பலஸ்தீனின் காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டு முழு உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனது. எட்டு நாட்களாக நீடித்த இந்தத் தாக்குதல்களால் மொத்தமாக 164 பலஸ்தீனர்கள் ஷஹீதாக்கப்பட்டதுடன் 1400க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் 5 இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இயக்கத்தின் இலக்குகளை நோக்கியே தாம் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்தபோதிலும் பெரும்பாலான குண்டுகள் பொது மக்கள் வாழும் பகுதிகளிலேயே வீழ்ந்து வெடித்தன என்பதையும் உயிரிழந்தவர்களில் கணிசமானோர் பெண்களும் சிறுவர்களுமே என்பதும் இந்த இடத்தில் கவனத்திற் கொள்ள வேண்டிய உண்மைகளாகும்.
மேற்கு நாடுகளின் இஸ்ரேல் ஆதரவுப் போக்கு
இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல்களை கட்டவிழ்ப்பது இதுதான் முதற்தடவையல்ல. என்று பலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேல் எனும் சட்டவிரோத நாடு உருவாக்கப்பட்டதோ அன்று முதல் இன்று வரை இவ்வாறான கொடூரங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. ஆனால் இவை எவற்றையுமே ஐக்கிய நாடுகள் சபையோ அமெரிக்காவோ அல்லது மனித உரிமைகள் பற்றிப் பேசுகின்ற ஏனைய மேற்கு நாடுகளோ கண்டுகொள்வதில்லை என்பதுதான் இங்கு துரதிஷ்டமாகும்.
காஸா மக்களை இஸ்ரேல் தொடர்ச்சியாக எட்டு நாட்களாக குண்டு வீசிக் கொன்ற போதிலும் ஐக்கிய நாடுகள் சபையோ அமெரிக்காவோ ஏனைய மேற்கு நாடுகளோ இஸ்ரேலைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முன்வரவில்லை. மாறாக இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையிலேயே அமெரிக்காவினதும் ஏனைய தரப்புகளினதும் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
காஸா விவகாரம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட வெள்ளை மாளிகைஇ இஸ்ரேல் தனது இருப்பைத் தக்கவைப்பதற்காக முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டிருந்ததோடு ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றே கோரிக்கைவிடுத்திருந்தது. மாறாக பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் குறித்த அறிக்கையில், ஒரு வார்த்தையைத்தானும் குறிப்பிட்டிருக்கவில்லை.
அதேபோன்றுதான்இ ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்குமிடையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளைத் தடுத்துநிறுத்தி இஸ்ரேலின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலான முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டிருந்தது. தனது இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனை உடனடியாக இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்த ஒபாமா, இஸ்ரேலிய நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையே முன்னெடுத்திருந்நததாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
அதேபோன்றுதான் மத்திய கிழக்குக்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்டு இஸ்ரேலுக்குச் சென்ற ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து ஒருவார்த்தையையேனும் வெளியிடவில்லை என்பதும் இங்கு குறிப்பிட்டுக்காட்ட வேண்டிய உண்மையாகும்.
மறுபுறம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டவையாக தம்மைக் காட்டிக் கொள்ளும் மேற்கு நாடுகள் கூட காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் படுகொலைகளை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமேயாகும்.
இலங்கையின் இஸ்ரேல் ஆதரவுப் போக்கு
இலங்கை அரசாங்கம் கூட இந்த விடயத்தில் தவறிழைத்துவிட்டது என்பதே உண்மையாகும். இலங்கை-பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராகவிருந்தவரை ஜனாதிபதியாகக் கொண்ட இலங்கை கூட காஸா மீதான இஸ்ரேலின் படுகொலைகளைக் கண்டுகொள்ளவில்லை.
எட்டு நாட்களாக காஸாவில் படுகொலைகள் அரங்கேறி நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோதிலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இரண்டு தினங்களின் பின்னரே இலங்கை மழுப்பலான அறிக்கையொன்றை வெளியிட்டது. அதிலும் கூட இரு தரப்பும் தாக்குதல்களைக் கைவிட்டு சமாதான வழிமுறைகளைக் கையாள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர, காஸா படுகொலைகளைக் கண்டிக்கவில்லை.
இதற்குக் காரணம் அண்மைக்காலமாக இலங்கை இஸ்ரேலுடன் கடைப்பிடித்துவரும் நெருங்கிய உறவேயாகும். முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க முதல் நாமல் ராஜபக்ஸ எம்.பி. வரை அண்மைக் காலங்களில் பல அரசியல்வாதிகள் இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். இஸ்ரேலின் அலுவலகமொன்று கொழும்பில் மறைமுகமாக இயங்கி வருகிறது. இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்கள் அனுப்பப்படுகிறார்கள். இஸ்ரேலின் குடியரசு தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடத்தப்பட்டது. இவ்வாறு இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் சமீப காலத்தில் மிகவும் வலுப்பெற்று வருவதை இந்த நிகழ்வுகள் நன்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.
