வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி கொட்டும் மழைக்கும் மத்தியில் தாறுஸ்ஸலாம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாறுஸ்ஸலாம் வீதியில் வசிக்கும் மக்கள் அடிக்கடி வெள்ளப் பெறுக்கினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வருவதால் குறித்த வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி இன்று 2013.01.04 தாறுஸ்ஸலாம் பகுதி மக்கள் கொட்டும் மழைக்கும் மத்தியில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக நீர் தேங்கி நிற்பதால் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள்; இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியே இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் உடனடியாக இதை புனரமைத்துத் தருமாறு காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் மஹஜரொன்றையும் கையளித்தனர்.

தொடர்ந்தும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசியும் பயனளிக்காததால் காத்தான்குடி பிரதேச செயலகத்தில்; குறித்த விடயம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை பிரதேச கிராம உத்தியோகத்தர் தாறுஸ்ஸலாம் பகுதி மக்கள் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் எடுக்கப்பட்ட சுமுகமான முடிவினால் ஆர்ப்பாட்டக்கார்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் குறித்த வீதியை புனரமைக்க கொந்தராத்துக்காரர்களிடம் ஒப்பந்தம் செய்து அவர்கள் தாமதித்ததாகவும் அதனை  வேறு கொந்தராத்துக்காரர்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும்  மழை முடிந்தவுடன் உடனடியாக வேலை ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment