-MJ
இம்மாதம் 21ம் திகதி விடிவது உலக அழிவு நாள் அல்லது 21ம் திகதி முடிவது உலக அழிவு நாள் என்ற கேள்விகளுக்கும், தடுமாற்றங்களுக்கும், வதந்திகளுக்கும் இடையில் இன்றைய உலக மக்களின் நிலை இருக்கின்றது.
இதற்கிடையில் நாஸா அறிவித்திருந்தாலும், நாஸாவில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களில் அதிகமானோர் 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். உலக மக்களில் 2.1 பில்லியன் மக்கள் இப்பண்டிகைகையை கொண்டாடுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் நாஸாவின் பிறப்பிடமான அமெரிக்காவில் மிக மிக விமர்சையாகவும், அமெரிக்காவை பின்பற்றும் ஏனைய ஐரோப்பா நாடுகளிலும் மிக விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும், வீதி அலங்காரங்களும், பண்டிகை கொள்வனவுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
தங்களது வேலைகளில் மாத்திரம் கருத்திற்கொண்டு தினம் தோரும் தேவையான நடிவடிக்கைகளில் அம்மக்கள் தங்களை அரப்பணித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனினும், இலங்கை, இந்தியா மற்றும் கிழக்காசியாவில் வாழும் மக்கள் ’21ம் திகதி உலகம் அழியும்’ என்ற எண்ணத்துடன் நாட்களை எண்ணி, தற்பொழுது நிமிடங்களை கணக்கிட்டு வருகின்றனர்.
இதைவிட இலங்கை தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்ட நாஸாவின் ஒளிப்பதிவுகளை பார்த்த மக்கள் உண்மையில் உலகம் 21ம் திகதி அழிந்தே விடும் என்றே இருந்து வருகின்றனர்.
முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் உலகம் ‘டிசம்பர்21ம் திகதி’ அழியும் என்பதை ஏற்றுக் கொண்டால் அவன் இஸ்லாத்தை விட்டும் அப்புறப்படுத்தப்பட்டவனாகின்றான்.
உலகம் அழிவதை அல்குர்ஆனும், இறைத்தூதர்களும் எவ்வாறு உறுதிப்படுத்தினார்களோ அதன்படி இவ்வுலகம் அழிந்துவிடும். உலகம் அழியும் நாளே இறுதி நாள் என இஸ்லாம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது.
உலகம் அழியும். ஆனால் அது எப்போது எத்தனையாம் திகதி, எந்நேரத்தில் அழியும் என அறிந்தவன் இறைவன் ஒருவனே!
இச்சந்தேகம் நபிகளாரின் காலத்தில் இறை நிராகரிப்பாளர்களிடமும், முஸ்லிம்களிடமும் தோன்றியது. அப்போது இறைத்தூதரை நோக்கி கேட்கப்பட்ட ‘இறுதிநாள் எப்போது தோன்றும்?’ என்ற கேள்விக்கு இறைத்தூதர் அவர்கள் கட்சிதமான முறையில் தெட்டத்தெளிவான முறையில் இச்சமுதாயத்துக்கு தெளிவு படுத்திச் சென்றிருக்கின்றார்கள்.
அவற்றுள் பிரதானமாக..
* மதீனாவில் 3 பூகம்பங்கள் இடம்பெறும்.
* தஜ்ஜால் வெளிப்படலும், கொல்லப்படலும்
* யஹ்ஜூஜூ மஃஜூஜ் கூட்டத்தினர் வெளிப்படல்
* மஹ்தி அலை அவர்கள் தோன்றல்
* மெலிந்த கால்களை உடைய கறுப்பினத்தவர்களால் கஃபா இடிக்கப்படும்.
* ஈஸா அலை அவர்கள் வானில் இருந்து இவ் உலகுக்கு இறங்குதல்.
* ஓர் அதிசயப் பிராணி பேசுதல்.
* சூரியன் மேற்கில் உதித்தல்
இவ்வாறு இறுதித்தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ‘இத்தனை விடயங்களும் நடைபெறாமல் உலகம் அழியாது’ என தெட்டத்தெளிவாக எடுத்துரைத்துச் சென்றிருக்கின்றார்கள்.
இவைகள் எதுவும் இவ்வுலகில் இன்றுவரை நடைபெறவில்லை. இவை நடைபெறுவதற்கு இன்னும் காலங்கள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரிந்த விடயமான எந்நாளில் இல் உலகம் அழியும் என்பது நடைபெறுவதற்கு முன்னர் மேற்கூறப்பட்ட விடயங்கள் நடைபெற்றே ஆகவேண்டும். அவை நிச்சயமாக நடைபெறும்.
நாஸாவின் அறிக்கை:
1915 இல் NACA என ஆரம்பிக்கப்பட்டு, 1958ல் இருந்து நாஸா (NASA) என அழைக்கப்பட்டு வரும் இவ் அமைப்பு, அமெரிக்காவுக்குச் சொந்தமானது. சந்திரனுக்கு முதன் முதலில் மனிதனை அனுப்பியதிலிருந்து உலகப் புகழ்பெற்றது. இவை விண்வெளி ஆய்வுக்கான ஓர் அமைப்பாகவே இருந்து வருகின்றது.
எனினும் அவ்வப்போது உலகில் ஏற்படும் கால நிலை மாற்றத்தை முன்கூட்டி அறிவிப்பதிலும் பங்களிப்புச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் நாஸாவினால் அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையோ, அதனால் ஏற்பட்ட உயிரழிவுகள், சேதங்களையோ முன்னறிவிக்க முடியாத நிலை இருந்தமை நாஸாவின் பலவீனம்.
