யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு….

220px-UoJ_logo[1]யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெற்ற துர்ப்பாக்கியமான நிகழ்வுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களது விடலைப் பருவ போராட்டங்கள், தமது கல்விக்குக் குந்தகம் ஏற்பட்டால் மேலெழுவது, அவர்களது எதிர்கால வாழ்விற்கு ஆரோக்கியமாக அமையாது. ஆனால் கல்வி கற்க வந்த இடத்தில் தேவையற்ற விடயங்களை தலையினுள் சுமத்தி, வந்த நோக்கத்தையே மறந்து செயற்படுவது எவ்வகையில் நியாயமாக அமையும்? ஒருபோதும் நியாயப்படுத்தவும் முடியாது.

நவம்பர் மாதத்தில் மாவீரர் தின நிகழ்வுகளைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் நடத்தியமை யாவரும் அறிந்த விடயம். தலைவர் மாவீரர் தீபச்சுடரை ஏற்றுவார், அதன் பின்னர் மாவீரர் தின உரையை நிகழ்த்துவார் என்பதாக நிகழ்வுகள் நடைபெற அதனை உலகமே அவதானிப்பது போன்றதொரு பிரமையை உருவாக்கிக்கொண்டாடுவது அவர் களது வழமையான நிகழ்வு. அது புலிகள் இருந்தபோது நிகழ்ந்தது. இப்போது புலிகள் இல்லை. இனியும் இந்த பிரமையூட்டும் விடயம் தமிழ்ச் சமூகத்திற்கு அவசியமற்ற விடயம்.

உண்மையில் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது வரலாற்று நிகழ்வு. ஆனால் அது இல்லாமல் போகுமளவிற்கு அதனை வழிநடத்தியோர் நடந்து கொண்டது துர்ப்பாக்கிய நிகழ்வே. இன்று இரண்டுமே இல்லை என்றாகி விட்டது.

போராட்டம் எனத் தொடங்கி அதனை இல்லாமல் செய்வதற்காக புலிகள் தோண்டிய குழியில் தமிழ்ச் சமூகம் இழந்தவை பல. தமிழ் மாணவருக்குக் கல்வியில் அநீதி என ஆரம்பித்த போராட்டம் பின்னர் ஒருசிலரின் தனிப்பட்ட போராட்டமாக மாறியதன் விளைவை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தமிழ்ச் சமூகம் அனுபவித்தமை கொடிய வரலாறு.

இத்துணை துன்பங்களைச் சந்தித்த அனுபவத்திற்குப் பின்னரும் நாம் அந்த பழைய நிலைக்கு மீண்டும் செல்ல வேண்டுமா எனும் கேள்வி தமிழர் மனங்களில் எழுந்து இறக்கும் தறுவாயில் இருக்கும்போது மாணவ சமூகமான உங்களைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்த சில குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் முனைந்துள்ளனர். இதனை நீங்கள் உணராமலிருப்பது ஏன்? வயதுக்கோளாறா அல்லது மாணவ சமூகம் என்றால் கட்டாயம் கல்லெறிந்து போராட வேண்டும் என்று யாராவது பின்னாலிருந்து உசுப்பேற்றுகிறார்களா?

யுத்தக் கெடுபிடிகளுக்கும், பொருளாதாரச் சுமைகளுக்கும் மத்தியில் உங்களைப் படிப்பித்து பல்கலைக்கழகம் அனுப்பிவைத்த பெற்றோருக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா? முன்னொரு காலத்தில் இவ்வாறு போராடியதில் ஓரளவாவது அர்த்தம் இருந்தது. நியாயம் கற்பிக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை.

உதாரணத்திற்கு அன்று நீங்கள் கார்த்திகை திருவிளக்கேற்றுவதாக அமைதியாக உங்களது விழாவை நடத்தியிருக்கலாம். பொலிஸாரும் நிச்சயம் அனுமதி வழங்கியிருப்பர். ஆனால் மாவீரர் தின நாளில் அத்துமீறி நடந்து சட்டவரம்புகளை மீறுவதை அனுமதிக்குமாறு கோருவது எவ்வகையில் நியாயமாகும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

அன்றுகூட உங்களது போராட்டத்தை படையினரோ பொலிஸாரோ எல்லைமீறித் தடுக்கவில்லை. உங்களில் சிலர் எல்லை மீறிய போதுதான் சட்டத்தைக் காப்பாற்ற அவர்கள் நடவடிக்கை எடுத்தனர். அது சிறிது நேரத்தில் அடங்கிவிட்டது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது பத்திரிகையின் ஆசிரியருடனும், கமராவுடனும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பின்னரேயே பிரச்சினை கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. இது உண்மை.

சம்பவ இடத்திலிருந்த மாணவர்கள் நிச்சயம் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்வர். பாராளுமன்ற உறுப்பினர் சிக்கல் நிலையை உருவாக்கித் தனக்குப் பிரசாரம் தேடும் நோக்கிலேயே படப்பிடிப்பு உபகரணத்துடன் அங்கு வந்திருந்தார். இது சாதாரணமாக ஓர் அரசியல் வாதியின் மனநிலை. இதற்கு சரவணபவன் விதிவிலக்கல்லவே.

