மும்பை பயங்கரவாத தாக்குதல்: இந்திய உளவுத்துறைக்கு படுதோல்வி

i1[1]மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதில் இந்திய உளவு அமைப்புகள் தோல்வியடைந்துவிட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் உள்ள அப்சர்வர் ஆய்வு அறக்கட்டளையில் அவர் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது,

பாகிஸ்தான்- அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹட்லி, அல்- கொய்தா பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரியுடனும், அபு ஜிண்டல், ஜபியுல்லா, பாஹிம் அன்சாரி ஆகிய மூன்று இந்திய பயங்கரவாதிகளுடனும் இணைந்து மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டினார்.

அவர்கள் இதற்காக இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளனர். எனவே, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் என்பது அரச ஆதரவு பெற்ற நடவடிக்கை அல்ல.

இது எந்த அரசையும் அல்லது நாட்டையும் சாராத சில தனிநபர்களின் செயலாகும். ஹெட்லி, பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து விலகி லஷ்கர் அமைப்பில் சேர்ந்தவரான இலியாஸ் காஷ்மீரி, மூன்று இந்திய பயங்கரவாதிகள் என்ற மூவர் குழுக் கூட்டணியின் நாசவேலைதான் இது.

இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணையில், அவர்கள் முக்கிய இலக்குகளை வேவு பார்த்ததும், எவ்விதத் தடங்கலும் இல்லாமல், சட்ட அமுலாக்கப் பிரிவுகளுக்குத் தெரியாமல் இலக்குகளைப் படம் பிடித்துச் சென்றதும் தெரிய வந்தது. இந்த விவரங்களை ஒன்றுபடுத்திப் பார்த்தால், மூன்று பேர் இத்தாக்குதல் தொடர்பாக செயல்பட்டது புரியும். அவர்களில் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் தாக்குதல் சதித்திட்டத்துக்கான பணத்தை வழங்கியுள்ளார்.

அவர் கடன் அட்டைகளை வைத்துக்கொண்டு பல இடங்களிலும் சுற்றித் திரிந்து ஒரு அமைப்பு போல் உருவாக்கியுள்ளார். இவை அனைத்தும் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் கவனத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புகள் தோல்வியடைந்தன. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால்தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பும் அவ்வப்போது தகவல் பரிமாற்றமும் இருந்திருந்தால் மும்பைத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும். பயங்கரவாதம் மற்றும் புலனாய்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்புடைய தகவல்களை இந்தியா எங்களிடம் மறைக்கக் கூடாது. அப்படி தகவல்கள் மறைக்கப்பட்டால் விஷயங்கள் கைமீறிப் போய்விடும். அபு ஜிண்டாலைப் பொறுத்தவரை தான் ஒரு பிரபலமான குற்றவாளி என்பதையும் பல வழக்குகளில் தம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதையும் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் இந்தியாவின் உளவு அமைப்பு ஒன்றுக்காகப் பணியாற்றியவர். பின்னர் பயங்கரவாதியாக மாறியுள்ளார். அதன் பின் அவர் உட்பட மூன்று பேரும் பாகிஸ்தான் சென்றுள்ளனர். இலியாஸ் காஷ்மீரியைப் பொறுத்த வரை, அவர் மறைந்த பின்லேடன் மற்றும் அல்- ஜவாஹிரியின் நெருங்கிய உதவியாளராகச் செயல்பட்டார்.

பெனாசீர் பூட்டோ படுகொலைக்கான சதியிலும் அவர் பங்குபெற்றிருந்தார். ஹெட்லி இராணுவ மேஜர் ஒருவர் பற்றிக் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி, மேஜர் ஃபரூக் என்பவரை நாங்கள் கைது செய்தோம். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏராளமான தகவல்கள் கிடைத்தன.

எனவே, நம்மிடையே அமைச்சர்கள் நிலையிலும், அரசுகள் நிலையிலும் ஒருங்ணைப்பு இருந்தால் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உருவாகும் என்றார் மாலிக்.

மேலும் பாகிஸ்தானின் இரண்டாவது நீதித்துறை குழு இந்தியாவுக்கு இரண்டா வது முறை பயணம் மேற்கொள்வதற்கான நடைமுறைகளை இறுதி செய்வதற்காக இந்தியா ஒரு குழுவை எங்கள் நாட்டுக்கு அனுப்ப உள்ளது.

இந்தக் குழு இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் வரும். அது தொடர்பான விவரங்களை நான் 24 மணி நேரத்தில் முடித்துக் கொடுப்பேன். அதன் பின் நீதித்துறை குழு, இந்தியாவுக்கு திரும்பும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியக் குழு பாகிஸ்தான் செல்வதற்கான திகதி இன்னும் முடிவாகவில்லை என்றார்.

–தினகரன்

Published by

Leave a comment