம் போன்ற விடயங்களைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தல்.
8. எமது தாயகத்தில் வறுமை காரணமாக தமது மெய்வலிமைகளையும், ஆற்றல்களையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளிக்கொணர வழி தெரியாது மறைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்ற மாணவர்களையும், இளைஞர்களையும் அடையாளங்கண்டு அவர்களை விளையாட்டு மற்றும் மெய்வல்லுநர் துறைகளில் ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு, உடற்பயிற்சி உபகரணங்களை வழங்குதல்.
9.சிறுநீரகப் பாதிப்பு, இருதய அழுத்தம் போன்ற பாரிய நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெறுவதற்கு போதிய பொருளாதாரமின்றி தவிக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கு முடிந்தளவான நிதியுதவிகளை வழங்குதல்.
10. வடக்கு கிழக்கிலும், ஏனைய மாகாணங்களிலும் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அரசியல் விவகாரங்களையும், நெருக்கடிகளையும் அவதானித்து சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவை தொடர்பில் எமது அமைப்பின் அவதானிப்பையும், பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் தெரியப்படுத்தல்.
11. புனித றமழான் மற்றும் துல்ஹஜ் மாதங்களில் எமது அமைப்பின் மூலம் சேகரிக்கப்படுகின்ற பித்ரா, ஸதகா மற்றும் உழ்ஹிய்யா போன்ற அழ்ழாஹ்வின் பாதையிலான தான தருமப் பொருட்களையும், நிதிகளையும் எமது தாயகத்திலுள்ள மாவட்டக் கிளைகளின் ஊடாக முஸ்லிம் பிரதேசங்களிலும், கிராமங்களிலும் வாழுகின்ற தகுதிவாய்ந்த ஏழைகளுக்கு வழங்குதல்.
12. இவ்வாறே சுனாமி, சூறாவளி, வெள்ளம், மண்சரிவுகள், தீவிபத்துக்கள் போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் எமது சமூகத்தினருக்கு தாயகத்திலுள்ள மாவட்டக் கிளைகளின் மூலமாக உலருணவுப் பொருட்களையும், மருத்துவ சிகிச்சைகளையும், மறுவாழ்வுக்கான நிவாரண உதவிகளையும் வழங்குதல்.
13. சிறிலங்காவிலும், பிரித்தானியாவிலும் வாழுகின்ற தமிழ் – சிங்கள – முஸ்லிம் சமூகங்களின் மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தேசிய நலன்களைப் பேணுவதன் அவசியம், இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம், எண்ணக் கருத்துக்களின் பரிமாற்றத்திற்கு துணையாகவுள்ள பேசும் எழுதும் மொழிகளின் முக்கியத்துவம், நாட்டின் சட்டம் ஒழுங்கு ஐக்கியம் இறைமைக்கு அமைவாக நாம் வாழ்தலின் அவசியம், பிரிவினைச் செயற்பாடுகளின் விபரீதம், அடக்குமுறைகளினால் பிரசவிக்கப்படும் பயங்கரவாதம், புரிந்துணர்வின் மகத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் விழிப்பூட்டல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
14. அதேபோன்று, இங்கே பிரித்தானியாவிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இங்குள்ள ‘லங்காவின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றுக்கான நிவாரணங்கள், வழிகாட்டல்கள், மற்றும் உதவிகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
15. பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம் சிறுவர் சிறுமியர்கள், இளைஞர் யுவதிகள், மாணவ மாணவிகள் தொடர்பில் அக்கறையும், அவதானமும் செலுத்தி அவர்களின் கல்வி, தொழில், கலாசாரம், பொழுதுபோக்கு, மற்றும் திறனாற்றல்களை விருத்தியடையச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் பருவகால இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்வுகள், மெய்வல்லுநர் போட்டிகளையும் ஒழுங்கு செய்தல் போன்ற பல்வேறு வகையான செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டு தற்போது அவற்றில் கணிசமானவற்றில் ஈடுபாடு காட்டியும் வருகின்றோம்.
16. எதிர்காலத்தில் எமது அமைப்பின் ஊடாக எமது தாயகச் செய்திகளையும், பிரித்தானியாவிலும் சர்வதேச அரங்கிலும் நாம் முன்னெடுக்கும் பணிகளைப் பற்றியும், இங்கு வாழும் புலம்பெயர்ந்த மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்களினது எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் சஞ்சிகையொன்றை அல்லது பத்திரிகையொன்றை வெளிக்கொணர்வதற்கும் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எனவே, எமது அன்புக்குரியவர்களே..!
இவை எல்லாவற்றையும் நாம் இன்று இங்கே ஒன்று சேர்ந்து பேசிவிட்டு நாளையே செய்து முடித்து விட முடியாது. இதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்போடும், அல்லாஹ்வின் திருப்திக்காகவும் உழைக்க வேண்டும். இப்பெரும் உழைப்பில் ஈடுபடும் வேளையில் நம்மிடையே நம்மால் ஏற்படுகின்ற சிறு சிறு தவறுகளையும், குற்றங் குறைகளையும் பெருமனதுடன் பொருட்படுத்தாது அல்லது அவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவும், பக்குவமாகவும், நியாய தர்மங்களோடும் எடுத்துக்கூறி அவர்களும் திருந்தி மீண்டும் நம்முடன் இணைந்து பங்காற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
அந்த வகையில் நம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இச்செயற்திட்ட அறிக்கையை வாசித்தறியும் நீங்கள் உங்களின் முழுமையான பங்களிப்புக்களையும், மேலான ஆலோசனைகளையும் இவ்மைப்புக்கு வழங்கி ஒத்துழைப்பதுடன், இங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற உங்களின் நண்பர்களையும் உறவினர்களையும் இவ்மைப்புடன் இணைத்து மெலும் பலம் சேர்த்து பயன் பெற முன்வருமாறு விநயமுடன் வேண்டுகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது தூய எண்ணங்களையும், செயற்பாடுகளையும் அங்கீகரித்து அருள் செய்வானாக!
நன்றி வஸ்ஸலாம்! –
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– வார உரைகல் மூலமான மின்னஞ்சல்
Leave a comment