தீராத வியாதியை குணப்படுத்துவதாக மந்திரவாதியும், மனைவியும் வெறியாட்டம்: கத்தியால் குத்தி சிறுமி கொலை

தீராத வியாதியைக் குணப்படுத்த வைரவர் பூசையொன்று நடத்துவதாகக் கூறி மந்திரவாதியொருவரும் அவரது மனைவியும் நடத்திய வெறியாட்டத்தினால் சிறுமியொருவர் கத்தியால் குத்தி குதறப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தொண்டைக்குள் கத்தியைச் செருகிய மந்திரவாதி மற்றும் இருவரை தீப்பந்தத்தினால் சுட்டுக் காயப்படுத்தி யுள்ளார். தெஹியத்தகண்டிய, கதிரபுர கிராமத்தில் நேற்று அதிகாலை இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

சிறுமியைக் குத்த பயன்படுத்தப்பட்ட கத்தியை இரத்தக்கறை படிந்த நிலையில் பொலிஸார் மீட்டெடுத்துள்ளதுடன் மந்திரவாதியையும் அவரது மனைவியையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.

15 வயது சிறுமியே இந்தச் சம்பவத்தில் பரிதாபகரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், 7 வயது சிறுமி மற்றும் 19 வயது யுவதி தீக்காயங்களுக் குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கதிரபுர கிராமத்தின் வீடொன்றிலுள்ள வருக்கு ஏற்பட்ட தீராத வியாதிக்காக மந்திரவாதி ஒருவரை நாடியுள்ளனர். இந்த நோயை குணப்படுத்துவதற்காக வைரவர் பூசை ஒன்று நடத்த வேண்டும் என்று மந்திரவாதி கூறியதையடுத்து அந்த பூசையை நடத்துமாறு குறித்து வீட்டு உரிமையாளர்கள் மந்திரவாதியை அழைத்துள்ளனர்.

இதனையடுத்து மந்திரவாதியும் அவரது மனைவியும் குறித்த வீட்டிற்குச் சென்று 27ம் திகதி மாலை தொடக்கம் வைரவர் பூசையை மேற்கொண்டுள்ளனர். விடியும் வரை இரவு முழுவதும் பூசை நடத்தப்பட்டுள்ளது. திடீரென அதிகாலை நேரம் மந்திரவாதிக்கும், அவரது மனைவிக்கும் அருள் வந்து ஆவேசகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மந்திரவாதி கத்தியுடனும் அவரது மனைவி தீப்பந்தத்துடனும் ஆவேசத்துடன் ஆடி ஆடி இருந்துள்ளனர்.

இதன் போது அருகிலிருந்த 15 வயதுடைய சிறுமியை திடீரென இழுத்தெடுத்த மந்திரவாதி அச்சிறுமியின் வாய்க்குள் சதக்கென கத்தியை செருக்கி தொண்டைக்குழிக்குள் இறங்கியுள்ளார். அதேநேரம் மந்திரவாதியின் மனைவி தனது கையிலிருந்த தீப்பந்ததத்தினால் 7 வயது சிறுமியையும், 19 வயது யுவதியையும் கதறக்கதற சுட்டுக் காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பதற்றமடைந்த வீட்டு உரிமையாளர்கள் அந்த வைரவர் பூசையை தடுத்து நிறுத்திவிட்டு கத்திக் குத்து, தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனினும் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி உயிரிழந்துள்ளதுடன் தீக்காயங்களுக்குள்ளான இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச்சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தெஹியத் தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தினகரன்

Published by

Leave a comment