-MJ
தற்பொழுது பங்களாதேஷில் இடம்பெற்று வரும் பங்களாதேஷ்-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வீரர் அப்துல் ஹஸன் கிரிக்கட் வரலாற்றில் 135 வருடங்களின் சாதனையைத் தொட்டு, பங்களாதேஷ் ரசிகர்களின் ஆனந்தக் கண்ணீரில் முழ்கி, உலக கிரிக்கட் ரசிகர்களின் இதயங்களையும் தொட்டுச் சென்றுள்ளார்.
இருபது வயதுடைய அப்துல் ஹஸன் தனது முதலாவது (Debut) போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார். இச்சாதனையானது,
ஓர் டெஸ்ட் போட்டி
ஓர் வீரரின் முதலாவது போட்டி,
பத்தாவதாக களமிறங்கிய வீரர்
என்ற 3 சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ‘டப்’ (Duff) எனப்படும் அவுஸ்திரேலிய வீரர். இவர் 1902 ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இச்சாதனையை அவுஸ்திரேலியா-மெல்போர்ன் மைதானத்தில் நிகழ்த்தி இருந்தார். பத்தாவதாக களமிறங்கிய தனது கன்னிப் போட்டியில் 104 ஓட்டங்களைப் பெற்று இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இதே ஒரு சாதனையை 135 வருடங்களின் பின்னர் அப்துல் ஹஸன் நேற்று (புதன்கிழமை) நிகழ்த்தி இருந்தார்.
193/8 என்ற தடுமாற்றத்தில் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனது அணிக்கு, இவர் 113 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார். மஹ்முதுல்லாஹ்வுடன் இணைந்து 172 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை வழங்கி, தனது அணியின் ஓட்ட எண்ணிக்கையை இவர்கள் இருவரும் அதிகரிக்க இறுதிவரை போராடினர்.
இச்சாதனைச் சதத்தை அப்துல் ஹஸன் 108 பந்துகளில் அடைந்தார். இவற்றுள் 13 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் உள்ளடங்கும். இடது கை துடுப்பாட்ட வீரரான அப்துல் ஹஸன் முதல்தர போட்டிகளில் அதி கூடிய ஓட்டங்களாக 61 ஓட்டங்களைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment