மாணவர்களுக்கு ஊட்டப்படும் கல்வியானது அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களும் சமூகமும் தலை நிமிர்ந்து வாழ முடியும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.கடந்த 27ம் திகதி வியாழக்கிழமை மாலை காத்தான்குடி இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற PMGG யின் நான்காவது வருட ‘இலவச அப்பியாசக் கொப்பிகளை வறிய மாணவர்களுக்கு வழங்கி வைக்கும்’தொடக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு கூறினார்.
இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமியின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
உலகில் ஆரம்பக் கல்வி தொடக்கம் பல்கலைக் கழகக் கல்வி வரையிலும் இலவசக் கல்வியை வழங்கும் ஒரு சிறப்புமிக்க நாடாக நமது தேசம் உள்ளது. இந்த இலவசக் கல்விக்காக ஆண்டுதோறும் பல மில்லியன் ரூபாய்களை நம் நாடு செலவிட்டு வருகின்றது. மாணவர்களை நாட்டின் தலைமைத்துவத்திற்காகவும் தேசத்தை வளப்படுத்தி வறுமையையும் பிணக்குகளையும் ஒழிக்கக்கூடியவர்களாகவும் அவர்களை உருவாக்கி பொருளாதார அபிவிருத்தியையும் வளமான வாழ்வையும் அனவரின் வாழ்விலும் ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான பெருந்தெகைப் பணத்தை அரசாங்கம் கல்விக்காகச் செலவிட்டு வருகின்றது.
அதேவேளையில் இவ்வாறு கல்வி கற்று வெளியேறும் மாணவர்களுக்கு போதியளவு பொருத்தமான அவர்களின் தகைமைக்கேற்ற துறைசார்ந்த வேலை வாய்ப்புக்களை வழங்க முடியாத நெருக்கடியையும் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இக்கல்வியினால் நமது மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்பட்டால்தான் அதனால் அவர்களும் சமூகமும் பிரயோசனமடையும். சான்றிதழ்களுக்காகவும் பட்டங்களுக்காகவும் தொழில் வாய்ப்புகளுக்காகவும் கல்வி கற்க வேண்டும் எனும் நோக்கத்தை விடவும் தம்மில் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உண்டாகக்கூடிய எதிர்பார்ப்பில் கல்வியில் எமது மாணவ சமூகம் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் படித்து முடித்து எத்தகைய உயர்ந்த பெரிய பதவிகளை அடைந்து விட்டாலும் எம்மிடம் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இல்லாவிட்டால் நாம் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியாது. நாம் கல்விமான்களாகவும் புத்திஜீவிகளாகவும் உருவாகியதன் பின்னாலும் சுயமரியாதையற்ற அடிமைத்தனத்தில் வாழ்வதென்பது அர்த்தமற்ற வாழ்க்கையேயாகும்.
நாம் கடந்த வருடம் மாணவர்களுக்கு கையளித்த அப்பியாசக் கொப்பிகளில் ‘புத்திஜீவியென்பவர் அதிகமான புத்தகங்களைப் படித்து தலைக்குள் திணித்திருப்பவரல்ல என்றும் சமூகத்தில் இடம்பெறுகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் வெளிப்படுத்தி நீதி நியாயத்திற்காகக் குரல் எழுப்புவரே உண்மையான புத்திஜீவி என்றும் குறிப்பிட்டிருந்த சுலோகத்தை இவ்விடத்தில் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
எனவே பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியால் நமது சமூகமும் மாணவர்களும் தன்னம்பிக்கையாளர்களாக சுயமரியாதை கொண்டவர்களாக தமது சொந்தக் கால்களில் நிற்கக்கூடியவர்களாக உருவாக வேண்டும் என்பதே எமது இயக்கத்தின் முதன்மை இலட்சியமாகும்.அண்மையில் நமதூரிலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற சம்பவமொன்று நமது மாணவர்களின் சுயமரியாதையை இழக்கச் செய்து அவர்களிடம் அடிமைத்தனத்தை வளர்ப்பதற்கான பயிற்சியாக அமைந்திருந்ததை பெற்றோர்களான உங்களின் கவனத்திற்கும் நாம் சுட்டிக்காட் வேண்டும்.
