மஹேலவின் அதிருப்தியும் ஓய்வை அறிவிக்க இருக்கும் சக வீரர்களும்…

Adaptability-will-be-the-key-against-Pakistan-Mahela-Jayawardene[1]-MJ

உலக முதல்தர கிரிக்கட் வீரர்களின் ஒருவரும் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன, அவுஸ்திரேலியாவில் வைத்து சில தினங்களுக்கு முன்னர் தான் அணித் தலைமைப் பதிவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், தனது எதிர்கால கிரிக்கட் பற்றி யோசிக்கவிருப்பதாகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணி ஓர் வெற்றித்தொடருடன் மீண்டும் இலங்கை வருவதையே விரும்பிச் சென்ற இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தனாவின் இம் முடிவினால் சக வீரர்களும் உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் இதனைத் தொடர்ந்து குமார் சங்கக்கார, தில்சான் ஆகியோர் தங்களது ஓய்வு பற்றி விரைவில் அறியத்தரவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

நடந்தது என்ன?

இவ்வருடம் இலங்கையில் நடைபெற்ற உலக இருபது20 போட்டிகளின் போது சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தினால் இலங்கைக் கிரிக்கட் சபைக்கு வழங்கப்பட்ட நிதியில் குறிப்பிட்ட சதவீதம் தொடரில் பங்கெடுத்த அல்லது பட்டியல் படுத்தப்பட்டிருந்த  வீரர்களுக்கும், உதவி பயிற்சியாளர்கள், உதவி முகாமையாளர்கள், மருத்துவர்கள், இடைநிலை வீரர்கள் ஆகியோருக்கும்  பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

எனினும் இத்தொடர் இடம்பெற்று 3 மாதங்களாகியும் இதுவரை மேற்சொன்ன எவருக்கும் குறித்த பணத்தொகை பகிர்ந்தளிக்கப்படாமல் தட்டிக்களிக்கப்பட்டு வருவதால், இத்தகைய பணப்பங்கீடுகள் யார், எவருக்கு எவ்வாறு பங்கிடப்பட வேண்டும் என்ற ஓர் ஆலோசனைக் கடிதத்தினை இரகசியமாக இலங்கைக் கிரிக்கட் செயலாளருக்கு மஹேல அனுப்பி வைத்திருந்தார்.

இலங்கைக் கிரிக்கட் சபைக்கு மாத்திரமே தெரியவேண்டிய தனது இரகசியக் கடிதமும் அதன் விபரங்களும்  இலங்கையின் பிரபல ஆங்கலப்பத்திரிகை ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்திருந்தது. ‘தனது இரகசியக் கடிதம் ஊடகம் ஒன்றுக்கு எவ்வாறு கசிந்தது? என்பதுதான் மஹேலவின் மனக் குழப்பத்திற்கு பிரதான காரணமாக அமைகின்றது.

இந்நிலையில், குமார் சங்கக்கார, டில்சான் ஆகியோர் அணியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக யோசித்து வருகின்றனர். தங்களது வயது முதிர்ச்சியைக் கருத்திற்கொண்டு தாங்கள் இவ்வாறான முடிவை எடுப்பதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.

2011 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை தோற்றதிலிருந்து இலங்கை அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கட் சபைக்கும் இடையில் பாரிய இழுபறிகளும் மனக் கசப்புக்களும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

2011 உலகக் கிண்ண போட்டி சம்பளத்தொகையினை சரிவர வழங்காமல் அண்மைக்காலம் வரை இலங்கை கிரிக்கட் சபை இழுத்துக் கொண்டு வந்ததும் பகிரங்கமான விடயமே!

எதிர்வரும் புதன்கிழமை மெல்போர்ன் நகரில் இடம்பெற இருக்கின்ற புகழ்பெற்ற ‘பொக்ஸிங் டே’ போட்டியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாட இருக்கின்றது. போட்டி பலமானதாக அமைந்தாலும் வீரர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் கண்டாளும், அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியைக் காண முடியாமல் இருப்பது இலங்கை இரசிகர்களுக்கு கவலையளிக்கும் விடயமாக இருக்கின்றது.

எனவே இலங்கை கிரிக்கட் சபையின் நல்லபிப்பராயங்களும் நேர்மையான செயற்பாடுகளுமே இலங்கை வீரர்களை மனதளவில் மகிழ்வித்து ஒருமித்த வெற்றியை நாட்டுக்குப் பெற்றுக்கொடுக்க உதவும்.

Published by

Leave a comment