இலங்கையில் வானொலி ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் சரியாக 87 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மாத்திரம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. ஏனைய தனியார் வானொலிகள் இதில் தமக்குத் தொடர்பு இல்லாததைப்போன்று மெளனமாக இருக்கின்றன.
உண்மையில் இலங்கையில் ஒலிபரப்பு வரலாறு என்பது இன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற நிலையிலிருந்து பல தனியார் நிலையங்கள் வரை உள்வாங்கப் பட்டிருக்கின்றன. எனவே, ஒலிபரப்பின் ஆரம்பத்தை நினைவுகூர வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
சரி, அஃது இருக்கட்டும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனிக்காட்டு ராஜாவாக இருந்த காலத்தில் அதன் ஒலிபரப்பாளர்கள் அல்லது அறிவிப்பாளர்கள் நேயர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள்போல் விளங்கினார்கள். அப்போது நேயர்களுட னான நேரடித் தொடர்பின்றி ஒரு வழித் தொடர்பாடலாக நிகழ்ச்சிகள் அமைந்தபோதிலும், அறிவிப்பாளர்கள் தம் மொழித்திறமை, அறிவு, ஆளுமை என்பவற்றின் மூலமாக நேயர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டார்கள். அதில் கே.எஸ்.ராஜா முக்கியமான ஓர் அறிவிப்பாளர்.
எத்தனை ஆண்டுகளானாலும் அவரை மறக்க முடியாதவர்களாக நேயர்கள் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவரின் அறிவிப்புப் பாணி, உத்தி என்று விரிவுபடுத்திக் கொண்டே போகலாம். அவருக்குப் பின்னர் பி.எச்.அப்துல் ஹமீத் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து வந்த அறிவிப்பாளர்கள், செயற்கைத்தனமாகத் தம் குரலை மெருகூட்டி ராஜா வாகவும் பி.எச்சாகவும் முயற்சித்துத் தோற்றுப் போய் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
ஒலிபரப்புத் துறையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பனம் கட்டிக்காத்து வந்த பெருமை, தனித்துவம், மகத்துவம் ஆகியன தனியார் வானொலிகள் தோற்றம் பெற்றதன் பின்னர் தவிடிபொடியாக்கப்பட்டுள்ளதென்றே சொல்ல வேண்டும். அவர்கள் தொலைபேசி ஊடாக இரு வழித் தொடர்பாடலை நேயர்களுடன் ஆரம்பித்ததோடு ஒலிபரப்பின் செல்நெறியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஒலிபரப்புத் துறையில் ஆழ்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளாதவர்களை எடுத்த எடுப்பில் அறிவிப்புத்துறையில் அமர்த்தியதால் இந்த நிலை ஏற்பட்டதோ தெரியவில்லை.
வானொலி என்பது மக்களுடன் நெருங்கிப் பழகும் ஓர் ஊடகமாக, நண்பனாக, உறவினனாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரதான நிலை வானொலி என்ற வரம்பினை மீறியவர்களாக சில அறிவிப்பாளர்கள் குறித்த வானொலியைத் திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள். பிரதான நிலை வானொலியில் அறிவிப்பாளர் பேணி வந்த தனித்துவத்தைச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கும் அளவிற்கு அவர்களின் அறிவிப்பு திசைமாறிக் கீழிறங்கியிருக்கிது.
அறிவிப்பாளர்களுக்கும் நேயர்களுக்கும் இடையில் பன்னெடுங்காலமா நிலவி வந்த இடைவெளியை இல்லாமற்செய்யப்போவதாக நினைத்து இன்று சமூக வானொலியாகவும் இல்லாமல் பிரதான நிலை வானொலியாகவும் அல்லாத ஒரு நிலையைத் தோற்றுவித்துக்கொண்டுள்ளார்கள். இதற்கு, பிரதான நிலை வானொலி அறிவிப்பாளர்கள், கலையகத்தில் ஒலிவாங்கியில் நேயர்களுடன் நெருங்கும் அளவிற்கு வெளியில் சகஜமாக, திறந்த மனதுடன் பழகுவதைத் தவிர்த்து இறுக்கமான ஓர் இடைவெளியை இன்னும் பேணுகின்றமையும் காரணமாக இருக்கலாம். இதனைத் தனியார் துறையினர் சற்றுத் தவிர்த்து வர்த்தக நோக்கத்திற்காகப் பொய்ப் புன்னகையையாவது உதிர்க்கிறார்கள்.
என்றாலும், அறிவிப்புத்துறையின் ஆழத்தை அறியாமல் மக்களின் மன நிலையைப் புரியாமல் இன்னமும் பல அறிவிப் பாளர்கள் செயற்படுவதாக அனுபவசாலிகள் கவலைகொள்கிறார்கள்.
