– ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூரில் இயங்கி வரும் சமூக அபிவிருத்தி மன்றம் என்கின்ற அரச சார்பற்ற நிறுவனத்தை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கணனியையும் அதன் உதிரிப்பாகங்களையும் திருடியுள்ளனர்.
பின்னர் திருடிய பொருட்களை இடைவழியில் விட்டு தலைமறைவாகிச் சென்றுள்ளனர் என்று அந்த நிறுவனத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் எம்.ரீ. பெனாஸிர் பானு தெரிவித்தார்.
ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதியிலுள்ள மேற்படி நிறுவன அலுவலகத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் சனிக்கிழமையன்று இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திருட்டுச் சம்பவம் தொடர்பாக செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் கைரேகை நிபுணர்களை அழைத்து வந்து திருடப்பட்டு கைவிட்டுச் சென்ற பொருட்களிலிருந்த கைவிரல் அடையாளங்களையும் அலுவலகத்திலுள்ள ஏனைய தடயங்களில் காணப்பட்ட அடையாளங்களையும் பதிவு செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
ஏற்கெனவேயும் சில காலங்களுக்கு முன்னர் பொதுமக்களுக்கு வழங்குவதற்கென இந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறு தையல் மெஷின்கள் திருட்டுப் போய் அது கண்டு பிடிக்கப்படாத நிலையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது என்று நிறுவனப் பணியாளர் எம்.ரீ. பெனாஸிர் பானு தெரிவித்தார்.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.






Leave a comment