இவ்வாறு பலஸ்தீன மக்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளிஇ இஸ்ரேலின் நலன்களுக்கு இசைவாகச் செயற்படுவதற்கு இந்த அரசாங்கம் முயல்வதானது இந்த நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியையே தோற்றுவித்துள்ளது.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கு
இஸ்ரேலுடன் அரசாங்கம் நட்புறவு கொண்டாடுவது தொடர்பில் அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தனவுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இஸ்ரேலிய அலுவலகம் திறக்கப்படுவதற்கு அப்போதிருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் விளைவாகவே இலங்கையில் இஸ்ரேல் காலூன்ற இடமளிக்கப்படவில்லை. அன்று அவ்வாறு இடமளிக்கப்பட்டிருப்பின் இன்று இஸ்ரேல் இலங்கையில் அகலக்கால்பதித்திருக்கும்.
இவ்வாறு இஸ்ரேல்-இலங்கை உறவு தொடர்பில்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அக்கறையை வெளிப்படுத்தாவிட்டாலும் காஸா மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற சமயத்திலாவது அதுபற்றிக் குரல் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. மாறாக ஜனாதிபதியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் நாடெங்கிலுமுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மரங்களை நடுவதிலும் பள்ளிவாசல்களில் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதிலுமே அக்கறையாகவிருந்தார்கள். உலகில் எந்த மூலையில் ஒருமுஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுக்க வேண்டியதும் கவலைப்பட வேண்டியதும் அடுத்த முஸ்லிமின் கடமையாகும். இந்த சகோதரத்துவ பிணைப்பே இஸ்லாத்தின் அடிநாதமாகும். ஆனால் துரதிஷ்டவசமாக நமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அடுத்த முஸ்லிமின் துயரத்தில் பங்கெடுப்பதைவிடவும் ஜனாதிபதி மீதான தமது பற்றை வெளிப்படுத்துவதே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
காஸா படுகொலைகளைக் கண்டித்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஓரிரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களைத் தவிர எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரோ, அமைச்சர்களோ கலந்துகொள்ளவில்லை. இந்த விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு உள்ள அக்கறை கூட முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லை என்பது கசப்பாயினும் உண்மையேயாகும்.
இஸ்ரேலின் தோல்வியும் ஹமாஸின் வெற்றியும்
எகிப்தின் மத்தியஸ்தத்தினால் காஸாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்டதன் மூலம் இன்று ஹமாஸ் இயக்கமே வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் தாக்குதல்கள் மூலமாக இஸ்ரேலினால் தனது இலக்குகளை அடைந்துகொள்ள முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிட்டுக்காட்டத்தக்க உண்மையாகும்.
இதற்குக் காரணம் அண்மைக் காலத்தில் மத்திய கிழக்கில் இஸ்லாமியவாதிகளின் கைகள் மேலோங்கியிருப்பதேயாகும். டியூனீசியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் காஸா விடயத்தில் காட்டிய அக்கறையும் இஸ்ரேலுக்கு விடுத்த எச்சரிக்கையும் இஸ்ரேலையும் அதன் நேச நாடுகளையும் கதிகலங்க வைத்துவிட்டன. காஸா மீதான தாக்குதல்கள் ஆரம்பித்தவுடனேயே அங்கு மேற்குறித்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஏனைய அதிகாரிகளும் விஜயம் செய்து பலஸ்தீனுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். இஸ்ரேலிய பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ் காஸா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கைவிடுத்திருந்தார். அதேபோன்று ஹமாஸ் இயக்கத்திற்குத் தேவையான ஆயுத உதவிகளை வழங்கப் போவதாக ஈரான் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தது. எகிப்திலிருந்து 500 பேர் உடனடியாக காஸாவுக்கு விஜயம் செய்து பலஸ்தீன மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.
சமீபத்திய மத்திய கிழக்குப் புரட்சிகளுக்குப் பின்னர் அங்குள்ள அரசியல் நிலைவரங்கள் பாரியளவில் மாற்றமடைந்துள்ளன என்பதே இதன்மூலம் வெளிப்படும் உண்மையாகும். எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் எப்போதுமே இஸ்ரேலிய நலன்களைக் காப்பதிலேயே முன்னின்று செயற்பட்டிருந்தார். ஆனால் இன்று நிலைமை அவ்வாறல்ல. இஸ்ரேலுக்கு எதிரான கொள்கையைக் கொண்டவர்களே இன்று அந்த நாடுகளில் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருக்கிறார்கள். இதுவே இன்று இஸ்ரேலுக்கு மிகப் பெரும் தலையிடியாகவும் சவாலாகவும் மாறியிருக்கிறது. அதனால்தான் தனது இலக்கை எட்டமுடியாத போதிலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது.
ஆக மொத்தத்தில் இஸ்ரேல் தோல்வியடைந்திருக்கிறது என்பதையே இந்த போர் நிறுத்தம் நன்கு வெளிப்படுத்தி நிற்கிறது. இஸ்ரேல் இதேபோன்று பல தோல்விகளைச் சந்திக்கும் காலம் வெகு தூரத்திலில்லை. முஸ்லிம் உலகம் தொடர்ந்தும் இஸ்ரேல் விடயத்தில் தமது உறுதியான எதிர்ப்பை வெளிக்காட்டுவதுடன் இஸ்ரேல் எனும் சட்டவிரோத நாட்டின் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். அதுவே அல்லலுறும் பலஸ்தீன மக்களுக்காக நாம் செய்யும் கைமாறாகும்.
பலஸ்தீன மக்களுக்காகவும் அக்ஸாவை மீட்பதற்காகவும் நாம் என்றென்றும் பிரார்த்திப்போம். இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட நமது பலஸ்தீன உறவுகளினதும் பிஞ்சுகளினதும் சுவனவாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.
Leave a comment