மழை குறைந்தது; வெள்ளம் வடிகிறது: மூன்று இலட்சத்து 15 ஆயிரம் பேர் பாதிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருவதுடன் வெள்ள நீர் வடிந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

பிரதான வீதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால் துண்டிக்கப்பட்டிருந்த சகல போக்குவரத்துகளும் நேற்று வழமைக்குத் திரும்பின.

சகல இடங்களுக்கும் பயணிகள் பஸ் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முகாமையாளர் ரோஹண வட்டகே தெரிவித்தார். புத்தளம் – சிலாபம் வரையிலான ரயில் சேவையை தவிர்த்து ஏனைய அனைத்து பிரதேசங்களுக்குமான ரயில் சேவைகள் சீராக இடம்பெற்று வருவதாகவும் திணைக்களத்தின் திட்டப் பணிப்பாளர் விஜய சமரசிங்க கூறினார்.

கடந்த மூன்று தினங்களுடனும் ஒப்பிடுகையில் நேற்று மழை வீழ்ச்சி குறைவடைந்திருப்பதாக வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, தொடர்ச்சியாக பெய்த அடைமழை வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத்லால் குமார நேற்று தெரிவித்தார்.

மேலும் மேற்படி அனர்த்தங்கள் காரணமாக 36 பேர் காயமடைந்திருப்பதாகவும் 14 பேர் வரையில் காணாமற் போயிருப்பதாகவும் அவ்வதிகாரி ஊர்ஜிதம் செய்தார்.

குருநாகல், மட்டக்களப்பு, பொலன்ன றுவை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் மழையினாலும் மாத்தளை, நுவரெலியா, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்கள் மண்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக நேற்று வரை 80 ஆயிரத்து 534 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 14 ஆயிரத்து 916 பேர் வரை நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுள் 5 ஆயிரத்து 421 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 341 பேர் தற்போது 169 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளரெனவும் சரத்லால் குமார கூறினார்.

அத்துடன் வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக 337 வீடுகள் முழுமையாகவும் 2075 வீடுகள் பகுதியளவில் சேதமடை ந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பதிவாகியுள்ளதென அவர் குறிப்பிட்டார்.

 நீரேந்துப் பிரதேசம்

இதேவேளை, மழை வீழ்ச்சியினளவு குறைவடைந்துள்ளமையை தொடர்ந்து நீரோந்துப் பிரதேசங்களின் நிலைமை வழமைக்குத் திரும்பியிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.

71 நீர் நிலைகளின் 35 நீர் நிலைகள் நிரம்பியுள்ளதாகவும் 14 நீர் நிலைகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய மழை நிலைமைகளுக்கு அமைய அநுராதபுரத்திலுள்ள நுவரவெவ நீர்த்தேகத்தின் வான்கதவு திறக்கப்பட்டதுடன் இராஜாங்கனையில் மேலதிகமாக ஒரு சில வான்கதவுகள் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குருநாகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய நீரேந்துப் பிரதேசங்களில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதுடன் பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவொன்றினை மூடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் மீண்டும் காலநிலையில் சிறிய மாற்றம் ஏற்படக்கூடுமென வானிலை அவதான நிலையம் கூறுகிறது.

வானிலையியல் ஏற்பட்டு வரும் அலை வடிவிலான குழப்ப நிலைக் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் கிடைக்கக்கூடிய மழையினளவு மீண்டும் சற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் சமகிபுரவைச் சேர்ந்த நபரொருவர் காணாமற் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியது. குறித்த நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் விழுந்திருக்க வேண்டுமென குடும்பத்தவர்கள் எண்ணுகின்றனர்.

அத்துடன் கெக்கிராவையில் வெள்ளத்தில் சிக்குண்ட கெப் வாகனமொன்றை ஊர் மக்கள் மீட்க முயற்சித்தும் இயலாமல் போனதால் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் வாகனத்தை மீட்கும் முயற்சிகள் முன்னெடு க்கப்பட்டன.

-தினகரன்

Published by

Leave a comment