சர்வதேச அளவில் தாக்கம் செலுத்தக்கூடிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று!

அமெரிக்க அரசியல் ஓர் பார்வை..

கடந்த 18 மாதங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னணி வேட்பாளர்களான ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா மற்றும் குடியரசு கட்சியின் மிட் ரொம்னிக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. அண்மைய கருத்துக் கணிப்புகளில் இருவரும் சரிசமமான அளவில் ஆதரவை பெற்றுள்ளதால் தேர்தல் முடிவுகளில் இழுபறியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

நேற்று நள்ளிரவுடன் பிரசாரங்கள் முடிவடைந்த நிலையில் இரு வேட்பாளர்களும் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாநிலங்களில் கடைசி தினத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா மெடிசொன், விஸ்கொசின் பகுதிகளில் முதல் கட்டப் பிரசாரத்தையும் லோவா மற்றும் ஒஹியோ மாநிலங்களில் இறுதிக் கட்ட பிரசாரத்தையும் மேற் கொண்டார். மறுபுறத்தில் ரொம்னி பிளோரிடா மாநிலத்தில் நேற்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னெடுத்தார்.

இம்முறை தேர்தலில் ஒருசில மாநிலங்கள் முடிவுகளில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்து ள்ளனர்.

நான்கு நேர வலயங்களில் தேர்தல்

அமெரிக்காவின் நான்கு நேர வலயங்க ளுக்கு உட்பட்டு இன்றைய தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதன்படி முதலாவது வாக்குச் சாவடி விர்ஜினியா மற்றும் நியூஹம்ஷயர் மாநிலங்களில் காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதனையடுத்து ஏனைய கிழக்கு மாநிலங்களான கலிபோர்னியாவில் வாக்கு பதிவுகள் ஆரம்பமாகும்.

இதில் ஹம்ப்ஷயர் மாநிலத்தின் ஒரு கிராமத்தின் இன்று நள்ளிரவில் அங்கிருக்கும் 12 குடியிருப்பாளர்களும் தேர்தலின் கடைசி வாக்குகளை பதிவுசெய்யவுள்ளனர்.

எனினும் தீர்க்கமான மாநிலங்களில் வெர்ஜினியா மாநிலத்திலேயே வாக்கு பதிவுகள் முன் கூட்டியே நிறைவடையவுள்ளது. எனவே இம் மாநிலத்தின் முடிவுகள் முன்கூட்டியே கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

இதில் குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரொம்னிக்கு தீர்க்கமாக அமையவுள்ள வடக்கு கரோலினா மற்றும் ஒஹியோ மாநில வாக்கு பதிவுகள் இரவு 7.30க்கு முடிவடையவுள்ளது.

குறிப்பாக ஒஹியோ மாநிலம் ரொம்னியின் தலையெழுத்தை மாற்றும் மாநிலமாக அமையவுள்ளது. ஒஹியோவை வெல்லாமல் எந்த குடியரசு கட்சி வேட்பாளரும் வெள்ளை மாளிகை சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அமெரிக்க தேர்தல் முறையில் ஒவ்வொரு பிரஜைக்கும் முன்கூட்டியே தனது வாக்கை பதிவுசெய்துகொள்ள வாய்ப்பு உள்ளது. இதன்படி இறுதிக்கட்ட வாக்களிப்புக்கு முன்னரே அமெரிக்காவின் 30 வீதமானோர் ஏற்கனவே தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதில் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் ஏற்கனவே தனது வாக்கை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமைக்கு அடுத்துவரும் முதலாவது செவ்வாய்க்கிழமை நடைபெற வேண்டும் என அந்நாட்டு அரசியல் அமைப்பிலேயே எழுதப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் ஆதரவு மட்டும் போதாது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற மக்கள் செல்வாக்கை பெற்றால் மட்டும் போதாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் சபை வாக்குகள் உள்ளன.

இதன்படி மொத்தமுள்ள 50 மாநிலங்களிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனித்தனியாக தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை மக்கள் வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கே அந்த மாநிலத்தின் தேர்தல் சபை வாக்குகள் அனைத்தும் வழங்கப்படும்.

இவ்வாறு அந்நாட்டு அரசியல் அமைப்பின்படி பிரதிநிதிகள் சபைக்கு 435 பேரும், செனட் சபைக்கு 100 பேரும், வொஷிங்டன் பிரதிநிதிகள் மூன்று பேருமாக 538 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. இதில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறுபவர் ஜனாதிபதியாவார்.

தேர்தல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் டிசம்பர் மாதம் கூடி புதிய ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் தேர்ந்தெடுப்பார்கள். இந்த முடிவுகள் ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்பார்.

எனினும் இடம்முறை தேர்தலில் இரு வேட்பாளர்களும் சரிசமமான ஆதரவை பெற்றுவரும் நிலையில் தேர்தல் சபையில் பெரும்பான்மையான 270 வாக்குகளை பெறுவதில் இழுபறி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அல்கோர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை விட கூடுதலாக மக்கள் ஆதரவை பெற்றிருந்தார். ஆனால் புளோரிடா மாநிலத்தில் ஜனாதிபதியை தேர்வு செய்யும் சபை உறுப்பினர்களிடம் குறைவான வாக்குகளை பெற்றார். அதனால் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஜனாதிபதி யார் என்பதை அறிவிப்பதில் கால தாமதம் 2|@pகருத்துக் கணிப்புகள்

என்ன சொல்கிறது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. இதில் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மிட் ரொம்னியை விடவும் பராக் ஒபாமா தெளிவாக முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போதைய றிலையில் இருவரும் சரிசமமான ஆதரவை பெற்றுள்ளனர்.

ரியல்கினியா பொலிடிக்ஸ் என்ற நிறுவனத்தின் அண்மைய கணிப்பில் ரொம்னியை விட ஒபாமா ஒரு சதவீதமே முந்தியுள்ளார். ‘சி. என். என். போல்’ நடத்திய கணிப்பில் ஒபாமாவுக்கு 48 வீத சதவீதமும் ரொம்னிக்கு 47 சதவீதமும் தரப்பட்டுள்ளது.

அதேசமயம் பொக்ஸ் நியூஸ் வெளியிட்ட கணிப்பில் ரொம்னிக்கு 45 சதவீதமும், ஒபாமாவுக்கு 44 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. வொஷிங்டன் போஸ்ட் ஏ. பி. சி. யின் கருத்து கணிப்பில் இருவரும் 48 சதவீத வாக்குகளை பெற்று சம பலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அண்மையில் அமெரிக்காவைத் தாக்கிய சான்டி புயலால் பல மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலர் வீடுகளை இழந்துள்ளதோடு 40 இலட்சம் பேர் மின்சாரம் இன்றி உள்ளனர். இந்த புயல் அமெரிக்காவின் 15 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் மந்தம் ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி அவசர நிலையை சரிவர கையாண்டதாகவும் கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் சான்டி புயலும் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

எனினும் வெள்ளையினர், முதியோர் மற்றும் கிறிஸ்தவ மதப் பிரிவினரிடையில் ரொம்னிக்கு தொடர்ந்து அதிக ஆதரவு காணப்படுவதாகவும், பெண்கள், வெள்ளையரல்லாதோர், இளைஞர்களிடையில் ஒபாமாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மூலம் அந்நாடு கடைப்பிடித்து வரும் வெளிநாட்டு கொள்கைகளில் அதிக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அண்மையில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான விவாதத்திலும் இருவரும் பாரிய அளவில் முரண்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-தினகரன்

Published by

Leave a comment