அப்பாடசாலையில் இடம்பெறவிருந்த பௌதீக அபிவிருத்தி வேலையொன்றுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக வருகை தரவிருந்த அரசியல்வாதி ஒருவரை வரவேற்பதற்காக அன்று கல்வி கற்கச் சென்ற மாணவர்களை வகுப்பறைகளில் இருந்து அழைத்து வந்து அந்த அரசியல்வாதி வரும் வழியில் வரிசையாக காலை வெயிலில் பல மணி நேரம் நிறுத்தி வைத்த சம்பவமானது எமது மாணவர்களை அரசியல்வாதிகளின் அடிமைகளாகவே எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அப்பாடசாலை மண்டபத்தில் மாணவர்களை அவர்களின் சுயமரியாதையைப் பேணும் வகையில் அமர வைத்து அந்த அரசியல்வாதியை வரவேற்றால் அதனை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டாரா? இன்று எமது பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான மாணவர்களின் சுயமரியாதையைப் பேணாத நடவடிக்கைகளே நமது பிள்ளைகள் நன்கு படித்துப் பட்டங்கள் பெற்று கல்விமான்களாக உயர்ந்த பின்னரும் இந்த அரசியல்வாதிகளுக்கு தலை சொறிந்து வாழும் நிலையையே அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதனை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்ததும் சமாதானத்தையும் சகவாழ்வையும் நாட்டின் சுபீட்த்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் நேசித்த அனைத்து மக்களுமே நிம்மதியாகப் மூச்சு விட்டனர். இனி இந்நாடு இனக்குரோதங்கள் இல்லாதஇ இரத்த ஆறுகள் ஓடாத ஒரு அழகிய அமைதியான சமாதானத் தேசமாக மிளிரும் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், கடந்த ஈராண்டு காலமாக இந்நாட்டில் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தீவிரப் போக்குடையவர்கள் சிலரால் திட்டமிட்டமுறையில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் அமைதியையும் நிம்மதியையும் எதிர்பார்த்த மக்கள் மத்தியில் சந்தேகத்தைத் தோற்றுவித்து வருகின்றன.
எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் தொடங்கி தம்புள்ள, குருணாகலை, தெஹிவளை என்றெல்லாம் நகர்த்தப்பட்டு வந்து இறுதியாக இரண்டொரு தினங்களுக்கு முன்னதாக எம்பிலிப்பிட்டியாவில் வந்து நிற்கின்ற அச்சுறுத்தும் சம்பவங்கள் இந்த நம்பிக்கை தகர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.
இவ்வாறான அச்சுறுத்தும் நிகழ்வுகள் குறித்து நிறைவேற்று அதிகாரத்தையும் தம் வசம் கொண்டிருக்கின்ற அரசாங்கத் தரப்பினர் மௌனம் சாதித்தும்இ சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் இருந்து வருவதானது எமது சமூகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை நம்மிடையே இன்று பலமாக உருவாக்கியுள்ளது.
எமது சமூகத்திற்காகப் பேச வேண்டிய மக்களின் வாக்குகளைப் பெற்று மத்திய அரசாங்கத்திலும் மாகாண சபைகளிலும் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பவர்களும் எதுவுமே பேசாமல் மௌனமாகவே இருந்து வருகின்றார்கள்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் இரண்டு வாரங்களுக்கு மேல் இடம்பெற்றது. எமது சமூகத்தில் நிலவுகின்ற காணிப் பிரச்சினைகள் பாதுகாப்புப் பிரச்சினைகள் பொருளாதாரப் பிரச்சினைகள் போக்குவரத்துப் பிரச்சினைகள் கல்விப் பிரச்சினைகள் என ஒவ்வொரு அமைச்சுக்களினதும் திணைக்களங்களினதும் கீழ் நமது மக்கள் பிரதிநிதிகளால் பேசித் தீர்;வு காணப்பட வேண்டிய விடயங்கள் எத்தனையோ நிலுவையில் இருக்கின்றன.
