மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையம்: பொன்விழா ஒரு பார்வை

இலங்கையில் முஸ்லிம் அநாதைப் பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிலையமான மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையம் அரை நூற்றாண்டைக் கடந்து தனது பொன்விழாவை அண்மையில் கொண்டாடியது.

இந் நிலையத்தின் பரிபாலன சபைத் தலைவர் டி. ஏ. எஸ். முஹம்மத் தலைமையில் நிலையத்தின் யதாமா பாடசாலை வளாகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதி (2012) வெகு சிறப்பாக இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாவின் நிமித்தம் நிலையத்தினால் நடாத்தப்படும் யதாமா பாடசாலை மற்றும் அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரி ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றதுடன், இங்கு கற்கும் மாணவர்களின் நலன் கருதி நிலையத்தின் நூலகத்திற்கென இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் நிலையத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டது. பழைய மாணவர் சங்கத்தினால் ‘யதாமா’ என்ற பெயரில் பத்திரிகையொன்றும் வெளியிடப்பட்டது.

இதே வேளை இந்நிலையத்தின் பொன்விழாவையொட்டி இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தம்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒழுங்கு செய்திருந்த கண்காட்சியொன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அத்தோடு இந்நிலையத்தில் தங்கி கல்வி கற்கும் மாணவர்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் தாய்மாரும், பெண் உறவினர்களும் தங்குவதற்கான ஓய்வு விடுதியும் இவ்விழாவை நினைவு கூரும் வகையில் திறந்து வைக்கப்பட்டன.

இவ்விழாவில் சர்வதேச இஸ்லாமிய நன்கொடை அமைப்பின் பணிப்பாளரது பிரதி நிதியாக ஆசிய குழுச் செயலாளர் ஷெய்க் ஸலாஹ் கதீர் சுல்தான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அவர் தனதுரையில், ‘மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்திற்கும் தங்களது ஸ்தாபனத்திற்குமிடையில் இருக்கும் நெருக்கமான உறவை விரிவாக எடுத்துக் கூறியதுடன் இந்நிறுவனத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கண்டு தாமும் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்நிலையத்திற்குத் தொடர்ந்தும் உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையத்தின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் அதன் தற்போதைய தலைவர் டி. ஏ. எஸ். முஹம்மத் அயராது உழைத்து வருவதாகவும், அவரது பணிகள் வெற்றி பெறவும், அவரது நீடித்த ஆயுளுக்காகவும் சர்வவல்லமை படைத்த அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

இவ்விழாவில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் ரிஸ்வி முப்தி, “இஸ்லாம் அநாதைகள் பராமரிப்புக்கு அளித்திருக்கும் முக்கியத்துவத்தை தனதுரையில் விரிவாக எடுத்துக் கூறினார்.

‘முஹம்மத் (ஸல்) அவர்களது காலத்தில் அநாதைப் பிள்ளைகள் ஒவ்வொருவரது வீட்டிலும் வைத்து பராமரிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியான நிலைமை இன்றும் உருவாக வேண்டும். என்றாலும் அநாதைப் பிள்ளைகளின் தந்தையின் பெயரை அப்பிள்ளைகளைப் பராமரிப்பவர்கள் ஒருபோதும் மாற்றக் கூடாது. அது இஸ்லாம் தடை செய்திருக்கும் ஒரு விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து நிலையத்தின் பரிபாலன சபைத் தலைவர் டி. ஏ. எல். முஹம்மத் தமதுரையில், இந்நிலையத்தின் ஆரம்பம், அதன் தற்போதைய நிலைமை, எதிர்காலத்திட்டங்களை மிகவும் தெளிவாக விலாவாரியாக எடுத்துக் கூறினார்.

இந்நாட்டிலுள்ள முஸ்லிம் அநாதைப் பிள்ளைகளின் நலன் கருதி மர்ஹும் ஜாபிர் ஹாஜியார் அன்றைய தப்லீக் ஜமாஅத் தலைவர் மர்ஹும் ஹனிபா ஹாஜியாரின் ஒத்துழைப்புடன் இந்நிலையத்தை ஆரம்பித்தார். இந்நிலையத்தை ஆரம்பித்த ஆரம்ப கட்டங்களின் போது அவர்கள் முகம் கொடுத்த கஷ்டங்களும், அவர்களது அர்ப்பணிப்புக்களும் என்றும் மறக்கப்பட முடியாதவை” என்றும் அவர் நினைவு கூர்ந்தார். அதேநேரம் மர்ஹும் ஜாபிர் ஹாஜியாரின் மறைவுக்குப் பின்னர் இந்நிலையத்தின் தலைமைப் பொறுப்பை தாம் ஏற்று இற்றைக்கு ஏழு வருடங்களாகிவிட்டன. இக்காலப்பகுதியில் இந்நிலையம் அடைந்திருக்கும் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எடுத்துக் கூறுவதற்கும் அவர் தவறவில்லை.

