உம்றாவுக்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் இலங்கை முஸ்லிம்கள் இனிமேல் முதலில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்திடம் ஆலோ சனை பெறுவது அவசியம் என்று நகர அலுவல்களுக்கான சிரேஷ் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்று தெரிவித்தார்.
உம்றாவுக்குச் செல்பவர்கள் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் ஆலோசனையை பெற முன்னர் முகவரகங்களை நாடவோ, பணத்தை வழங்கவோ வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை இனிவரும் காலங்களில் ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்கு இலங்கை முஸ்லிம்களை, முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஊடாக அழைத்துச் செல்வது குறித்தும் விஷேட கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அறிவித்திருந்த கட்டணத்திற்கு மேலாக சில முகவர் நிறுவனங்கள் ஹஜ்ஜுக்காக கட்டணங்கள் அறவிட்டுள்ளன. இந்நிறுவனங்கள் ஊடாக ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற எவராவது எழுத்து மூலம் புகார் தெரிவிப்பாராயின், அது தொடர்பாக விசாரணை நடாத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டி யிலுள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே சிரேஷ்ட அமைச்சர் பெளஸி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இம்முறையில் ஹஜ் ஏற்பாடுகளை சிறப்பான முறையில் மேற்கொண்டோம். எமக்கு 2800 ஹஜ் கோட்டாக்களே கிடைத்தன. இதற்கு மேலதிகமாக 150 பேஸா விஸாக்கள் 25 முஜாமலா விஸாக்கள், ஐக்கிய அரபு குடியரசு தூதுவரின் ஏற்பாட்டில் 17 விஸாக்கள் என்றபடி சுமார் 3000 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்கள்.
நாம் ஹஜ்ஜுக்கு செல்வோரை முன்கூட்டியே பதிவு செய்து முதன் முறையாக இக்கடமையை நிறைவேற்றுபவருக்கு முன்னுரிமை வழங்குகின்றோம். என்றாலும் சிலர் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவருடன் கொண்டிருக்கும் நெருக்கமான உறவைப் பயன்படுத்தி விஸா பெற்று ஹஜ்ஜுக்கு சென்றுள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே பலமுறை ஹஜ் செய்தவர்கள்.
முதல் கடமையாக ஹஜ் செய்பவருக்கு முன்னுரிமை அளிக்கையில் சவூதி அரேபிய தூதுவர் பல முறை ஹஜ் செய்பவர்களுக்கு கடந்த முறை விஸா வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவருக்கு எழுத்து மூலம் அறிவிப்பதாக முடிவு செய்துள்ளோம்.
அதேநேரம் பதிவு செய்பவர்களுக்கு பதிவின் அடிப்படையிலேயே ஹஜ் செய்யச் செல்லுவதற்கு விஸா வழங்கப்படும். கடந்த வருடம் 6245 பேர் பதிவு செய்தன. அவர்களில் சுமார் 3000 பேரளவில் அக்கடமையை இம்முறை நிறைவேற்றி விட்டனர். அப்பதிவில் எஞ்சியுள்ளவர்களுக்கு அடுத்த வருடம் முன்னுரிமை அடிப்படையில் விஸா வழங்கப்படும்.
அதனால் இக்கடமையை நிறை வேற்றச் செல்ல விரும்புபவர்களை முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன். இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்பவர்களிடம் ரூபா 425,000.00 படி அறவிடுமாறு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி இருந்தோம். ஆனால் சில முகவர் நிறுவனங்கள் ஐந்து, ஆறு இலட்சம் ரூபாவை அறவிட்டிருக்கின்றன.
இந்த முகவரகங்கள் பெற்றுக்கொடுத்த சேவையில் குறைபாடுகள், தவறுகள் இருந்தால் எமக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதிக்குள் எழுத்து மூலம் அறிவியுங்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்துள்ளோம். இனிமேல் ஹஜ் உம்றாவுக்கு செல்ல விரும்புபவர்கள் முதலில் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்திடம் ஆலோசனை பெற வேண்டும். அதன் பின்பே முகவர்களை நாடவேண்டும். இச்செய்தியாளர் மாநாட்டில் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம். நவாவியும் கலந்துகொண்டார்.
-தினகரன்
Leave a comment