ஆனால் ஆளுந்தரப்பிலுள்ள எந்தவொரு முஸ்லிம் அமைச்சரோ பிரதியமைச்சரோ உறுப்பினரோ நமது சமூகம் எதிர்கொண்டுள்ள எதிர்கொள்ளவுள்ள இவ்வாறான சமூகப் பிரச்சினைகளைப் பற்றி வாய் திறந்து பேசியதாக எந்தத் தகவல்களும் இதுவரைக்கும் இல்லை. இவர்கள் எமது சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டிய சபைகளில் பேசாமலிருப்பது ஒருபுறமிருக்க ஏனைய சமூகத்தினர் நம்மைப்பற்றி என்னதான் அங்கு பேசுகிறார்கள் என்பதையாவது விழிப்புடன் இருந்து அவதானிக்காமல் அங்கே தூங்கி வழிந்து கொண்டிருப்பதானது முழு முஸ்லிம் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது.
இறுதியாக எம்பிலிப்பிட்டியாவில் இடம்பெற்ற துரதிஷ்டமான சம்பவங்கள் தொடர்பாக ஆளுந்தரப்பிலுள்ள எந்தவொரு முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளும் குரலெழுப்பாது மௌனித்து உறங்கிய நிலையில் ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினரே அது தொடர்பில் குரலெழுப்பியுள்ளனர் என்பதையும் இங்கே நாம் சொல்லி வைக்க வேண்டும்.
நமது சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பேசிப் பெறுவதற்காகவும் கிடைக்கப் பெற்ற உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் நாம் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் அங்கே எமது சமூக உரிமைகள் பிரச்சனைகளைப் பேசிப் பெறுவதில் ஒற்றுமையுடன் குரல் எழுப்பாமல் நாடாளுமன்ற உணவுச்சாலையில் பன்றிக்கறி சமைக்கும் விடயத்தில் மாத்திரம் ஒருமித்தும் ஆட்சேபித்தும் குரல் எழுப்பி இருக்கிறார்கள்.நாடாளுமன்ற உணவுச்சாலையில் பன்றிக்கறி சமைப்பதை எதிர்ப்பதற்காகவா நமது சமூகம் இவர்களைத் தெரிவு செய்து அங்கே அனுப்பியது? அங்கே பன்றிக்கறி சமைக்கப்படுகிறது என்றால் அவர்கள் அங்கு சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அந்தளவு கூட நம் சமூகத்திற்காக தியாகம் செய்ய முடியாதவர்களை நாம் சட்டவாக்க சபைகளுக்கு இன்னமும் எமது பிரிதிநிதிகளாக அனுப்பி வைப்பதில் என்ன பலன் கிடைக்கப் போகின்றது?
இந்நாட்டில் சிறுபான்மை இனங்களாக வாழும் தமிழ் முஸ்லிம் சகூகங்களுக்குத்தான் அரசியல் ரீதியாகக் கிடைக்க மறுக்கப்படும் உரிமைகளை நீதிமன்றங்கள் ஊடாக வாதாடி வழக்காடிப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. எனவேஇ நாட்டில் நீதித்துறை சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் பேணப்படுவதற்கு சிறுபான்மை மக்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும். சமீப காலமாக நமது நாட்டில் அரசியல் அதிகாரத்திற்கும் நீதித்துறைக்கும் இடையில் ஒரு போட்டி நிலை உருவாகியுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பத்திரத்தில் நமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளும் கையொப்பங்களை இட்டு நீதித்துறையை அரசியல் அதிகாரத்துக்குள் கொண்டு வரத் தீர்மானித்திருப்பதென்பது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு பாரிய துரோகத்தனமாகவே கருதப்பட முடியும்.
கடந்த வாரம் இம்மண்டபத்தில் நடைபெற்ற நமது நகர சபையின் முப்பெரும் எழுச்சி விழவை எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மக்களின் நலன் கருதி பகிஷ்கரித்ததுடன் அதுதொடர்பான அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.