என்றாலும் எதிர் காலத்தில் முன்னெடுக்க ப்படவிருக்கும் வேலைத் திட்டங்களையும் அவர் விபரமாக இவ்விழாவின் போது விபரித்தார். அவற்றில் யதாமா பாடசாலை மாணவர்களுக்கென 2013ம் ஆண்டு முதல் கல்வி பொதுத் தராதர உயர் தர வகுப்புகளை ஆரம்பித்தல், இந்நிலையத்தில் கல்வி பெறும் மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சியை வழங்கவென தனியான நிலையமொன்றை அமைத்தல், வருடா வருடம் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில் கல்வி முறையை மேம்படுத்துதல், அதிகரித்துச் செல்லும் நிலையத்தின் பராமரிப்பு செலவை ஈடுசெய்யவும், அதன் சுய இயக்கத்திற்கு துணைபுரிவதற்கும் ஏற்றவகையில் நிலையத்திற்கு சொந்தமான கொழும்பு ஹைட்பார்க் காணியில் 13 மாடிகளைக் கொண்ட வர்த்தகமற்றும் அலுவலகக் கட்டிடத் தொகுதியை அமைத்தல் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

இதேநேரம் சவூதி அரேபியா, குவைத் உட்பட மத்திய கிழக்கிலுள்ள பல நாடுகள் எமது நிலையத்திற்கு பொருளாதார ரீதியாகவும், பண ரீதியாகவும் உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த நாடுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளவும் அவர் மறக்கவில்லை.

இந்த நிலையத்தை சகல வசதிகளையும் கொண்ட நிறுவனமாகக் கட்டியெழுப்புவதற்கான எல்லா நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அப்போது இது முழு உலகிற்கும் ஓர் முன்மாதிரியான ஸ்தாபனமாகத் திகழும். அதுவே தமது இலக்கும், எதிர்பார்ப்பும் என்றும் குறிப்பிட்டுக் கூறினார். நிலையத்தின் தலைவரான டி. ஏ. எஸ். முஹம்மத். இவ்விழாவில் இந்நிலையத்தின் முதலாவது மாணவரும், பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட் காலத் தலைவருமான மெளலவி எம். தெளபீக் உரையாற்றும் போது தமது ஆரம்ப கால அனுபவங்களை எடுத்துக் கூறினார். அவரின் உரை சபையோரின் உள்ளங்களைத் தொடக் கூடியனவாக இருந்தன.

இந்நிகழ்வில் கண்டி வெஸ்வூட் கல்லூரியில் கல்வி கற்கும் பதினொரு வயது மாணவரான மஹ்தி பின் உஸாமா இஸ்லாத்தில் நேர முகாமைத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இவர் விஞ்ஞானம், வானசாஸ்திரம், சமூகவியல் என எந்தத் தலைப்பிலும் மணித்தியாலக் கணக்கில் சொற்பொழிவாற்றக் கூடிய அபார திறமை மிக்கவராகத் திகழுகின்றார்.

இவ்வாறு சிறப்பாக நடைபெற்ற இப்பொன் விழா வைபவத்தில் முன்னாள் சபாநாயகரும், நிலையத்தின் போஷகருமான எம். எச். முஹம்மத், வாமி நிறுவனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஒமர் இத்ரீஸ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மெளலவி எம். எம். ஏ. முபாரக், உதவி பொதுச் செயலாளர் மெளலவி எம். எஸ். எம். தாஸிம், ஜம்இய்யத்துஷ் ஷபாப் அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் மெளலவி எம். எஸ்.எம். ரiட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் அடங்கலாக நிலையத்தின் பழைய மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆரம்பம் முதல் பல விதமான சவால்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம் கொடுத்து அவற்றை வெற்றி கொண்டு ஆல விருட்சமாகத் திகழும் மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையம் தான் இப்போது பொன்விழாவை கொண்டாடி இருக்கின்றது.

அது இன்னும் பல பொன் விழாக்களை வெற்றிகரமாகக் கொண்டாடிட இச்சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

-தினகரன்

Published by

Leave a comment