ஐக்கிய அரபு இராச்சியத்தில் இணையதள கருத்துக்கு சிறை

அரசுக்கு எதிராகவோ அல்லது ஆட்சி மாற்றம் குறித்தோ இணையதளத்தில் கருத்து வெளியிடுவதற்கு சிறைத் தண்டனை வழங்கும் சட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமுல்படுத்தப்பட் டுள்ளது.

இணைய குற்றங்கள் தொடர்பாகவே இந்த கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கீழ் இருக்கும் பாதி சுயாட்சிபெற்ற ஏழு எமிரெட்களினதும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரச கட்டமைப்புக்கு எதிராக செயற்படுபவர்கள் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“இணையத்தளத்தை நடத்துபவர் அல்லது ஏதாவது தகவல் தொடர்பு ஊடகத்தினூடே அரசுக்கு எதிராகவோ அல்லது அதற்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையிலோ செயற்பட்டால் எவராயினும் சிறைத்தண்டனைக்கு உள்ளாவார்” என ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச ஊடகமான ‘வாம்’ செய்தி வெளியிட்டுள் ளது.

இந்தக்குற்றத்திற்காக குறைந்தபட்சம் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதோடு வெளி நாட்டினராயின் உடன் நாடுகடத்தப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் 40 இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர்.

அரபு நாடுகளில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையிலேயே ஐக்கிய அரபு இராச்சியம் இந்த கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. எனினும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் போன்று அங்கு மன்னர் குடும்பத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை. ஆனால் கடந்த மார்ச் தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 60க்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எந்த குற்றச்சாட்டும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர்.

-தினகரன்

Published by

Leave a comment