51,420 பயிற்சி பட்டதாரிகளுக்கு அடுத்த ஆண்டு நிரந்தர நியமனம்

பயிற்சிப்பட்டதாரிகள் என்ற ரீதியில் அரச துறையில் தற்போது பயிற்சி பெற்றுவரும் 51,420 பட்டதாரிகளுக்கும் அடுத்தாண்டு நிரந்தர நியமனங்கள் பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

அபிவிருத்தி அதிகாரிகள் சேவையாப்பின் பிரகாரம் இவர்களுக்கான நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இதற்கென பயிற்சிப் பட்டதாரிகளை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு உள்ளீர்ப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

இலங்கை அரசாங்கத்தினால் மிக அதிகளவான பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இதனைக் கூற முடியும். அத்துடன் தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் மக்களின் தேவைகளுக்காக தீர்வைப் பெற்றுக்கொடுத்து நாட்டின் துரித அபிவிருத்திக்காக அவர்களின் சேவைகளைப் பெற்று அரச சேவையைப் பலப்படுத்துவதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழி காட்டலின் கீழ் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் அதிகளவான பட்டதாரிகளான 6549 பேர் குருநாகல் மாவட்டத்திற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பிக்குப் பயிற்சிப் பட்டதாரிகள் 416 பேரை கல்வி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களில் தகுதியான வெற்றிடங்க ளுக்கு இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சிப் பட்டதாரிகளை அரச சேவையில் உள்Zர்ப்பது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினதும் பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்னவினதும் தலைமையில் அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்கள் மாவட்ட அரசாங்க அதிபர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, அரச நிர்வாக பிரதியமைச்சர் விஜய தஹநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் பி. பி. அபேகோன் உள்ளிட்டவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

பயிற்சிப் பட்டதாரிகள் இவ்வருடத்தின் ஆரம்பப் பகுதியில் இணைத்துக்கொள்ளப்ப ட்டதும் அதற்காக அவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள், சபைகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் ஆகியன அவற்றுக்குத் தேவையான பயிற்சி பட்டதாரிகளின் எண்ணிக்கை மற்றும் பட்டப்படிப்புத் துறை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

அதிக எண்ணிக்கையான 16,478 பயிற்சி பட்டதாரிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக்கொள்ள ப்பட்டுள்ளதுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அந்தப் பயிற்சிப் பட்டதாரிகள் நாட்டின் 25 மாவட்டங்களில் 324 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 14,008 கிராம சேவை பிரிவுகளில் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் போது தற்போது பயிற்சி பட்டதாரிகளாக செயற்படும் டிப்ளோமாதாரிகள் மற்றும் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளையும் அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் முறைமை ஒன்றை தயாரிப்பதற்காக அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் யோசனைகள் அரசாங்கத்துக்கு அண்மையில் வழங்கப்படவுள்ளன.

-தினகரன்

Published by

Leave a comment