சட்டக் கல்லூரிக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கும் தனக்கும் எதுவித தொடர்பும் கிடையாது எனவும் தனது தலையீட்டினால் முஸ்லிம் மாணவர்கள் கூடுதலாக தெரிவானதாக தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பரீட்சைத் திணைக்களத்தினூடாகவே சட்டக் கல்லூரி அனுமதிக்கான பரீட்சை நடத்தப்பட்டதோடு சட்டக் கல்வி கவுன்ஸிலே இவை தொடர்பிலான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டக் கல்லூரி மாணவர் தெரிவு தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ள அவர், சில அமைப்புகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார்.
நாட்டில் இன நல்லுறவையும் சமாதானத்தையும் நிலை நாட்ட அரசாங்கம் செயற்பட்டு வருகையில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தவறான குற்றச்சாட்டுகளை சிலர் முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரி தெரிவில் முதல் மூன்று இடங்களையும் முஸ்லிம் மாணவர்கள் பெற்றதோடு முதல் 50 இடங்களில் 28 முஸ்லிம்கள் இருப்பது குறித்து தேசிய கல்வியாளர் பேரவை எனும் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. முஸ்லிம் மாணவர்களுக்கு வினாத்தாள் முன்கூட்டி கசியவிடப்பட்டதாகவும் சட்டத்துறையை முஸ்லிம்மயமாக்க அமைச்சர் முயல்வதாகவும் அதன் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவை அனைத்தும் அரசியல் நோக்கில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களாகும் என மறுத்துள்ள அமைச்சர், மாணவர் தெரிவு தொடர்பான விடயங்களை சட்டக் கல்வி கவுன்ஸிலின் வழிகாட்டலின் கீழ் சட்டக் கல்லூரியே முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
சட்டக் கல்வி கவுன்ஸிலுக்கு அமைச்சர் 6 உறுப்பினர்களை நியமிக்கிறார். சட்டத்துறை சார் அறிவுள்ளவர்கள் இதற்கு நியமிப்பதோடு ஏனைய 7 உறுப்பினர்களாக பிரதம நீதியரசர், சட்ட மா அதிபர், பிரதம நீதியரசர் சிபார்சு செய்யும் இரு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், சொலிஸிட்டர் ஜெனரல், சட்டத்தரணிகள் சிபார்சு செய்யும் இருவர், நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அடங்குவர். சட்டக் கல்வி கவுன்ஸில் தலைவராக பிரதம நீதியரசரே உள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
–தினகரன்
Leave a comment