இன்று அவுஸ்திரேலியா நேரப்படி காலை 10:30 மணிக்கு (இலங்கை நேரப்படி காலை 5 மணி) ஆரம்பமாகும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹொபார்ட், ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
கடந்த இருவாரங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள இலங்கை அணியினர், உள்ளுர் போட்டிகளிலும், சமூக நல போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்.
இவ் இரு இணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல், 1983 கண்டி, அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெற்றது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டித் தொடராக அமைந்த இப்போட்டியில் அவஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
இவ் இரு அணிகளுக்குமிடையிலான இறுதி டெஸ்ட் போட்டி செப்டம்பர், 2011 ல் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி சம நிலையில் இருந்த போதிலும், 1:0 எனும் ரீதியில் அவுஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றி இருந்தது.
டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் இலங்கை-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இதுவரை இடம்பெற்ற 23 போட்டிகளில் அவுஸ்திரேலியா 14 போட்டிகளிலும், இலங்கை ஒரே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. 8 போட்டிகள் சம நிலையில் முடிவடைந்திருக்கின்றன.![kumar-sangakkara-220612[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/kumar-sangakkara-2206121.jpg?w=250&h=439)
இலங்கை 1999 செப்டம்பர், கண்டியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் 6 விக்கட்டுக்களால் அவுஸ்திரேலியாவை முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 1:0 எனும் ரீதியில் தொடரையும் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2007ல் இருந்து ‘வோர்ன்-முரளி டெஸ்ட் தொடர்’ (Warne-Murali Test Series) என அழைக்கப்படும் இவ்விரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர்கள் இரு அணிகளுக்கும் தற்பொழுது முக்கியத்துவமிக்க தொடர்களாக அமைகின்றன.
இலங்கை அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை அவுஸ்திரேலியாவை வெற்றி பெறவில்லை. இதனால் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இலங்கை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவு இருக்கின்றன. ஓரு போட்டியில் அவுஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வெற்றிபெற்றால் அது இலங்கையின் முதல் வெற்றியாக அமையும். அதே போல் தொடரைக் கைப்பற்றினால் இலங்கை அவுஸ்திரேலியாவை அவுஸ்திரேலிய மண்ணில் வெற்றி கொள்ளும் முதலாவது டெஸ்ட் தொடராக அமையும்.
கடந்த மாதம் அவுஸ்திரேலியா வந்திருந்த தென்னாபிரிக்காவின் வெற்றிகளால் தடுமாறியிருக்கும் அவுஸ்திரேலிய அணியினர், இலங்கை அணியை வெற்றி கொள்ள அதிக பிரயத்தனம் எடுத்து வருகின்றனர்.
இது கிறிஸ்மஸ் பண்டிகைக் காலமாகையால் அதிகளவான மக்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளைக் கண்டுமிகழ ஆர்வம் கொண்டிருக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் மக்கள் பலத்துக்கு முன் இலங்கையின் திறமை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக துடுப்பாட்டம் மிக முக்கியமானது. துடுப்பாட்டம் திறமை பெற்றிருந்ததாலேயே தென்னாபிரிக்காவுக்கு தொடரைக் கைப்பற்ற முடிந்திருந்தமை கவனிக்கத்தக்கது.![168872-michael-hussey[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/168872-michael-hussey1.jpg?w=530&h=298)
அவுஸ்திரேலியா கிரிக்கட் சரித்திரத்தில் ‘பொக்ஸிங் டே’ (Boxing Day) கிரிக்கட் போட்டி புகழ்பெற்றது. இவ் அரிய சந்தர்ப்பம் இம்முறை மீண்டும் இலங்கை அணிக்கு கிடைத்திருப்பது இலங்கை அணிக்குக் கிடைத்திருக்கும் ஓர் கௌரவமாக கிரிக்கட் வரலாற்றில் பதியப்படும்.
கிறிஸ்மஸ் முடிந்து அதாவது 26ம் திகதி, மேற்கத்தைய நாடுகளிலும், மற்றும் ஏனைய மேற்கத்தேய கலாச்சாரங்களைப் பின்பற்றும் நாடுகளிலும் ‘பொக்ஸிங் டே’ கொண்டாடப்படுவது சரித்திரத்தில் இருந்துவருபவை.
இத்தினத்தில் ‘அவுஸ்திரேலியா கிரிக்கட்’ ஓர் டெஸ்ட் போட்டியை நடாத்தும். அதுவும் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில்தான் போட்டி நடக்கும். குறிப்பாக ‘ஆஸஸ்’ தொடரின் போட்டிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்படுவது வழக்கம்.
எனவே இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி ‘பொக்ஸிங் டே’ தினமான டிசம்பர் 26ம் திகதி, சரித்திர புகழ்மிக்க மெல்போர்ன் மைதானத்தில் இடம்பெற இருக்கின்றமை ஓர் விசேட அம்சமாக இருக்கின்றது.
இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் இலங்கைக்கு 1995ல் கிடைத்திருந்தது. எனினும் அவுஸ்திரேலியா ‘பொக்ஸிங் டே’ போட்டியில் 10 விக்கட்டுக்களால் இலங்கைகைய இலகுவாக வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![_63977923_clarke_sangakkara_getty[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/63977923_clarke_sangakkara_getty1.jpg?w=530&h=299)
Leave a comment