பல சர்ச்கைகளுக்குப் பின்னர் இருநாடுகளின் கிரிக்கட் சபையின் இனக்கத்திற்கு ஏற்ப, 4 வருடங்களுக்குப் பின்னர், இரு அணிகளுக்குமிடையிலான ஓர் தொடரை இந்தியாவில் நடாத்த இந்திய கிரிக்கட் சபை முடிவு செய்திருக்கின்றது.
இரு நாட்டு இரசிகர்களுக்கு மாத்திரமன்றி உலக கிரிக்கட் இரசிகர்களின் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளாகவும் இவ்விரு நாடுகளுக்கிடையிலான போட்டிகள் அமைகின்றன.
இறுதியாக இவ்விரு நாடுகளுக்குமான தொடர் 2008ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் பாகிஸ்தானில் இடம்பெற்றிருந்தது. 2008 டிசம்பர் மும்பாய் துப்பாக்கிச் சம்பவத்திற்குப் பின்னர் பாகிஸ்தானுடன் விளையாடும் தொடர்களை இந்தியா இரத்துச் செய்திருந்தது. அதன் பின்னர் உலகக் கிண்ணப் போட்டிகளிலும், ஆசியக் கிண்ணப் போட்டியிலும் இரு அணிகளும் சந்தித்திருந்தன.
இரு அணிகளும் 1952ல் இருந்து விளையாடி வருகின்ற போதிலும் இரு நாடுகளுக்குமிடையில் அவ்வப்போது ஏற்படும் யுத்தங்கள், கருத்து முரண்பாடுகளால் இத்தொடர்கள் இரத்துச் செய்யப்பட்டு வந்திருந்தன.
அந்த வகையில் 1965-1971 காலங்களில் இரு நாடுகளுக்குமிடையில ஏற்பட்ட யுத்தங்கள், 1999 கார்கில் சண்டை மற்றும் 2008ல் மும்பாயில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் போன்றவற்றால் வருடந்தோரும் விளையாடிவரும் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்கள் இரத்துச் செய்யப்பட்டதுடன், இரு நாடுகளையும் நம்பி சுற்றுப் போட்டிகளை நடாத்தும் தொடர்களும் இரத்துச்செய்யப்பட்டிருந்தன. அவற்றுள் சஹாரா, ஸார்ஜா, டொரண்டோ சுற்றுப் போட்டிகளைக் குறிப்பிட முடியும்.
இரு நாடுகளையும் விளையாட வைத்து பல மில்லியன்களை சம்பாதித்த பல கம்பனிகளும், அனுசரணையாளர்களும் மற்றும் விளம்பரதாரர்களும் இவ்விரு நாடுகளுக்குமிடையிலான போட்டிகள் நடைபெறாததால் நஷ்டமடைந்தனர். அதைவிட சூதாட்டத்தில் ஈடுபடுவோரும், அதன் தரகர்களும் இலாபமீட்ட முடியாமல் சுருண்டு விழுந்தனர்.
இவ்விரு நாடுகளையும் விளையாட்டில் மோதவிட்டு இலஞ்சத்தில் பிழைப்பு நடாத்தும் சூதாட்டக்காரர்கள் குறிப்பாக சார்ஜா போட்டிகளில் அப்போது செல்வாக்குச் செலுத்தியிருந்தனர். தாவூத் இப்றாஹீம் எனும் பிரபல சூதாட்டக்காரக்குழுவால் அஸாருத்தீன், ஜடேஜா, கபில்தேவ் போன்ற பிரபல இந்திய கிரிக்கட் வீரர்கள் தங்களது கிரிக்கட் வாழ்க்கையில் நிலைக்க முடியாமல் சென்றதும் இரசிகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
இவ்வாறிருக்க, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி இந்தியாவில் 5 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமாகிறது. 18, நவம்பர் 2007ல் ஜெய்ப்பூர் மைதானத்தில் இவ்விரு அணிகளும் இந்தியாவில் இறுதியாக விளையாடி இருந்தன.
உலக மக்களின் அபிலாசைகள் நிறைந்த போட்டியாக கருதப்படும் இப்போட்டிகளில் பல விளம்பரதாரர்களும், ஒளிபரப்பாளர்ளும் பல மில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
இன்று முதலாவது இருபது20 போட்டி பெங்களுர் சின்னச்சுவாமி மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை இடம்பெற்ற 3 இருபது20 போட்டிகளில் மூன்றிலுமே இந்தியாவே வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
1978 இல் இருந்து ஆரம்பமான இரு அணிகளுக்கிடையிலான 126 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 69 போட்டிகளில் பாகிஸ்தானும், 48 போட்டிகளில் இந்தியாவும் வெற்றிபெற்றிருக்கின்றன. 4 போட்டிகள் வெற்றி தோல்வி இன்றியும், 5 போட்டிகள் கைவிடப்பட்ட நிலையிலும் முடிவுற்றிருந்தன.
29 போட்டிகள் இந்தியாவிலும், 27 போட்டிகள் பாகிஸ்தானிலும், 26 போட்டிகள் சார்ஜாவிலும் மற்றும் 46 போட்டிகள் பொது இடங்களிலும் விளையாடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இவ்விரு அணிகளும் ஒருநாள் சர்வதே போட்டியில் ஆசியக் கிண்ணத்தில் பங்களாதேஸ்-மேர்பூர் மைதானத்தில் 18 மார்ச் 2012 இல் சந்தித்திருந்தன. இப்போட்டியில் 6 விக்கட்டுக்களால் இந்தியா அபார வெற்றிபெற்றிருந்தது.
சாதாரணமாக 5 ஒருநாள் தொடராகவும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்தாகவும் அமையும் ஓர் தொடருக்கு மத்தியில் 2 இருபது20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஓர் சிறு தொடராக அமைந்துள்ளமை மாத்திரமல்லாது, டெஸ்ட் போட்டிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
வெளிநாட்டினர், பாகிஸ்தான் வரையறுக்கப்பட்ட இரசிகர்கள் உட்பட இந்திய இரசிகர்களால் இன்று மாலை அதிரப்போகும் சின்னச்சுவாமி மைதானத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் போரிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!
![indiapakistananotherflag12[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/indiapakistananotherflag121.jpg?w=151&h=164)
Leave a comment