ஈரான் தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா செல்வதற்கு எதிராக பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் 5 மணி நேர விசாரணைக்கு மத்தியில் ஈரான் பிரஜை ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்தே ஈரான் இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
‘இன்றியமையாத காரணங்களை தவிர அமெரிக்கா செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஈரான் பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபாயத்தை தவிர்க்கும் வகையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரமின் மெஹ்பன்பரஸ்ட் அந்நாட்டின் ‘இஸ்னா’ செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.
ஈரான் பிரஜைகளுக்கு அபாயகரமான இடமாக அமெரிக்கா விளங்குகிறது என்று கூறிய அவர் அமெரிக்கா ஈரானோபோபியாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஈரானிய பிரஜைகள் அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்படுவதன் மூலம் உறுதியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் 73 வயதான டரியுஸ் சரஷ்டா என்பவர் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் 5 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்துள்ளார். இதனையடுத்தே ஈரான் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எந்த ராஜதந்திர உறவுகளும் பேணப்படுவதில்லை. அத்துடன் ஈரானின் அணு செயற்பாடுகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக முறுகல் நீடிக்கிறது.
மறுபுறத்தில் கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி அமெரிக்கா, ஈரானுக்கான பயண எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை புதுப்பித்தது.
– தினகரன்
Leave a comment