நமது மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படையான பிரச்சனைகள் எதையும் தீர்க்காமல் மாரி கால வெள்ளத்திலும் தொழில்கள் முடங்கி வருமான வழிகள் பாதிக்கப்பட்டும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் மக்களுக்கு கடுகளவேனும் நிவாரணங்களையும் உதவி உபகாரங்களையும் வழங்கக்கூடிய விழாக்களையும் நிகழ்வுகளையுமே அதிகாரங்களில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்வதுதான் சமூகப் பொறுப்புமிக்க தமக்கு அதிகாரமளித்த மக்களின் நலன் சார்ந்த செயற்பாடாகும்.
ரோம் நகரம் தீப்பிடித்து எரியும்போது நீரோ மன்னன் இசைக்கருவியொன்றை மீட்டிக்கொண்டு சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்த வரலாலொன்றை நாம் எல்லோரும் அறிந்துள்ளோம். அவ்வாறான சம்பவமொன்றுதான் நமது மண்ணிலும் கடந்த 21ம் திகதியன்று நமது நகர மக்கள் வெள்ளத்தாலும் மழையினாலும் பல வகையிலும் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் இந்த நகரத்தின் ஆட்சியாளர்களால் இம்மண்டபத்தில் ‘எழுச்சி விழா’ நிகழ்வு நடைபெற்றது. மக்களின் துன்பங்களைக் கருத்திற் கொள்ளாது மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கி அவ்விழா நடத்தப்பட்டதனால்தான் நாம் அவ்விழாவைப் பகிஷ்கரித்தோம்.
இந்த நகரத்தின் அடிப்படைப் பிரச்சினைகளில் மிக அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய முதன்மைப் பிரச்சினையாக மடுவப் பிரச்சினையை நாம் அடையாளப்படுத்தினோம். அதனால்தான் நகர சபைத் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்ற வேளையிலேயே ‘நாம் ஆட்சிப் பொறுப்பைச் சுமந்தால் ஆறு மாத காலத்திற்குள் மடுவப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நவீன மடுவம் ஒன்றை அமைப்போம்’ என்பதைப் பகிரங்கமாகவே இம்மக்களிடம் தெரிவித்தோம். ஆனால், தேர்தல் பிரச்சார காலத்தில் இம்மடுவப் பிரச்சனையை ஒரு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகக் கருதாமலும் அதுகுறித்து எதுவுமே மக்களுக்குச் சொல்லாமலும் மறந்திருந்தவர்கள் அல்லது மறைத்து வந்தவர்கள் இந்நகரத்தின் ஆளுந்தரப்பினராக வந்த பின்னரும் அதைப்பற்றி அக்கறையற்றவர்களாகவே இருந்து வந்தனர்.
நாம் நமதூரின் முக்கிய தேவையாக் கருதியிருந்த மடுவப் பிரச்சினையைத் தீர்க்கும் நன்னோக்கத்துடன் எமது செலவிலேயே நவீன மடுவமொன்றை நிர்மானிப்பதற்கான செயற்திட்ட அறிக்கையைத் தயாரித்து அதனை நகர சபையின் ஆளுந்தரப்பினருக்கும் இவ்வூரிலுள்ள சமய சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் கையளித்தோம்.
சம்மேளனம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த சமய சமூக அமைப்புக்கள் பலவும் எமது இயக்கத்தின் நோக்கத்தையும் செயற்திட்ட அறிக்கையையும் வரவேற்றிருந்த போதிலும் நகர சபையின் தவிசாளர் மக்களின் பிரச்சனைக்கு எவ்வழியிலாவது தீர்வைக் காண வேண்டும் என்கிற பெருந்தன்மையுடன் எமது வேண்டுகோளைக் கருத்திற் கொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்வுக் கண்ணோட்டத்துடன் அதனை நோக்கி அதற்கான அங்கீகாரத்தை அளிப்பதில் விடாப்பிடியாக மறுத்து விட்டார்.
