இலக்குத்தவறா இஸ்ரேலின் தாக்குதலும் ஹமாஸின் தந்திரமில்லா தலைமைத்துவமும்!!

அரபுநாடுகளுக்கு கெய்ரோ மனிதாபிமானஅழைப்பு: விசேட தூதுக்குழு இருநாட்களுக்குள் செல்லும்!

-MJ

கடந்த 4 நாட்களாக இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் காஸா கரும்புகை மண்டலமாகவும் செங்குறுதி சிந்திய பூமியாகவும் மாறிக்கொண்டிருக்கின்றது.

இதுவரை 40 பஸ்தீன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 3 பேர் இஸ்ரேலால் சொல்லி வைத்து கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்பது ஓர் விசேட அம்சம்!

நவீன வசதி வாய்ப்புக்களின்றி வெறிச்சோடிக்கிடக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய காஸாவின் மருத்துவமனைகளில் காயப்பட்டவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இதில் காயப்பட்ட குழந்தைகளதும் சிறுவர்களதும் அழுகைகளும், மரணங்களும் உலகை அதிரவைத்திருக்கின்றன.

படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவரும் சுமார் 200 பேர்களின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கின்றன. மருத்துவமனையிலிருந்து தினமும் 5 உயிர்கள் பிரிகின்ற பரிதாபமான நிலை அங்கு காணப்படுகின்றது.

போதாக்குறைக்கு தினமும் அதிகாலை வேளையில் இஸ்ரேலின் வான்தாக்குதல்கள் காஸாவின் பொதுமக்களையும் ஹமாஸின் தலைவர்களையும் குறிவைத்து நடாத்தப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகின்றனர்.

அரபுலகுக்கு கெய்ரோவின் மனிதாபிமான அழைப்பும்-தூதுக்குழுவும்:

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்களை உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களான ஏ.எப்.பி, அல்-ஜஸீரா, பி.பி.சி ஆகியன உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டும், ஐ.நா. மனித உரிமை அமைப்போ, அமெரிக்காவோ அல்லது அமெரிக்காவின் காலணித்துவத்திலிருக்கும் மேற்கத்தய நாடுகளோ இதுவரை தங்களது குரல்வலையை உயர்த்த அருகதையற்றவர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் எகிப்திய புதிய ஜனாதிபதி அகமட் முர்ஸி அவர்கள் அவசரமாக அரபுலகுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இஸ்ரேலின் தாக்குதலை உடன் நிறுத்தக்கோரியும், இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையில் சமாதான உடன்படிக்கையை அவசரமாக மேற்கொள்ளும் முகமாகவும், ஐ.நாடுகள் மனித உரிமை அமைப்புக்கு மகஜர் கொடுக்கவும் எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு வரும்படி அரபுத் தலைவர்களுக்கு மனிதாபிமான அழைப்பை விடுத்திருக்கின்றார்.

இவரது மனிதாபிமான அழைப்பிற்கு இதுவரை துருக்கியும் கட்டாரும் செவிசாய்த்திருக்கின்றன. எனினும் பிரமாண்டமான அரபுலகிற்கு இவ்விரு நாடுகளின் ஆதரவுக்கரங்கள் போதாமையாக இருக்கின்றன. எனினும் இன்றும் மேலதிக அழைப்பு விடுப்பதாக கெய்ரோ அறிவித்திருக்கின்றது.

விரைவாக நடாத்த தீர்மானிக்கப்பட்டிருக்கும் கெய்ரோ மாநாட்டிற்குப் பின்னர் இரு நாட்களுக்குள் தூதுக்குழு ஒன்று இஸ்ரேலுக்கும் காஸாவிற்கும் செல்லவுள்ளதாகவும் அகமட் முர்ஸி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இலக்குத்தவறா தாக்குதலும் தந்திரமில்லா ஹமாஸ் தலைமையும்!

சுமார் 12 ரொக்கட்டுக்களை இஸ்ரேலுக்கு ஏவிவிட்டு மூச்சு விடுவதற்கு முன்னர் இரு ஹமாஸ் தலைவர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்குத் தாங்கள் நடாத்தும் தாக்குதலும் தாக்குதலின் பின்னரான எதிர்தரப்பு பதிலடியும்  தெரியா விட்டாலும், போராளிகளுக்கு குறிப்பாக தலைவர்களுக்கு தெரியவேண்டும்.

ஓர் தாக்குதலை நடாத்தினால் பதிலடி அடுத்த நிமிடம் வரும். அதிலும் பரம எதிரியும், அமெரிக்காவின் அளவில்லா அன்பிலும் தொழிநுட்பத்திலும் இராணுவ உதவியிலும் தங்கியிருக்கும் பிரமாண்டமான இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

ரொக்கட்டுக்களை அனுப்பிவிட்டு அவ்விடத்திலேயே தங்கி இருக்கும் எந்த போராட்ட தலைவர்களையும் உலகில் இதுவரை காணமுடியவில்லை. இதே போல் விமானப்படையின் தாக்குதலிருந்து தப்பக்கூடிய அல்லது எதிர்க்கக்கூடிய பதுங்கு குழிகள் அற்ற வெறும் கட்டடங்களிள் இருந்துகொண்டு ஆலோசனை நடாத்துவது, திட்டமிடுவது போன்ற செயற்பாடுகளை ஹமாஸ் தலைவர்கள் உட்பட போராளிகளும் செய்து வருகின்றனர்.

இதனால் வான் மூலமாக அவதானிக்கும் கச்சிதமான தொழிநுட்பத்தால் இஸ்ரேல் சொல்லி வைத்து இலக்குத் தவறாமல் தாக்கி தலைவர்களை திட்மிட்டு கொலை செய்து வருகின்றது. இதன் காரணமாக முக்கிய 3 தளபதிகள் தந்திரமில்லா போராட்டத்தில் பரிதாபகமாக உயிரிழந்திருக்கின்றனர்.

இதற்கிடையில் ஹமாஸின் 60 வீதமான ரொக்கட்டுகளை அழித்திருப்பதாகவும், இன்னும் சில ஹமாஸ் தலைவர்கள் குறிவைக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. மேலும் இன்னும் 3 நாட்களுக்குள் ஹமாஸின் ரொக்கட் தளங்களை அழித்துவிடுவதாகவும் கூறியிருக்கின்றது.

தலைவர்கள் தந்திரமாக செயற்படவும் முடியாத நிலையிலும், இருக்கும் குறிப்பிட்ட சில ஆயுதங்களை மறைக்கக்கூடிய வசதிகளும் வளங்களும் இல்லாத நிலையில் ஹமாஸ் தடுமாறிக் கொண்டிருக்கின்றது!

Published by

Leave a comment