கனத்த மழை: பத்து மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு

அக்குறணையில் 8 அடி வெள்ளம்!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 இக்கடும் மழை காரணமாக மாத்தளை, ரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் ஐவரும் கண்டி, பாததும்பரையில் ஒருவருமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் நால்வர் மண்சரிவு காரணமாகவும் ஒருவர் வெள்ள நீரைப் பார்த்ததால் ஏற்பட்ட இதய அழுத்தம் காரணமாகவும் மரணமடைந்திருப்பதாக ரத்தோட்டை பிரதேச செயலாளர் திருமதி விஜய பண்டார கூறினார்.

இதேவேளை இக்கடும் மழை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, காலி, பொலன்னறுவை, புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இம்மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக ஏழு மாவட்டங்களில் 1129 குடும்பங்களைச் சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அதேநேரம் இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டவர் களில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 3021 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அத்தோடு 66 வீடுகள் முழுமையாகவும் 695 வீடுகள் பகுதியள விலும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இருப்பிடங் களை விட்டு இடம்பெயர்ந்திருப்பவர்களுக் கும் உடனுக்குடன் நிவாரண நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகா மைத்துவ அமைச்சு அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி யுள்ளது. இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வென தேவையான நிதி மாவட்ட செய லகங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

மண்சரிவு முன்னெச்சரிக்கை

இதேவேளை மழை தொடராகப் பெய்து வருவதால் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய நான்கு மாவட் டங்களுக்கும் 24 மணி நேர மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி குமாரி வீரசிங்க கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாத்தஹேவாஹெட்ட, கங்கவட்ட கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, கொத்மலை, அம்பகமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், பதுளை மாவட்டத்திலுள்ள ஹல்துமுல்ல, வெலிமட, ஹப்புதளை, எல்ல, பண்டாரவெல, மீகாகிவூல, ரிதி மாலியத்த, பதுளை, ஹாலிஎல, பஸ்ஸர, லுணுகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்திலுள்ள ரத்தொட்ட, உக்குவெல, யட்டவத்த, லக்கல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இம்முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டி ருக்கின்றது.

இந்நான்கு மாவட்டங்களிலும் பல பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை கருத்திற் கொண்டே இம்முன் னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக பதுளை – மஹியங்கனை நெடுஞ்சாலையின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதால் இப்பாதை நேற்று போக்குவரத்துக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டது. அத்தோடு கந்தகெட்டிய – ராகல வீதியில் மண் மேடுகள் விழுந் துள்ளதால் ரிகில்லகஸ்கட பகுதியில் பாதை போக்குவரத்துக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டது எனக் கூறினார்.

இதேவேளை, கண்டி – மஹியங்கனை வீதியில் உன்னஸ்கிரிய, 18 வளைவுகளைக் கொண்ட நெடுஞ்சாலையின் மூன்றாவது வளைவு மற்றும் ஏழாவது வளைவு என்பவற்றிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இப்பாதை தற்காலிகமாகப் போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப் பாளர் ஐ.ஏ.கே. ரணவக்க கூறினார்.

அக்குறணையில் 8 அடி வெள்ளம்

இதேவேளை அவர் கண்டி மாவட்ட நிலைமை தொடர்பாக மேலும் கூறுகையில், நேற்று முன்தினம் முதல் பெய்த கடும் மழை காரணமாக அக்குரணைப் பிர தேசத்தில் சுமார் 8 அடிகளுக்கு வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 150 க்கும் மேற்பட்ட கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இரண்டு முகாம்களில் தங்கியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

ரத்தொட்டவில் ஐவர் மரணம்

இதேநேரம், மாத்தளை மாவட்டத்திலுள்ள ரத்தொட்ட பிரதேச செயலாளர் திருமதி விஜய பண்டார குறிப்பிடுகையில், எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள போதிகொட்டுவ என்ற கிராமத்திலுள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதால் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்தார். அவரது தாயார் காயங்களுக்கு உள்ளாகி மாத்தளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதேபோல் விலன் கலவத்தையிலும் மண்சரிவில் சிக்குண்டு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி யொருவரும் உயிரிழந்தார்.

இதேநேரம் கந்தேநுவர மேற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதால் ஏழு வயது மதிக் கத்தக்க முத்துகுமார் தயாபரன், பத்து வயது மதிக்கத்தக்க முத்துகுமார் சஞ்ஜீவனி ஆகிய இருவரும் உயிரிழந் துள்ளனர்.

இதேவேளை லேன்வில் என்ற கிரா மத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைப் பார்த்ததால் அழுத்தத்திற்கு உள்ளாகி 48 வயது மதிக் கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த ஐவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய்ப்படி இறுதிக் கிரியைகளுக்காக கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ரத்தொட்ட பிரதேச செய லகப் பிரிவிலுள்ள பெரும்பாலான வீதி களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. குறிப்பாக பம்பரகிரியல்ல என்ற கிராமத்தில் 33 ஆயிரம் வோல்ட் மின் சக்தியைக் கடத்தும் கேபல்களைக் கொண்ட மூன்று மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

குருநாகலில் 225 லயன் வீடுகள் நீரில் மூழ்கின

குருநாகல் வில்கொட பிரதேசத்தில் 225 லயன் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதை குருநாகல் மாநகர முதல்வர் காமினிபெர முனகே மற்றும் மாநகர சபை உறுப்பினர் தியாகராஜா சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக குருநாகல் இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யுமாறு பணிப்புரை விடுத்ததோடு இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு 225 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வசிக்கின்றனர். இவர்களை இந்துக் கல்லூரியில் தங்கவைப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கண்டி – குருநாகல் வீதியின் பல இடங் களில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாய் ந்து செல்வதால் வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

மாவத்தகம பிரதேச செயலாளர் பிரி வில் பண்டாரகலவில் சுமார் 15 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பறகஹதெனிய விலிருந்து புசல்ல செல்லும் வீதியில் யாகெடுவ என்ற பாலத்திற்கு மேலால் வெள்ளம் பாய்ந்தோடுவதால் அங்கும் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. பொல் கஹவெலவிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

–தினகரன்

Published by

Leave a comment