க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விஞ்ஞான பாட பகுதி I வினாத்தாள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவரும் நேற்று சி.ஐ.டி.யினரால் விசாரணைக் குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இதேவேளை விஞ்ஞானபாட பகுதி I வினாத்தாள் வெளியாகிய சம்பவத்துடன் தொடர்புபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவானின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மேற்படி இருவரினதும் வாக்கு மூலங்களுக்கு அமையவே பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவரை நேற்று சி.ஐ.டி.யினர் விசாரணைக்குட்படுத்தியதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். கடந்த 15 ஆம் திகதி விஞ்ஞானப்பாட பரீட்சை நடைபெற்றது.
அதன்போது பரீட்சை வினாத்தாளில் வெளியாகியிருந்த 12 கேள்விகள் ஒரே வடிவமைப்பில் மேற்படி ஆசிரியரால் வெளியிடப்பட்டிருந்த மாதிரி வினாத்தாளில் இருந்தமையையடுத்து, பெற்றோரின் முறைப்பாடுகள் அதிகரித்தன. அதனைத் தொடர்ந்தே சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
-தினகரன்
Leave a comment