இதனை அறியாத இள இரத்தங்களான உங்களில் சிலர் அவரைக் கண்டதும் தமது துடிப்பைக் காட்ட முயன்றதன் விளைவை இன்று ஒரு சில மாணவர்கள் அனுபவிக்கின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினரோ தனது நோக்கத்தில் பெருவெற்றி கண்டுவிட்டார்.

எதிர்பார்த்ததைவிடவும் அவருக்குப் பிரசாரம் கிடைத்தது. சில பத்திரிகைகள் முழுப்பக்கத்தில் கலர் படங்களுடன் அவரது கற்பனை கலந்த பேட்டியைப் பிரசுரித்திருந்தன. தொலைக்காட்சிகளில் அபாரமான பேட்டி. அவர் தனது வாகனத்திற்கு இழப்பீட்டிற்கும் மேலாக காப்புறுதி மூலமாகப் பணத்தினை நிச்சயம் பெற்றிருப்பார். இன்று பொலிஸ் விசாரணை என்று அலைவது யார்? படித்துப் பட்டம் பெற வந்த அப்பவிகளான நீங்களே.

சில தமிழ் அரசியல் தலைமைகள் நாட்டில் மீண்டுமொரு பிரச்சினை வருவதை விரும்புகிறார்கள். இவர்களை புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து சிலர் இயக்குகிறார்கள். அதனால்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இவர்கள் பிற்போட்டு வருகிறார்கள். குழப் பங்களை உருவாக்கி வடக்கில் அமைதி நிலை இல்லையென்று வெளியுலகிற்குக் காட்ட மாணவ சமூகமான உங்களைப் பாவிக்கிறார்கள். அதற்கு நீங்கள் பலியாகிவிடக்கூடாது.

முன்னொரு காலம் போன்று பிரச்சினையை ஆரம்பித்துவிட்டு இவர்கள் கொழும்பிற்கு ஓடி வந்து தமது சொந்த வீடுகளில் சொகுசாகக் குடியேறி அறிக்கைகளை மட்டுமே விட்டுக்கொண்டிருப்பர்.

இங்கும் இருக்க முடியாவிட்டால் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் குடியேற்றி வைத்திருக்கும் தமது மனைவி, பிள்ளைகளுடன் சென்று தங்கியிருந்து அங்கிருந்து அறிக்கைகளை விடுவர். ஆனால் இங்கோ நீங்களும், உங்கள் நண்பர்களும் உங்கள் கண்ணெதிரிலேயே காயப்படுவீர்கள், பலியாகுவீர்கள். அது மட்டுமா ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

இத்தகைய நிலையைத் தமிழ்ச் சமூகம் ஏற்கனவே ஒரு தடவை அனுபவித்துவிட்டது. உங்களில் சிலருக்கு அது தெரியாமலிருக்கலாம். உங்களது பெற்றோரிடம் அது பற்றிக் கேட்டறிந்து கொள்ளுங்கள். எனவே இனியுமொரு போராட்டத்திற்கு பார்வையாளராக மட்டுமே இருந்து கொண்டு அழைப்பு விடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நம்பி ஒருபோதும் களத்தில் இறங்கிவிடாதீர்கள்.

இவர்களில் பலர் தமது பிள்ளைகளை லண்டனிலும், அவுஸ்திரேலியாவிலும் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க இணைத்துவிட்டு அப்பாவி மாணவர்களான உங்களது எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். இவர்கள் சிலரின் பிள்ளைகள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து புலமைப்பரிசில் பெற்றே அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர் என்பது உண்மையான விடயம்.

மாணவ சமுதாயத்தின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதோ அல்லது உங்களை தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் திருப்பிவிடுவதோ எமது நோக்கமேயல்ல. உங்களை இவர்கள் பகடைக்காய்களாகப் பாவிக்க முனைகிறார்கள் என்ற உண்மையை உணர வைப்பதே எமது நோக்கம். அவர்கள் உங்கள் விடயங்களில் தலைவிட்டு அதனைத் தமக்குச் சார்பாகத் திசைதிருப்ப முனையும்போதாவது எதிர்க் கேள்வி கேளுங்கள்.

உங்கள் பெற்றோரின் கனவுகளை நனவாக்குங்கள். அதற்காக யாருக்கும் அடிமையாக இருங்கள் என்றோ அடித்தால் அடியை வாங்கிக் கொண்டிருங்கள் என்றோ கூறவில்லை. நாசூக்காக உங்களை வைத்து தமது அரசியல் காய்களை நகர்த்துவோர் குறித்து விழிப்பாக இருங்கள் என்றே கேட்டுக்கொள்கின்றோம்.

-ஆசிரியர் தலைப்பு-தினகரன் வா.ம.

Published by

Leave a comment