புலிகள் யாராலும் அழிக்கப்படவில்லை; அவர்களாகவே அழிந்து போனார்கள்

Sampanthan[1]*ஜனநாயகம், மனித உரிமைகளை புலிகள் மதிக்கவில்லை

* கொலைப்பட்டியலில் எனது பெயரும் இருந்தது

*இராணுவத்தை தமிழர்களின் காணிகளில் இருந்து வெளியேறுமாறுதான் கேட்கிறோம்

வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டுமென தமிழ் மக்களோ நாமோ கேட்கவில்லை. இராணுவம் அங்கு இருக்க வேண்டும். எனினும், தமிழ் மக்களின் காணிகளில் இருந்து வெளியேற வேண்டும். அங்கு தமிழ் மக்களின் குடிப்பரம்பலை திட்டமிட்டு குறைக்கும் நடவடிக்கையையும் நிறுத்த வேண்டும் என்றே கேட்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி. இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீது அடுத்து அடுத்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் காரணமாக புலிகள் உருவாக்கப்பட்டார்கள். புலிகளின் கொலைப்பட்டியலில் எனது பெயரும் இருந்தது. எனது சகாக்களின் பெயரும் இருந்தது.

ஆனால், எம்மை புலிகள் என்றும், புலிகளின் பிரதிநிதிகள் என்றும் கூறுவது தவறு. புலிகள் தாம் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும், விதிமுறைகளையும் மதிக்காததன் காரணமாக அழிந்து போனவர்கள்; அவர்கள் அழிக்கப்படவில்லை. அவர்களாகவே அழிந்து போனார்கள். இன்று யார் யாரோ புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் தமது பகுதிகளில் சுயகெளரவத்துடன், நிம்மதியாக சுதந்திரமாகவே வாழ விரும்புகிறார்கள். அவர்களோ நாமோ இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என்று கூறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தின் சேவை அவசியம்.

எனினும் இராணுவத்தினர் திட்டமிட்டு குடியேற்றப்படும் நடவடிக்கை மிகவும் சூட்சுமமாக நடைபெறுவதாக உணர்கிறோம்.

பிரிக்கப்படாத நாட்டினுள் ஐக்கியமான தீர்வை எதிர்பார்த்தே போராட்டம் நடத்தினோம். சாத்வீகமான போராட்டத்தினால் தீர்வு வராததாலே புலிகள் இயக்கம் உருவானது. ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களே புலிகளை உருவாக்கினர்.

சிவிலியன்களையும் அரசியல் தலைவர்களையும் கொன்றதாலே புலிகள் பயங்கரவாத இயக்கமாக மாறியது. எனது நண்பர்கள் சகாக்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டனர். நானும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தேன். புலிகளை பலவீனப்படுத்த முன்னாள் அமைச்சர் கதிர்காமர் சர்வதேச ரீதியில் பெரும் பங்கு வகித்தார். அவர் கொல்லப்பட்டார். புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர். ஆனால் தமிழர் பிரச்சினை முடியவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் இந்தப் பிரச்சினை தீராது.

யுத்தத்தினால் இறந்த தமது உறவினர்களுக்காக தீபம் ஏற்றுவதில் என்ன தவறு உள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது தவறாகும்.

தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்.

வலிகாமம் பகுதிகளில் மக்கள் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. சம்பூரில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. கோப்பாபிலவு பகுதியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இராணுவ முகாம்கள் தான் நிறைந்து காணப்படுகின்றன. படை வீரர்களுக்காக 10,000 வீடுகள் கட்டப்படுகின்றன. இராணுவத்தினர் குடியேறப்போகிறார்கள். அவர்கள் வாக்காளர்களாக ஆகப் போகிறார்கள்.

இராணுவத்திற்கு சேர்ப்பதாகக் கூறிக் கொண்டு இராணுவத்துக்கு பணிவிடை செய்வதற்காக சேர்த்துக் கொண்டுள்ளார்கள். எமது மக்கள் விவசாயம் செய்ய விரும்புகிறார்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட விரும்புகிறார்கள். இதனை விடுத்து ஏதோ உதவி செய்வதாக கூறிக் கொண்டு இராணுவனத்தினருக்கு வேலை செய்பவர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்வதற்காக இராணுவத்தின் பிரசன்னம் பயன்படுத்தப்படுகிறது. இராணுவம் முகாமுக்குள் தான் இருக்க வேண்டும்.

-தினகரன்

Published by

Leave a comment