எனினும் நாஸாவின் அறிவிப்புப்படி, 21ம் திகதி புவியுடன் சில விண்கற்கள் மோதுவதால் பாரிய தேசங்கள் புவியைத் தாக்கும் எனவும், அதனால் புவியின் சில பகுதிகள் எரிந்து பாரிய தீப் பிளம்பை ஏற்படுத்தும் எனவும் இதன் காரணமாக பூமி இருள் சூழ்ந்து காணப்படும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. எனினும் இப்போது இவ் அறிக்கை அவர்களால் அகற்றப்பட்டிருக்கின்றது.
அழிவுகளும் எதிர்வுகூறல்களும்:
ஓர் அழிவை இஸ்லாமிய பார்வையில் எதிர்வு கூற முடியாது. உதாரணமாக சூறாவளி, நிலநடுக்கம், கல்மலை, சுனாமி, எரிமலை, மரணங்கள், விபத்துக்களும் ஆபத்துக்களும் இவைகளை மனிதனால் எதிர்வு கூற முடியாதவை.
நாஸாவினால் அல்லது ஜப்பான் விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தினால் சுனாமியையோ, நில நடுக்கத்தையோ எதிர்வு கூற முடியாது. அது நடக்கவும் முடியாது. நில நடுக்கம் வந்தபின்னர்தான் அவை உலகுக்குத் தெரிய வரும். சுனாமி வந்த பின்தான் எச்சரிக்கை சமிக்ஞை அலரத் தொடங்கும்.
இதேபோல் தான் விமானமொன்று எப்போது வெடிக்கும், விழும் என்றோ, கப்பல் எந்நேரம் நீரில் மூழ்கும் என்றோ, ஓர் குண்டு வெடிப்பில் அல்லது ஓர் விபத்தில் எத்தனை பேர் உயிரிழப்பார்கள் என்றோ மனிதனால் எதிர்வு கூற முடியாது!
எனவேதான் இறை வேதமும் நபி மொழியும் எங்களுக்கு எச்சரித்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான்
‘விபச்சாரம் அதிகரித்தால் நில நடுக்கத்தை அப்பகுதியில் எதிர்பாருங்கள்’ எனும் நபி மொழியாக இருக்கின்றது.
எனவே உலக அழிவையும் அவ்வப்போது உலகில் ஏற்படும் அழிவையும் மனிதனால் எதிர்வு கூற முடியாது என்பதையும், அவை இறைவனால் எதிர்பார்க்காத நேரத்தில் எங்களை நோக்கி வரும் என்பதையும் நாம் முதலில் நம்பிக்கை கொள்ளவேண்டும்.
வதந்திகளும் பெண்களும்:
உலக அழிவு எனும் இவ்வதந்தியால் பெண்கள் மிகவும் பாதிக்கப்ட்டிருக்கின்றனர். அதிகமான பெண்கள் மனநோயாளிகளாகி இருக்கின்றனர். நாலு பெண்கள் எங்கு சேர்ந்தாலும் இஸ்லாமிய கொள்கையையும், நம்பிக்கையையும் புறந்தள்ளிவிட்டு, இவ்வாறான போலியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது பிள்ளைகளையும் அச்சமூட்டி வைத்திருக்கின்ற பரிதாபமான நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு, போலி வதந்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் இப்பெண்களுக்கு உலமாக்களும், ஊர் பெரியோர்களும் தெளிவான இஸ்லாமிய விளக்கங்களை அளிக்கவேண்டும்.
தற்பொழுது மீன்மழை, சிவப்பு மழை, ஜெலி மழை என பொழியும் மழையிலும் இப்பெண்கள் உலகம் அழியப் போகின்றதே என்றும், 21ம் திகதி என்ன நடக்குமோ என்றும் பதட்டமடைந்து இருப்பது ஈமானுக்கு அப்பாற்பட்டதாகும்.
சமூக வலைத்தளங்களும் புரளிகளும்:
இஸ்லாமிய பெயர்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் உலாவரும் முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்துக்கு முக்கியத்துவமளிப்பதை விட்டுவிட்டு, நாஸாவுக்கு முக்கியத்துவமளிப்பதிலேயே கடந்த சில நாட்களாக தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.
அமெரிக்கா மக்களோ, ஐரோப்பா மக்களோ எண்ணவென்றும் கருத்திலெடுக்காத இவ்விடயத்தை இலங்கையில் ஓர் மூலை முடுக்கிலிருந்து இவ்வதந்திகளுக்கு அதிக முக்கியத்துவமளித்து, மக்களை திசை திருப்புவதில் ஈடுபட்டு வருகின்றமை கவலைக்குரியது.
உலகம் நிச்சயமா அழியும். அதுவே இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும். ஆனால் மனிதனால் நேரம் குறிப்பிட்டு உலகத்தை அழிக்க முடியாது. ஓர் ஊரை, ஓர் நகரத்தை அல்லது ஓர் நாட்டை அழிக்கலாம்.
ஆனால் சமுத்திரங்களை, மலைகளை, சூரியன், சந்திரன், ஆகாயம், நட்சத்திரங்களை யாரால் அழிக்க முடியும் ? என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
சிந்தனையே அல்லாஹ் எங்களுக்கு அளித்த மகா பொக்கிஸம் என்பதை நினைவு கூர்ந்து வல்ல இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.
Leave a comment