“ஹலோ யார் பேசுரீங்க? யார் நீங்கள்?”
“நான் கொழும்பில் இருந்து ஷர்மி பேசுறேன்னா(ண்ணா)”
“எப்படி இருக்கிரீங்கள் ஷர்மி?”
நான் நல்லா இருக்கிறன். நீங்கள் எப்படி இருக்கீங்க அண்ணா?”
“நாங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கம், என்ன பாட்டு வேணும் உங்களுக்கு?”
என்று அறிவிப்பாளர் கேட்க, நேயரும் தாம் விரும்பிய பாடலையும், விரும்பிக் கேட்கும் நண்பர்களின் பெயர்களையும் பட்டியலிடுவார். முன்பு இதனை அறிவிப்பாளர் செய்வார். தற்போது நேயர்களே பெயர்களை வாசித்துவிடுகிறார்கள். இறுதியில் நேயர் கேட்ட பாடலன்றி, அறிவிப்பாளர் கணணியில் இலகுவில் எடுக்கக்கூடிய பாடலை ஒலிபரப்புவார். இதுவே தற்போதைய இரு வழித் தொடர்பாடலாக விளங்குகிறது. இன்னும் சில தனியார் வானொலிகளில் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் என்னென்னவெல்லாமோ பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் எம்.சி.ரஸ்மின் எழுதிய ஓர் அருமையான நூலைத் தட்டிப்பார்த்தேன். உண்மையில் தமிழ் மொழியில் இப்படியொரு நூல் இதுவரை வெளிவரவே இல்லை. வெளி வந்த நூல்களும் வரலாறுகளைத்தான் பதிவுசெய்திருக்கின்றன. ஆனால், ஓர் ஒலிபரப்பாளன் கட்டாயம் வாசிக்க வேண்டிய விதத்தில் ஒலிபரப்பு நுணுக்கங்களைப் பதிவுசெய்திருக்கிறார் ரஸ்மின். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் (அண்ணா எப்எம்) சமூக வானொலி பற்றிய நேரடி அனுபவங்களைப் பெற்றபோது ஏற்பட்ட திருப்தியை ரஸ்மினின் ‘சமூக வானொலி’ என்ற நூல் தருகிறது. அவரின் நூலைப் பற்றிப் பிறிதொரு நாளில் ஆராயலாம். அந்த நூலில் அவர் பதிவுசெய்திருக்கும் தனியார் வானொலியொன்றின் அறிவிப்பாளர் ஒருவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் சிறு கீற்றைப் பாருங்கள்.
“ஆதர்சிகிளாக் இன்னும் ஒரு விசயம் சொல்லியிருந்தார். என்னவென்டு சொன்னா, அவர் சொன்ன விசயங்கள் நிறைய நடந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் அவர் சில விசயங்கள் சொல்லியிருக்கின்றார். 2009இல் வந்து, ஐக்கிய நாடுகள் சபையால் வந்து, ஒரு விசேட கூட்டம் கூட்டப்பட்டு உலகத்தில் உள்ள அனைத்து அணு குண்டுகளும் வந்து, அழிக்கப்படும் அப்பிடியென்டு சொல்லி சொல்லி யிருக்கின்றார். எனவே 2009 என்றது அருகில வந்திட்டுது. சரி அடுத்து எங்களுக்கு வந்திருக்கிறது.
என்னண்டு சொன்னால் 2075இலே வந்து, பிளேனிலே வந்து, புட்போட்லே போவாங்களாம். அப்பிடி யென்டு சொல்லி வந்திக்கிது….” இப்படி அந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாளரின் நிகழ்ச்சித் தொகுப்பை பதிவுசெய்திருக்கிறார் ரஸ்மின். உண்மையில், வானொலியைத் தென்னிந்திய பேச்சு மொழியுடன் நகர்த்திச் செல்வதாக நினைத்து எதனைப் பேசுகிறோம் என்பது தெரியாமல், அறிவும் தேடலும் இன்றிப் பிதற்றுகிறார்கள். பேச்சு மொழியை எப்படி எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதற்கு விரிவான வியாக்கியானம் தந்திருக்கிறார் ரஸ்மின்.
எனவே, ஏழு தசாப்தங்களைக் கடந்துவிட்ட தமிழ் ஒலிபரப்புத்துறையை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் சென்று விடாதிருக்க வகை செய்யவேண்டியது சகல அறிவிப்பாளர் களின் இன்றியமையாத பொறுப்பாகும்.
-தினகரன்
Leave a comment