-மதியன்பன்
காத்தான்குடியின் மூத்த எழுத்தாளரும் சமூக சேவையாளரும் பஸ்டிப்போ முகாமையாளருமான ஏ.எல்.எம் பழ்லுல்லாஹ் அவர்கள் கடந்த 30.11.2012 அன்று இறையடி சேர்ந்ததையடுத்து காத்தான்குடி மீடியா போரம் நடாத்திய நினைவுக் கூட்டத்தில் பாடிய கவிதை.
ஊடகம் ஒன்று உறங்கிப் போனது
மூன்று தினங்களுக்கு மேல்
மரணித்த ஒருவருக்கு
துக்கதினம் அனுஸ்டிக்க
தூய இஸ்லாத்தில் அனுமதியில்லை
என்றாலும்
நல்லவை பற்றிப்பேச
நமக்கு அனுமதியிருப்பதால்
நானும்
கவிதை பாட மேடை வந்தேன்.
நவம்பர் மாதம்
முப்பதாம் திகதி நள்ளிரவு
என்னுடைய
கைத் தொலைபேசி கத்தத் தொடங்கியது
அர்த்த ராத்திரியில்
அவசியமற்ற அழைப்பென்று
அயர்ந்து தூங்கி விட்டேன்.
விடிந்த பொழுது
விசாரித்துப் பார்த்தேன்;
ஊடகவியலாளர் பழ்லுல்லாஹ்
உயிர் நீத்த செய்தி
ஊரெங்கும் பரவியிருந்தது.
உறக்கத்தை உசுப்பிவிட்ட செய்தி
என் உள்ளத்தை
ஒரு கனம் உறைய வைத்தது.
ஒரு ஊடகம் உறங்கிப் போனதை
உறுதிப்படுத்தியது.
மரணத்தை நம்புகிறோம்
ஆனால்
செய்தியாளனே செய்தியான போது
சில நிமிடங்கள்
சிலையாகிப் போனோம்.
பழ்லுல்லாஹ்
ஊடக உலகத்தில்
எங்களோடு எப்போதும்
ஒன்றித்துப் போனவன் நீ..
ஊடகத் துறையில்
நீ மூத்தவன் என்பதால்
உன் அறையில் வளந்தவர்கள்
இன்னும்
ஊடகத் துறையோடு ஒன்றித்து நிற்க
நீ மட்டும் இளைப்பாறி
இறைவனிடம் சென்று விட்டாய்…
யுத்தம், சுனாமி மற்றும்
இயற்கை
அனர்த்த வேளைகளில்
பழ்லுல்லாஹ் உன்பணி
பாராட்டும் பணியாக நின்றது
பழ்லுல்லாஹ்
நீ
ஊடகத் துறையில் மட்டுமல்ல
சமூக சேவையிலும்
சளைக்காது பணியாற்றியவன்
தீனின் பாதைக்கு
காணிக்கையாக்கியவன்
வெற்றியோ தோல்வியோ
நீ.
கொண்ட கொள்கை மாறாதவன்
அதனோடு
அறுதிவரை
உறுதியாய் நின்றவன்.
உனது கம்பீரம்
மேடைப் பேச்சுக்களிலும்
மேனியை சிலிர்க்க வைக்கும்.
பல உள்ளங்களில்
அது
ஆணியாய் அறைந்து நிற்கும்
நீ பழகும் விதம்
இளகவைக்கும் மற்றவரை
உன் புன்னகை
அது
தவணை முறையில் நிலைத்து நிற்கும்
பழ்லுள்ளாஹ்
நீ
முகாமையாளன் என்றாலும்
பயணிகளோடு ஒன்றாய்
பயணம் செய்வாய்
மக்களின் பயண வசதிகளை
பார்த்துக் கொள்வதற்காக…
நல்லவற்றை
சேவையில் சேர்த்துக் கொள்வதற்காக
பழ்லுல்லாஹ்
வைகறையில் வருவாய் நீ
பஸ் டிப்போவுக்கு
நீ ஓதும் குர்ஆன் ஓசைதான்
அருகில் குடியிருப்போரை
எழுப்பிவிடும் சுபஹூக்கு.
நான் அறிந்த வகையில்
அதிக நேரம்
தக்வா பள்ளியில்தான்
தங்கியிருப்பாய்
தொழுகை நேரம் தொடங்கும் வரை..
பழ்லுல்லாஹ்
நீ
ஓடியோடி செய்தி சேகரித்தாய்
உலகுக்கு வெளிப்படுத்த
இப்போது
ஆடி அடங்கிப் போனாய்
நாம்
அனுதாபத்தை வெளிப்படுத்த
பழ்லுல்லாஹ்
உனக்காகத் தொழுதோம்
உன்னை அடக்கம் செய்தோம்
அழுதோம், ஆறுதல் கூறினோம்
துயரத்தோடு பிரிந்து போனோம்
ஆனால்
உனது இறப்பு நிகழ்வை
இறக்கி விட்டுப் போக முடியவில்லை.
மனதால் வாடுவோருக்கு
மருந்தில்லை ஆறுதலைத்தவிர.
பழ்லுல்லாஹ்வின்
மனையாள், மற்றும் குடும்பத்தாருக்கும்
எங்கள்
இதயத்து ஆறுதல்கள்… என்றென்றும்
உண்டாகட்டும்..
அல்லாஹ்விடம்
இரு கரம் ஏந்துகிறோம்
அவனருளை உனக்காக
நித்தமும் வேண்டுகிறோம்.
சுவனத்தில் நீடு வாழ பிரார்த்திக்கின்றோம்.
நன்றி – வஸ்ஸலாம்
Leave a comment