அதனால் நாம் அத்திட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்து விட்டு தவிசாளர் பதிலுக்கு அவசர அவசரமாகத் தயாரித்து சமர்ப்பித்திருந்த ‘நவீன இஸ்லாமிய மடுவத்தையாவது ஆளுந்தரப்பினர் அமைக்கட்டும் என்ற நல்லெண்ணத்துடன் வழிவிட்டு ஓதுங்கிக் கொணடு அவரது திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்பார்த்திருக்கின்றோம். இந்நிலையிலும் தவிசாளரின் மடுவத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள குறைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய திருத்தங்களையும் நாம் பொதுமக்களும் விளங்கிக் கொள்ளத்தக்கதாக எமது வெளியீடுகள் மூலம் பகிரங்கமாகவே தெரியப்படுத்தியும் இருக்கின்றோம்.
இப்போது நீதிமன்றத் தீர்ப்பின்படி நமது மடுவம் மூடப்பட்டு எதிர்வரும் ஜனவரி முதல் திகதியோடு ஓராண்டு பூர்த்தியாகின்றது. நாட்டின் சட்டத்தையும் நமது மக்களின் சுகாதார நலன்களையும் நமது மார்க்கம் எடுத்தியம்புகின்ற ஹறாம் – ஹலால் விழுமியங்களையும் கவனத்திற்கெடுக்காத நிலையிலேயே இன்று கண்ட கண்ட இடங்களிலும் தனியார் வளவுகளிலுமாக கால்நடைகள் இப்பிரதேசத்தில் இறைச்சிக்காக அறுத்து மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்வாறே திண்மக்கழிவகற்றல் தொடர்பில் நகர சபையினால் வரியிறுப்பாளர்களுக்குச் செய்து கொடுக்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவையும் இன்று முறையான திட்டங்களில்லாமல் முடங்கியுள்ளன. இதனால் நமது அன்றாடம் மக்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களும்இ சுகாதாரச் சீர்கேடுகளும் இன்றைய ஆளுந்தரப்பினர் இச்சபையைப் பொறுப்பேற்க முன்னர் காணப்பட்டதை விட தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றன. மக்கள் இத்திண்மக்கழிவகற்றும் அத்தியாவசியத் தேவைக்காக ஆளுந்தரப்பினர் நிதியுதவி வழங்குமாறு கேட்டிருந்தபோது தமது நிதிப் பங்களிப்புக்களை வழங்கி ஒத்துழைத்தும் அப்பிரச்சினை இன்னும் தீர்ந்ததாக இல்லை.
இவ்வாறே வடிகான் பிரச்சினையும் காணப்படுகிறது. திட்டமிடப்படாத தொழில் நுட்பத் திறன்களைக் கொண்டிராத கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட வடிகான்களால் கழிவு நீரும் வெள்ள நீரும் வடிந்தோடுவதற்குப் பதிலாக அவை தனியார் வளவுகள், வீடுகள், வீதிகள், மையவாடிகள் என எங்கு பார்த்தாலும் பரவித் தேங்கிக் காணப்படுகின்றன.
இப்படியான அவலங்களுக்கு மத்தியில்தான் இந்நகர மக்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது யதார்த்தமாகும். ஆனால் ஈச்சை மரங்களோடு காணப்படுகின்ற பிரதான வீதியை மாத்திரம் பார்ப்பவர்கள் இந்நகரத்து மக்கள் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாகவும் சுகமாகவும் வாழ்வதாகக் கருதுகின்றார்கள். இந்த எழுச்சி விழாவில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரைப் புரட்டிப் பார்க்கும் அயலகப் பிரதேச மக்களும் கல்விமான்களும் காத்தான்குடியில் ஒரு வருடத்தில் இத்தனை மில்லியன்களுக்கு அபிவிருத்தி நடைபெற்றுள்ளதே என மூக்கில் விரல் வைத்து வியந்தும் போவார்கள்.
கடந்த வருடத்தில் 2 ½ கோடி ரூபாவுக்கும் அதிகமாக தொகையில் எமது நகரத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்றுள்ளதாக நகர சபை வெளியிட்ட புத்தகத்தில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளது. உண்மையில் இவ்வளவு பாரிய தொகைக்கான வீதி அபிவிருத்திகள் நமதூரில் எங்கே நடைபெற்றுள்ளது?
