வடக்கில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் எதுவித இன-மத பேதமின்றி -பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படுவதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார்.
வடக்கில் 109 கிராம சேவகர் பிரிவுகளில் 20 வருடங்களின் பின்னர் மக்கள் மீள்குடிய மர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை மீள்குடியமர்த்தும் போது அவர்களுக்கான உட்கட்டுமான வசதிகள் மற்றும் பொது வசதிகள் புனரமைத்துக் கொடுக்கப்படுகின்றன. இதன்போது எவ்விதமான இன,மத,குல பேதங்கள் பார்க்கப்படுவதில்லை யென அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அமைச்சில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் வடக்கில் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் பாடசாலைகளில் முஸ்லிம் பாடசாலைகளே அதிகளவில் புனரமைக்கப்படுவதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் எவ்விதமான பாரபட்சமுமின்றி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றது.
ஒரு இனத்துக்கான உதவிகளை மாத்திரம் அரசாங்கம் செய்யவில்லை. எனினும், 20 வருடங்களின் பின்னர் மீள்குடியேறச் செல்லும் முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்களுக்கு பொது வசதிகளைச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக கிராமங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது வசதிகள் புனரமைக்கப்படுகின்றன. இதில் எதுவித பாரபட்சமுமில்லை.
இந்த விடயத்தை சில ஊடகங்கள் பிழையாக வெளியிட்டுள்ளன. சில தரப்பினர் இனங்களுக்கிடையில் மீண்டும் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதுவிடயத்தில் ஊடகங்களுக்குத் தார்மீகப் பொறுப்பு உள்ளது. எனவே இதனை உணர்ந்து ஊடகங்கள் செயற்பட வேண்டும்.
அதேநேரம், வடக்கிலிருந்து வெளியேறிய சகல மக்களும் அங்கு மீண்டும் சென்று குடியமர்வதற்கான உரிமையைக் கொண்டவர்கள். இந்தியாவிலுள்ளவர்களாக இருக்கட்டும், வெளிநாடு சென்றவர்களாக இருக்கட்டும், முஸ்லிம்களாக இருக்கட்டும், தமிழர்களாக இருக்கட்டும் எவராக இருந்தாலும் அவர்கள் அங்கு சென்று மீள்குடியமர முடியும்.
வடக்கில் மீள்குடியமர 60 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் முன்வந்து சென்றபோதும் போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் அவர்கள் மீண்டும் புத்தளத்துக்குத் திரும்பியுள்ளனர். இந்த நிலையிலேயே அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் பாரபட்சமின்றி முன்னெடுத்து வருகிறது.
இந்திய வீட்டுத் திட்டத்தில் மன்னாரில் முஸ்லிகளுக்கு அதிகளவான வீடுகள் வழங்கப்படுவதாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்திய வீட்டுத் திட்டமானது புள்ளிகளின் அடிப்படையிலேயே பயனாளிகள் தெரிவு இடம்பெற்றது.
பயனாளிகள் பற்றிய பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதும், ஆட்சேபனை தெரிவிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment