பாரிய சத்தத்துடன் இரண்டு நில அதிர்வுகள் நேற்று அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் உணரப்பட்டிருப்பதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி என். வி. விஜயானந்த நேற்றுத் தெரிவித்தார்.
இந்த இரண்டு நில அதிர்வுகளும் நேற்று காலை 9.00 மணிக்கும் முற்பகல் 11.00 மணிக்கும் இடையில் இடம்பெற்றிருப்பதாக வும் அவர் குறிப்பிட் டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் நேற்று 10 ஆம் திகதி வரையும் அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அவ்வப்போது நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன. இதுவரையும் ஒன்பது நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இவை யாவும் சிறிய நில நடுக்கங்களாகும்.
இந்த ஒன்பது அதிர்வுகளும் பூகம்பங்களைப் பதிவதற்கான பல்லேகல மத்திய நிலையத்தில் பதிவாகியுள்ளன. ஆனால் பல்லேகல உட்பட நாட்டிலுள்ள மூன்று மத்திய நிலையங்களிலும் இரண்டு நில அதிர்வுகள் மாத்திரமே பதிவாகி இருக்கின்றன. இந்நில அதிர்வுகள் 2.9 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளன.
இந்நில அதிர்வுகள் யாவும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமண, வட்டினகல, தேவாலகிந்த, கிவுலேகம, அம்பாறை ஆகிய பிரதேசங்களிலேயே பெரிதும் உணரப்பட்டிருக்கின்றன.
இந்நில அதிர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் பணியில் எமது நிபு ணத்துவ குழுவொன்று தற்போது அப்பிர தேசங்களில் ஈடுபட்டுள்ளது. இக்குழுவினர் நில அதிர்வுகளைப் பதிவு செய்யும் மூன்று நடமாடும் கருவிகளின் உதவியுடன் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அனில் பீரிஸ், பணிப்பாளர் பிரேம் ஆகியோர் அடங்கிய மற்றொரு நிபுணத்துவக் குழு இன்று 11 ஆம் திகதி அம்பாறைக்குப் பயணமாகின்றது.
இந்த அதிர்வுகளுக்கான காரணங்களைக் கண்டறிவதற்கான உச்ச முயற்சியில் எமது பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இத்தகைய தொடர் நில அதிர்வுகள் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
–தினகரன்
Leave a comment