இந்த வீதிகள் அமைப்பதற்கான பணிகளை இப்பிரதேசத்திலுள்ள சமுர்த்திச் சங்கங்களுக்கும் ஏனைய சமூக அமைப்புக்களுக்கும் ஒப்பந்தம் செய்து கையளித்ததாக நகர சபைப் புத்தகத்தில் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் அறிந்த வரையில் அவ்வாறு எந்தவொரு சங்கமும் அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அங்கத்தினர் சகிதம் களத்தில் இறங்கி வீதியமைக்கும் வேலைகளில் ஈடுபட்டதை நாம் காணவில்லை. நீங்களும் அவ்வாறு கண்டிருக்க மாட்டீர்கள். எப்போது பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் கட்டிடக் கொந்தராத்துக்காரர்கள்தான் அவர்களது வாகனங்கள் இயந்திரங்களைக் கொண்டு சென்று வீதிகளில் இறக்கி வைத்து வீதியமைக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதிலிருந்து இவ்வளவு பெரிய தொகையுடைய அத்தனை வீதிகளையும் சில கட்டிடக் கொந்தராத்துக்காரர்களே ஒப்பந்தம் செய்து கொண்ட சங்கங்களிடமிருந்து கொமிஷன் அடிப்படையில் பெற்றுச் செய்திருக்கின்றனர் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் நன்கு புலனாகின்றது. தற்போது இவ்வாறான வீதியமைப்புக் கொந்தராத்துக்களுக்கு 20 – 30 வீதம் கொமிஷன் தொகை வழங்கப்படுவதாக அறிகின்றோம். அவ்வாறு பார்த்தாலும் பல இலட்சம் ரூபாய்கள் பல தரப்பினருக்கும் கொமிஷன் தொகைகளாக வழங்கப்பட்டிருக்கலாம்.
உண்மையில் நகர சபை ஆளுந்தரப்பினர் இவ்வீதிகளை அமைத்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் தமது கைகள் சுத்தமானவைதான் என்பதை பொதுமக்கள் முன்னிலையில் நின்று சத்தியம் செய்து உறுதிப்படுத்துவார்களா? ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொண்ட சங்கங்களின் பெயர்ப்பட்டியலைப் புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளவாறு அவற்றைச் செய்த கொந்தராத்துக்காரர்களையும் அவர்களால் எத்தனை வீதம் கொமிஷன் தொகை பெறப்பட்டது என்பதையும் இதேபோன்று பட்டியலிட்டு வெளிப்படுத்துவார்களா?
அண்மையில் கொங்றீட் வீதியாகப் போடப்பட்ட இரும்புத் தைக்கா வீதியில் மண் ஏற்றிச் சென்ற லொறியொன்றின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவ்வீதி உடைந்து சேதமாகியுள்ளது. அவ்வீதியில் வாழும் மக்கள்இ எமது புத்தம் புதிய வீதியை லொறி உடைத்து விட்டதாகக் குறைபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த’கொந்தராத்துக்காரர்களால் போடப்படும் கொங்றீட் வீதிகளின் இரகசியம்’ தெரிந்த ஒருவர் ‘லொறியால் கொங்றீட் வீதி உடைக்கப்படவில்லை. மாறாக லொறியின் பாரத்தைத் தாங்க முடியாத அளவுக்கு தரமற்ற முறையில் அந்த கொங்றீட் வீதி போடப்பட்டிருப்பதை அம்மக்களுக்கு எடுத்து விளக்கியதைத் தொடர்ந்து அவர்கள் அதன் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டனர்.
இவ்வாறான அநீதிகளும் அக்கிரமங்களும் ஊழல் மோசடிகளும் கொந்தராத்துக் கொமிஷன்களும் இடம்பெற்று வரும் காலத்தில்தான் நாம் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் எமது பிள்ளைகளைக் கல்வி கற்பிப்பதில் ஆர்வமாக ஈடுபடுத்தி வருகின்றோம். இந்தக் கல்வியினால் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்படும்போதுதான் அவர்களும் நமது சமூகமும் கல்வியால் கிடைக்க வேண்டிய பிரயோசனங்களைப் பெற்று தலை நிமிர்ந்து வாழ முடியும் – இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Leave a comment